இந்தியாவை அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அடிமை நாடாக மாற்றும் வகையில் மறுகாலனியாக்கத்தை தீவிரப்படுத்தி வரும் ஆர்எஸ்எஸ் பாஜக அவ்வப்போது தேசபக்த வேஷத்தை போடுவது அருவருப்பான ஒன்றாக மாறியுள்ளது.
அரசியல், பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இந்த ஆர்எஸ்எஸ் பாஜகவின் கொள்கைகள் தோல்வியடையும்போது அவர்கள் கையில் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் தேசபக்தியாகும்.
ஒன்று அண்டை நாடுகளான பாகிஸ்தான் போன்றவை இந்தியாவிற்குள் புகுந்து சதி செய்து விட்டதாகவும், இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் பல்வேறு செயல்களை செய்து விட்டதாகவும் கூச்சல் போடுவார்கள் அல்லது எல்லைப்புறங்களில் இந்திய அரசு உருவாக்கியுள்ள எல்லைகளை தாண்டி பாக் ஆதரவு தீவிரவாதிகள் உள்ளே புகுந்து விட்டார்கள், ஊடுருவி விட்டார்கள் என்று பரபரப்பாக செய்தியை வெளியிட்டு தனது தேசபக்தியை காட்டிக் கொள்வார்கள்.
இது போன்ற நடவடிக்கைகள் எதுவும் செய்ய முடியாத காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களை பயன்படுத்தி இந்திய ராணுவத்தை கொண்டு வானங்களில் வட்டமிடுவதும், சாகசங்களை செய்வதும் என்ற முறையில் தேசபக்தியை ஊட்டுவார்கள்.
அதே சமயத்தில் சமீப காலமாக சீனா, இந்திய சீன எல்லைப் பகுதிக்குள் குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் ஊடுருவியுள்ளது; தனது முகாம்களை அமைத்துள்ளது என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்த பின்னரும் கூட இன்னமும் சீனாவுக்கு எதிரான போர்வெறி ஒன்றை உருவாக்கி தனது தேசபக்தியை காட்ட முயற்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த லட்சணத்தில் சென்ற ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய முதலமைச்சராகவும், அடுத்த பிரதமராக கனவு கண்டு வரும் பாசிச சன்னியாசியான திருவாளர் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசியுள்ளது குறித்து செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
“நாட்டைவிட எதுவும் உயர்ந்ததல்ல. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் தான், நாட்டுக்கு எழுச்சி கிடைக்கும். நாம் பிளவுபட்டால், வீழ்வோம். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் என்ன நடந்தது என்பதை கவனிக்க வேண்டும். அதுபோன்ற தவறு நடக்கக் கூடாது” என, யோகி ஆதித்யநாத் அப்போது பேசினாராம். இந்த தேசபக்திப் பேச்சை சிலாகித்து ஆர்எஸ்எஸ் சாமியாடியுள்ளது.
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25 அன்று தொடங்கியது, அதில் பங்கேற்பாளர்கள் சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கொடூரமான சுரண்டல் பேர்வழியான டாடா மறைவும் –சமூக ஊடகங்களின் ஒப்பாரியும்!
சங்கத்தின் அகில இந்திய இணை ஊக்குவிப்புத் தலைவர் நரேந்திர தாக்கூர் கூறுகையில், ”இரண்டு நாள் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் 100-வது ஆண்டை எட்டப்போகும் 2025 ஆம் ஆண்டு விஜயதசமிக்கு வழிவகுக்கும் ஆண்டிற்கான திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்படும்.
சமூக நல்லிணக்கம், குடும்ப அறிவொளி, தூய்மையான சூழல் போன்ற செய்திகளை சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆண்டு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான சாலை வரைபடம் குறித்தும் விவாதிக்கப்படும், நாங்கள் அனைத்து ‘மண்டல்’களையும் (முதன்மை நிறுவன அலகுகள்) சென்றடைய முயற்சிக்கிறோம். இக்கூட்டத்தில் இது தொடர்பாக செயல்திட்டம் தயாரிக்கப்படும்” என்று தாக்கூர் பேசியுள்ளார். இத்துடன் அவர்களின் உரை வீச்சு நிற்கவில்லை.
இந்த மாநாட்டில் பங்கேற்ற, அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே கூறியதாவது: “நாம் பிளவுபட்டால், வீழ்வோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியது சரியான கருத்தாகும். மதம், ஜாதி, கொள்கைகளின் அடிப்படையில், ஹிந்துக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மொழி, மதம், மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று நாம் பிளவுபட்டால், வீழ்வோம். ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே, ஹிந்து மதம் நிலையாக இருக்கும். ஹிந்துக்களிடையே ஒற்றுமை தேவை.”ஏன்றும் எகிறிக் குதித்துள்ளார்.
நூற்றாண்டு காணும் நிலையிலும், நாட்டுக்கு வேண்டாத அமைப்புதான் ஆர்எஸ்எஸ்!
பார்ப்பன கடவுளர்களான ராமன், கிருஷ்ணன் போன்றவர்கள் தனது அவதார லீலைகளில் சனாதன தர்மத்தையும், நான்கு வர்ண பாகுபாட்டையும் கடைப்பிடித்து வந்தார்கள் என்பதை ராமாயணமும், மகாபாரதமும் முன்வைக்கிறது என்பது நாடறிந்த உண்மை. இந்த உண்மையை டாக்டர் அம்பேத்கர் உட்பட பல தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.
’சதுர் வர்ணம், மயா சிருஷ்டம்’ என்பது தான் பார்ப்பன {இந்து} மதத்தின் கோட்பாடு: நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கொக்கரிக்கின்ற கிருஷ்ணன் மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம் என்று கூறிக் கொள்கின்றனர்.
பார்ப்பன (இந்து) மதத்தின் கருத்தியல்களை முன் வைத்து, வைசியர், சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் என்று பெரும்பான்மை மக்களை பிளவுபடுத்தி இன்று வரை சாதி ரீதியாக மேலாதிக்கம் செய்து வரும் பார்ப்பனக் கும்பல் யாரோ இந்து மதத்திற்குள் பிரிவினையை தூண்டுவதாகவும் வேறுபாட்டை விதைத்து விடுவதாகவும் நாடகமாடுவது கேலிக் கூத்தானது.
இந்து-இந்தி-இந்தியா என்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை கட்டியமைப்பதற்கு சபதம் எடுத்துள்ள ஆர்எஸ்எஸ் பாஜக உண்மைகளை மறைத்து ஒற்றுமை நாடகமாடுவதும், அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு ஒளிவட்டம் அமைத்துக் கொடுப்பதும் கேடுகெட்ட நடவடிக்கைகளாகும்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் இந்திய தேசங்கடந்த தரகு முதலாளி ரத்தன் டாடாவுக்கு மட்டுமின்றி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, சிபிஐ-எம் தலைவர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் மத்திய அமைச்சர் கே. நட்வர் சிங், பாஜக தலைவர் சுஷில் மோடி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல். ராம்தாஸ், மற்றும் ஊடக முதலாளி ராமோஜி ராவ் மற்றும் பலருக்கும் அஞ்சலி செலுத்தியது தான் வேடிக்கையான நிகழ்ச்சியாகும்.
ஒருபுறம் கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்டுவோம் என்று பேசிக்கொண்டே மறுபுறம் இறந்து போன திருத்தல்வாத கம்யூனிச இயக்கத்தின் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்று நாடகமாடுகின்றனர். அதே சமயத்தில் பார்ப்பன (இந்து) மதத்திற்குள் வெளியில் இருந்து யாரோ வேற்றுமைகளை உருவாக்கியதை போல கதையளந்து வருகின்றனர்.
இத்தகைய தேசவெறி, மதவெறியை தூண்டுகின்ற பார்ப்பன பாசிச சக்திகளை எதிர்கொண்டு முறியடிப்பதற்கு பொருத்தமான வழிமுறைகளை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும், இதற்கு எதிராக போராடுகின்ற சக்திகளை பிளவுப்படுத்துகின்ற பார்ப்பன கைக்கூலிகள், இனவாதிகள் மற்றும் சாதிய பிழைப்புவாதிகளை எதிர்த்து முறியடிப்பதும் காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
மாசாணம்.