டந்த அதிமுக ஆட்சியில் ஆறாக ஓடிய சாராயம், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கூட குறையாமல் இலக்கு நிர்ணயித்து படுஜோராக விற்பனை போய்க் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் விசயத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. திமுக அரசு இன்னும் ஒருபடி மேலே சென்று கொண்டிருக்கிறது.

2015-ல் சசிபெருமாளின் மர்ம மரணம்; அதைத்  தொடர்ந்து டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் போராட்டம் ; இவையெல்லாம் அன்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் வேறு வழியின்றி, மதுவிலக்கை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்க காரணமாக இருந்தன. இதில் திமுக- பூரண மதுவிலக்கு, அதிமுக -படிப்படியான மதுவிலக்கு என்று அறிவித்திருந்தன.

அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால், அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா முதலில், 500 கடைகள் மூடுவதாக அறிவித்தார். டாஸ்மாக் கடை நேரமும் குறைக்கப்பட்டது.  ‘குடிமகன்’களால் சாலைகளில் விபத்துகள் அதிகம் ஏற்படுவதால் நெடுஞ்சாலை ஓரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர் பாஜகவின் அடிமையான அதிமுக மதுவிலக்கு பற்றி கண்டு கொள்ளவேயில்லை.

மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 2021-ல் திமுக ஆட்சியமைந்த பின்னர் பலரும் எதிர்பார்த்த ஒன்று மதுவிலக்கு. ஏனென்றால் 2016 தேர்தலில் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி பூரண மதுவிலக்கை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார் என்பதை ஆரம்பத்திலேயே பார்த்திருப்போம். அந்த வாக்குறுதியை ஆட்சியமைத்த பின்னர் திமுக அமல்படுத்தும் என்றே நினைத்தனர். ஆனால் இன்று நிலைமையோ வேறாக உள்ளது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை செயலாளர் முருகானந்தம், “டாஸ்மாக் வருவாய் அடுத்த ஆண்டு ரூ.50,000 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார். இதிலிருந்தே திமுக மதுவிலக்கை அமல்படுத்த போவதில்லை என்பது தெளிவாகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் குறைந்த கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் தெரிகிறது.

திமுக ஆட்சியில், அதிமுகவினரிடம் இருந்த ‘பார்கள் ‘ திமுககாரர்களிடம் சென்றதே மாற்றம். அதுமட்டுமில்லாமல் புதிதாக டாஸ்மாக் பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருமண விழாக்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மதுவுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக திருமண விழாக்களில் மட்டும்அனுமதியை  ரத்து செய்து, அப்படியான அறிவிப்பே விடவில்லை என்று நாடகமாடியது. டாஸ்மாக் ஏடிஎம்களையும் திறந்துள்ளது. இவையெல்லாம் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க செய்த திமுகவின்  முயற்சிகளாக பார்க்கலாம்.

திமுக அரசு!
Tasmac ATM

குடியரசு தினவிழாவில் டாஸ்மாக் விற்பனையை அதிகரித்ததாக கூறி, கரூர் மாவட்டத்தில் இரண்டு மேலாளர்களுக்கு கலெக்டர் கையாலேயே சாதனை விருது வழங்கிய கூத்தும் நடந்தேறியது. இது சர்ச்சையானதால் கொடுத்த விருது திருப்பி வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேலம், மதுரை மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற கூட்டமும் நடந்துள்ளது. இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் கூட நடந்தேறாத அசிங்கங்கள். ஒவ்வொரு பண்டிகை, விடுமுறை நாட்களிலும் இலக்கு வைத்து விற்பனை செய்வதும், அந்த சாதனைகளை    பத்திரிக்கைகளில் கூசாமல் வெளியிடுவதும் தொடர்கிறது.

கடந்த 2021 – 2022 ஆம் ஆண்டு வருவாயான ரூ.36,050 கோடியை விட 8,047 அதிகமாக விற்பனையாகி இந்தாண்டு 44,000 கோடியை எட்டியுள்ளது. இதுவெல்லாம் சாதனையா? ஆம் திமுக அரசு இதனை சாதனையாகவே பார்க்கிறது. டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் 12 மணி என அறிவித்திருந்தாலும், விடியற்காலை முதலே கள்ள விற்பனை நடைபெறுகிறது. இது காவல்நிலையத்திற்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளிலும் நடக்கிறது. காரணம், மேலிடத்தின் உத்தரவால் கண்டும் காணாமல் காவல்துறை செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்: டாஸ்மாக்கை மூடு! பொருளாதாரத்திற்கு மாற்று வழிகளைத் தேடு!

காலையிலேயே குடிக்க ஆரம்பித்தால் எப்படி வேலைக்கு செல்வார்கள்? குடும்பம் தான் எப்படி நடக்கும்? பெரும்பாலும் குடிகாரர்களாக இருப்பது உழைக்கும் வர்க்கம் தான். அன்றாடம் உழைத்தால் தான் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியும் என்ற நிலையில், அதிகாலையிலேயே திமுக அரசு ஊத்திக் கெடுக்கிறது உழைக்கும் வர்க்கத்தை….

போதை என்பது ஒரு குடும்பத்தை மட்டும் அழிக்காது! ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அழித்து விடும்! தான் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலும், தன் நாடு கார்ப்பரேட் கும்பலால் களவாடப்படுவது தெரியாமலும் மூழ்கி இருக்கவே ஊத்தி கெடுக்கிறது அரசு. டாஸ்மாக் சாராயம் மட்டுமல்ல, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் தமிழகத்தில் சகஜமாக புழங்குகிறது. இளைஞர் சமுதாயம் சீரழிந்து போவதில் ஆளும் அரசுகளுக்கு கொஞ்சமும் கவலை இருப்பதாக தெரியவில்லை.

டாஸ்மாக்கை மூடுவது மக்களின் போராட்டங்களால் மட்டுமே முடியும். மாறாக அரசு செய்யும் என்று எதிர்பார்ப்பது வீண். அன்று பூரண மதுவிலக்கை அறிவிக்க காரணம் மக்களின் போராட்டமே முதன்மையானது. இதனை உணர்ந்து மக்கள் களமிறங்கினால் டாஸ்மாக்கை மட்டுமல்ல, உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசையும் வீழ்த்தலாம்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here