மகாராஷ்டிராவில் 236 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை வேகமான காற்றை எதிர்கொள்ள முடியாமல் தகர்ந்து விழுந்து உள்ளது. சிவாஜி சிலையை நிறுவுவதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர், மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா போன்றவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதற்கு அடிப்படையான காரணம் அவர் மாவீரர் என்பது மட்டுமல்ல.
சூத்திர குலத்தில் பிறந்த அவர் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடுவதற்கு பதில் பார்ப்பனியத்துடன் சமரசமாக சென்றது மட்டுமின்றி, ’பார்ப்பனியம்’ என்ற பார்ப்பன கும்பலின் சித்தாந்தம்தான் மன்னர்களுக்கு அரசாட்சி செய்வதற்கு துணை புரியும் என்பதை தனது செயல்பாடுகளின் மூலம் நிரூபித்த பார்ப்பன அடிமை சிவாஜி என்பதுதான்.
மராட்டியத்தின் போன்ஸ்லே வம்சத்தைச் சார்ந்த சூத்திர மன்னனான சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், பிற மன்னர்களுக்கு எதிராகவும், துணிச்சலான போர் நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெற்ற சத்ரபதியாக புகழப்படுகிறார்..
1674 ஆம் ஆண்டு மராட்டிய பேரரசு உருவாக்கப்பட்ட போது அவரைப் பற்றி ‘துணிச்சலான போராளிகளின் வாரிசு’ என்றும், ’96 மராட்டா குலங்களின் வழித்தோன்றலாக’ வந்தடைந்துள்ளார் என்றும் புகழ் பாடுகின்றனர். சிவாஜி தனது வெற்றிகளின் மூலம் பல்வேறு மன்னர்களை அடக்கி ஒடுக்கினாலும், அவர் தனக்கு முடிசூட்டிக் கொள்வதற்கு மராட்டியத்தின் பார்ப்பனர்களை அழைத்து முடி சூட்டு விழா நடத்துவதற்கு கூறினார் என்பதும், அவர்கள் மறுத்தவுடன் காசியில் இருந்து காக பட்டர் என்ற பார்ப்பனரை வரவழைத்து முடிசூட்டி கொண்டார் என்பதும் வரலாற்று நிகழ்வுகள் ஆகும்.
சிவாஜி முடிசூடிக்கொள்ள விரும்பியது ஏன்?
”சிவாஜி முடிசூடாமல் இருப்பதன் நடைமுறை சிக்கல்களை சிவாஜியும் அவரது அமைச்சர்களும் அவர் நீண்ட காலமாகவே உணர்ந்திருந்தனர். சிவாஜி, பல பகுதிகளைக் கைப்பற்றியதுடன் ஏராளமான செல்வங்களைச் சேகரித்திருந்தார் என்பது உண்மை. அவருக்கு ஒரு வலிமையான தரைப்படையும் கடற்படையும் இருந்தது. மேலும் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டை போலவே மனிதர்களது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தி அவருக்கிருந்தது. ஆனால் கோட்பாட்டளவில் அல்லது முகலாயப் பேரரசரை பொறுத்தவரை அவர் வெறும் நிலக்கிழார் மட்டுமே. எந்தவொரு அரசரடனுமான சரிசமமான அரசியல் அங்கீகாரத்தை அவரால் பெற முடியவில்லை.
முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற இந்த இலட்சியத்தை அடைவதற்கு ஒன்று தடையாக இருந்தது. பண்டைய இந்து வேதங்களின்படி, சத்திரிய சாதியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சட்டப்பூர்வமாக அரசராக முடிசூட்டப்பட்டு இந்து சடங்குகளின் மரியாதைக்கு உரிமை கோர முடியும். போன்ஸலேக்கள் சத்திரியர்களோ, அல்லது வேறு இரட்டை பிறப்பு கொண்ட சாதியினரோ அல்ல மாறாக வெறும் உழவர்கள் தான். சிவாஜியின் கொள்ளு தாத்தாவும் அப்படியான ஒருவராகதான் இன்னமும் கருதப்படுகிறார். ஒரு சூத்திரன் எப்படி சத்திரியனுக்கான சடங்குகளுக்கு ஆசைப்பட முடியும்? சிவாஜி ஒரு சத்திரியன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்த முடியும்.” (ஜதுனாத் சர்க்காரின், சிவாஜியின் வீடு நூலிலிருந்து…)
நாடு முழுவதும் பல்வேறு வெற்றிகளை குவித்த சிவாஜி தனக்கு முடி சூட்டாமல் மறுத்த பார்ப்பனர்களின் தலையை கொய்து அவர்களின் கொட்டத்தை அடக்காமல் அவர்களுக்கு அடிபணிந்து வேறொரு இடத்தில் இருந்து பார்ப்பனர்களை வரவழைத்து முடி சூட்டிக் கொண்டதும், ’ச்’ நீங்கி சத்ரியனாக மாறி தான் பேரரசனாக பதவி ஏற்பதற்கு பொருத்தமாக, யாகத்தை நடத்தி பதவி ஏற்றதும் பார்ப்பனியத்தை பாதுகாக்க தான்.
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட விரும்பாமல் சத்திரியனாக மாறிய சிவாஜியும், சத்திரிய மன்னர்களும் எந்த விதமான நிபந்தனையும் இன்றி அடிபணிந்து கிடந்தனர் என்பதற்கு சிவாஜியின் முடி சூட்டு சம்பவம் ஒரு முக்கிய உதாரணம்.
அதுபோல சிவாஜியின் ஆட்சியில் ’ஹைதவ தர்மோதர்கா’ என்ற இந்துக்களின் காவலன் என்ற பட்டத்தையும் சிவாஜி பெற்றதன் காரணத்தினால் தான் சிவாஜி சிலையை ஒரு குறியீடாக ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கான குறியீடாக பயன்படுத்துகிறார்கள் ஆர்எஸ்எஸ் பாஜகவினர்.
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் சத்ரபதி சிவாஜியிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக நாளை (செப்டம்பர் 1) மும்பையில் உள்ள இந்தியா கேட் அருகே இருக்கும் சிவாஜி சிலை அருகில் போராட்டம் நடத்துவதாகவும் பேரணியாகச் செல்வதாகவும் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
சத்ரபதி சிவாஜி ஒரு மன்னர் மட்டுமல்ல, அவர் வணங்கத்தக்க ஒருவர். சத்ரபதி சிவாஜியின் காலடியில் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன்” என்று பாசிச மோடி அடிபணிந்துள்ளதாக கோடி மீடியாக்களும், பார்ப்பனக் கும்பலும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
சிவாஜியின் சிலை நிறுவப்பட்டதன் நோக்கம், ”சிவாஜியின் மராட்டிய கடற்படைக்கும் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுக்கும் மரியாதை செலுத்துவதாகும்” என்று சனாதனத்தை பாதுகாக்கும் தனது உண்மையான நோக்கத்தை ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் மறைக்கலாம். ஆனால் நாம் வேடிக்கை பார்க்கக் கூடாது.
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை முன்வைத்து சாதி, மத பேதமற்று வாழ்ந்த பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று வகை பிரித்து காட்டிய திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் 132 அடி சிலை அமைத்துள்ளார் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதி.
ஆண்டுதோறும் வீசும் கொடூரமான கடல் காற்று, பல்வேறு புயல்கள், சுனாமிகளை எதிர்கொண்டு நிற்கிறது திருவள்ளுவர் சிலை. அதுபோல ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்துவதற்கு தமிழகத்தை அடித்தளமாகக் கொண்டு எழுந்து நிற்போம்.
- மருது பாண்டியன்.