காமராஜர், எளிமையின் சிகரம் ‘,  கடைசி காலத்தில் சொந்த வீடுகூட இல்லாமல் இறந்தார். அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டு என்றெல்லாம் புகழப்படுபவர், குளிர்சாதன பெட்டி பயன்படுத்தியது தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

குறிப்பிட்ட அந்த பேச்சில் எதிர்கட்சித் தலைவராக இருப்பினும் காமராஜருக்கு கருணாநிதி குளிர் சாதன பெட்டி ஏற்பாடு செய்து கொடுத்தது பற்றி பேசுகிறார். அதையும்  காமராஜர் உடல்நிலைக்கு குளிர் சாதன பெட்டி அவசியப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டே பேசுகிறார்.

உடனே காமராஜர் எளிமையானவர் இல்லை என திருச்சி சிவா அவதூறு செய்ததாக பரப்பப்படுகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை திருச்சி சிவா பேசும் காணொளியைக் காணும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இருந்தும்  பிரச்சினை ஊதி பெருக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உட்பட பல காங்கிரஸ்காரர்கள் கொந்தளிக்கிறார்கள்.இந்த பேச்சை வைத்தாவது திமுக கூட்டணி உடைய வேண்டும் என சுமந்த் ராமன் உள்ளிட்ட பல சங்கிகள் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் கனவு பலிப்பதாக தெரியவில்லை என்பது வேறு கதை.

அதே சமயம், இந்த விஷயத்தில் பரிசீலிக்கப்பட வேண்டிய இரண்டு பிரச்சினைகள் உள்ளது. ஒன்று, தற்கால பிரச்சினை – சமூக ஊடகங்கள் உருவாக்கும் உடனடி விவாத குமிழிகள்; இரண்டு, நீண்ட கால பிரச்சினை- எளிமை பற்றி மிகைப்படுத்தப்பட்ட தவறான கண்ணோட்டம்.

காமராஜர் எளிமையை எவ்வாறு மதிப்பிடுவது?

முதலில் எளிமை பற்றிய பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். நல்ல அரசியல் தலைவர்களுக்கான மதிப்பீட்டில் எளிமைக்கு முக்கிய பங்குண்டு. ஏன் இது அவசியமாகிறது எனில் முதலாளித்துவ வர்க்கம் ‘அனைவரும் சமம்’ என்ற கருத்தாக்கத்தைக் கொண்டே  தனது ஆட்சிக்கான நியாய உரிமை கோரியது. முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புகளுக்கு இந்த பிரச்சினை இல்லை. அவை வெளிப்படையாக ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துபவை. ஆண்டையும் அடிமையும் சமமல்ல; பண்ணையாருக்கு இருக்கும் உரிமைகள் பண்ணையாட்களுக்கு இல்லை. இவை வெளிப்படையாக இருந்தவை. போலி வேடங்கள் தேவையில்லை. ஆனால், முதலாளித்துவத்திற்கு  அப்படி இல்லை. அதன் அடித்தளமாக சொல்லப்படும் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” ஏற்றத்தாழ்வை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், முதலாளித்துவ சமுதாயத்தின் உள்ளார்ந்த இயல்பே செல்வத்தைத் குவித்துக் கொள்ளும் முதலாளிக்கும் உழைப்பை விற்று வாழும் தொழிலாளிக்குமான முரண்பாடாக உள்ளது. குறிப்பாக, இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் இந்த சமூக அமைப்பின் மீதான கோபத்தை அதிகரிக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள போக்கு. அதை திசைதிருப்ப இனவாத, மதவாத, பாசிச முறைகளை கையாள்கின்றனர். அதேபோல் தங்கள் மக்களுக்கு நெருக்கமானவர்களாக, ஏழை பங்காளர்களாக காட்டிக்கொள்ளும் வழிமுறையையும் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் செய்கின்றனர்.

இந்தியாவில் சமூக அமைப்பு அரை நிலப்பிரபுத்துவ-அரை காலனியாக உள்ள போதே அதன் ஆட்சி வடிவம் பிரிட்டிஷ் அரசு திணித்த முதலாளித்துவ வடிவத்தைக் கொண்டுள்ளது. அதிகார மாற்றத்திற்குப் பிறகு மக்களாட்சி என்ற தோற்றத்தை உருவாக்க எளிமையானவர் எனப் பெயர் பெற்றவர்கள் தேவைப்பட்டார்கள்.

இதன் காரணமாகவே  பணக்காரர்கள், பண்ணையார்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை எளிமையாக நடந்து கொள்வதாக காட்ட முயன்றனர், முயல்கின்றனர். சிலர் உண்மையாக, பலர் போலியாக. காலனியாதிக்க காலகட்டத்தில் மக்களைத் திரட்ட காந்தி அரை நிர்வாண ஆடைக்கு வந்ததையும் இப்படியே புரிந்துகொள்ள வேண்டும். அவர் வழிவந்த காமராஜரும் அத்தகைய எளிமையையே கடைபிடித்தார். ஆனால், சமூக அமைப்பில் பின்தங்கிய நிலையை எதிர்த்து சமத்துவத்தைக் கோரிய அம்பேத்கர் கோட் சூட் அணிவதை வழக்கமாக்கி ஆளும் வர்க்க ‘எளிமை’யைக் கேள்விக்குள்ளாக்கினார் கோட் சூட்  போட்டதாலேயே சமூக சீர்திருத்தத்துக்கு அவர் ஆற்றிய பங்கை குறைத்து மதிப்பிட முடியுமா?

எளிமை குறித்து பேசும்போது கம்யூனிஸ்ட்கள் பற்றி பேசுவது அவசியமாகிறது. இதில் முழு நேர ஊழியர்களாக இருப்பவர்கள் எளிமையாக இருப்பது அவர்களின் தேர்வு அல்ல; தனது வாழ்க்கை தேவைகளுக்குக் கட்சியை சார்ந்திருப்பதன் காரணமாக அது தவிர்க்க முடியாதது. அதையும் தாண்டி வசதிகளை எதிர்பார்த்தால் நீண்ட காலத்திற்கு முழு நேர ஊழியர்களாக இருக்க முடியாது. இதைப் பார்க்கும் மற்ற தோழர்களும் தங்கள் வாழ்க்கை முறையை வசதி வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே பொருளீட்டுவதற்கான உழைப்பைக் குறைத்துக் கொண்டு புரட்சிகர பணியில் ஈடுபட முடியும்.

காமராஜர் கம்யூனிஸ்ட் அல்ல, வாய்ப்புகள் இருந்தும் காந்திய வழியில்  எளிமையைப் பின்பற்றியவர். காந்தி அணிந்த ஆடை எளிமையாக இருந்தது. ஆனால், அவர் தங்க பயன்படுத்தியது பணக்கார பிர்லாவின் இடம். அவருடைய அரசியல் பிர்லா உள்ளிட்ட ஆளும் வர்க்க சார்புடையது. காமராஜர் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தினார் என்பதை கூறுவது அவர் பற்றி ஏற்படுத்தியுள்ள எளிமையானவர் எனும் பிம்பம் உடைந்துவிடும் எனப் பதறுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். அவரது அரசியலை முதன்மைப்படுத்தினால் கேள்விகள் எழும் என்பதால் எளிமை பிம்பத்தை வைத்து கோட்டை கட்டியதில் வந்த பிரச்சினை இது.

காமராஜர் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தியதில் என்ன தவறு?
பெரு முதலாளி பிர்லாவின் வீட்டில் தங்கியிருந்த காந்தி

மேலும், தனிச் சொத்துடைமை உள்ளவரை எளிமையானவர்- நல்லவர்  என்ற அரசியல் சொல்லாடல், ஊழல் ஒழிப்பு அரசியல் முழக்கத்தைப் போலவே மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அவை எளிதில் அதன்பின்னர் இருக்கும் அரசியல், வர்க்க சார்பை மறைத்துக் கொள்ளும். நாம் முதன்மையாக பார்க்க வேண்டியது ஒருவரது அரசியல் மக்கள் நலனுக்கானதா என்பதையே.

எடுத்துக்காட்டாக, ஓடிசாவைச்  சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்  பயங்கரவாதி  சாரங்கிக்கூட தெருக் குழாயில் குளிக்கிறார், மிதிவண்டியில் செல்கிறார், எளிமையானவர் என ஊடகங்கள் ஒளிவட்டம் கொடுத்தன. அவன் பின்னணியோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் குடும்பத்தைக் படுகொலை செய்தவன். இப்போது எதை முதன்மையாக பார்ப்பது, எளிமையான வாழ்க்கையையா? கொலைகார அரசியலையா?

நாம் குளிர்சாதன பெட்டி பயன்படுத்துவது எளிமையா? இல்லையா? விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் 10 லட்சத்துக்கு கோட் அணியும் மோடியும் உடல்முழுவதும் தங்க நகை அணிந்து நடமாடும் நகைக்கடையாகவே காட்சியளித்த ஜெயாவும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள்.

படிக்க: மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!

மக்கள் நலன் சார்ந்து இயங்கும் எந்த தலைவருக்கும் எளிமையாக வாழ்தல் எனும் பண்பு அவசியம். அதே  சமயம், மனித வாழ்க்கையை எளிதாக்கவும், வேலைச்சுமையை குறைக்கவும் பல்வேறு சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. உடல்நிலை சார்ந்தும், தேவை சார்ந்தும் அத்தகைய சாதனங்கள் பயன்படுத்துவதை மறுப்பதும், பயன்படுத்துவதை குறைகூறுவதும்  வறட்டுத்தனமன்றி வேறல்ல. பயன்படுத்துவது ஆடம்பரமுமல்ல. இந்த புரிதலில் இருந்து எளிமையைப் பரிசீலிப்போம்.

இரண்டாம் பிரச்சினை, சமூக ஊடகங்கள் உருவாக்கும்  உடனடி விவாத குமிழிகள் என்ற பிரச்சினைக்கு வருவோம். எந்த  செய்தியையும் முழுமையாக காணாமல் Thumbnail பார்த்து கருத்து சொல்லும் நோய். ஒரிரு பரபரப்பாக பேசப்படும் பிரச்சினைக்கு பரிசீலனை இல்லாமல் அவசரமாக கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம். அது சமூக ஊடகங்களில் மேம்போக்காக மேய்பவர்கள் தொடங்கி அரசியல் கட்சியினர் வரை பிடித்தாட்டுகிறது. இந்த குமிழி விவாதம் உண்மை வெளிவந்தவுடன் தடம் தெரியாமல் மறைந்துவிடும். அந்த உண்மை பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த குமிழி தோன்றியிருக்கும்.

காமராஜர் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தியதில் என்ன தவறு?
சமூக ஊடகங்கள் உருவாக்கும்  உடனடி விவாத குமிழிகள்

எடுத்துக்காட்டாக, சிவகங்கை, திருப்புவனத்தில் அஜித்குமார் எனும்  இளைஞர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த மறுநாள் “அந்த இளைஞர் மாரடைப்பால் இறந்தார்” என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறியதாக செய்தி பதாகை பரவியது‌. உடனே மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பெ.சண்முகம் அதனை கண்டித்து அறிக்கை விட்டார். ஸ்டாலின் எங்கு, எப்போது கூறினார் என்ற செய்தியையெல்லாம் அவர் தேடவில்லை. இது அந்த பானையின் ஒரு சோறு மட்டுமே. செய்தி ஊடகங்களே பல செய்திகளை எந்த குறுக்கு சோதனையும் இன்றி பதிவிடுவதைப் பார்த்து வருகிறோம்.

இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க ஒரே வழி, எந்த ஒரு செய்தியையும் முழுமையாக பார்ப்பதும் அதன்‌ பின்னுள்ள அரசியலை ஆய்ந்தறிவதுமேயாகும். எளிமை, ஊழல் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆடு மாடு வளர்ப்பு, முருக பக்தர்கள் மாநாடு என முழக்கங்கள் எந்த மூடுதிரை அணிந்து வந்ததாலும் அதன் வர்க்க சார்பை, அரசியல் சார்பை திரை கிழித்து காண்போம்‌. இது இன்றைய இணைய ஊடக காலத்தின் இன்றியமையா தேவை.

  • திருமுருகன்

1 COMMENT

  1. நல்ல தருணத்தில் சரியான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. காமராசர் குறித்து எவ்வித அவதூறு கருத்தும் பரப்பாத அதே நேரத்தில் உண்மையை எடுத்து விளம்பிய திருச்சி சிவா மீது திமுக எதிர்ப்பு சக்திகளான பாஜக அதிமுக கூட்டம் உளறி கொட்டுவது தனியே இருக்கட்டும். ஆனால் திமுகவில் அங்க வைக்கும் காங்கிரசாரே எவ்வித புரிதலும் இன்றி கரித்துக் கொட்டுவதும், திமுகவிற்கு எதிரான உண்மைக்கு புறம்பான எது வந்தாலும் அதனை ஊதிப் பெருக்கும் பிழைப்புவாத ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பேடித் தனமான கருத்தியலை மக்கள் முன் பரப்புவது அவமானம்! மானக்கேடு! அவலம்! இதனை கட்டுரையாளர் தோளுரித்துக் காண்பித்து
    மக்கள் அனைவரும் ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க… உண்மையை ஆழமாக பரிசீலிக்காமல் எதனையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது; வினையாற்றக்கூடாது என்பதனை கட்டுரையாளர் நன்றாகவே தெளிவுபடுத்தி
    உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here