உக்ரைன் போர்:
ஏகாதிபத்திய அமெரிக்காரசியாவே
போரை உடனே நிறுத்து!


பகுதி1


அன்பார்ந்த தோழர்களே,

கடந்த 24.02.2022 முதல் உக்ரைன் மீது ரசியா போரை நடத்தி வருகிறது. இந்தப் போர் தொடங்கியது முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இடதுசாரி அமைப்புக்கள், தனிநபர்கள் பல கோணங்களில் கட்டுரைகள் எழுதி வருகின்றனர். இந்தப் போர் தொடர்பாக பல்வேறு நாட்டுத் தலைவர்களும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, மோடி ரசிய அதிபர் புதினுடன் பேசியுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இங்கு வழக்கம் போல், மோடி நினைத்தால் போர் முடிவுக்கு வந்து விடும் என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் மோடியின் மீது ஒளிவட்டம் போட முயல்கிறது சங்கி கும்பல். கடந்த எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்கும், மோடி அரசின் மக்கள் நல திட்டங்கள் யாவும் வெற்று அறிவிப்புக்கள் என அம்பலமாகி, மோடி வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் என்று சந்தி சிரிக்கும் வேளையில், இந்தப் போரையும் மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

மோடி – புதின்

இந்தப் போர் பற்றிய அரசியல் ரீதியிலான பின்புலம் என்ன என்பதைப்பற்றி பல்வேறு முனைகளில் செய்திகள், கட்டுரைகள், தனி நபர் கருத்துக்கள், விவாதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, இந்தப் போருக்கு அமெரிக்காதான் காரணம் என்று கூறி அமெரிக்காவைக் கண்டிப்பதுடன் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரசியாவை மென்மையாக அணுகுவது என ஒரு சாராரும், உக்ரைன் நாட்டை ஆதிக்கம் செய்வதற்காக போர் தொடுத்துள்ள ரசியாவை மட்டும் கண்டிப்பது என ஒரு சாராரும், அமெரிக்க – ரசிய மேல்நிலை வல்லரசுகளுக்கு இடையிலான நாடு பிடிக்கும் போட்டியில் உழைக்கும் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமெரிக்காவையும், ரசியாவையும் எதிர்ப்பது என ஒரு சாராரும் போராடுகின்றனர்.

கட்டுரைகள், போராட்டங்கள், கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். போர் நடவடிக்கைகளைச் சுட்டும் மீம்ஸ், குறு வீடியோக்கள் என சமூக வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவையும் ஏதோ ஒரு வகையில் கருத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

இப்படி பல்வேறு கருத்துக்கள் ஒன்றுகொன்று மோதி வரும் சூழலில் அவற்றை எல்லாம் தாண்டி, ஒரு புரட்சிகர அமைப்பு என்ற அடிப்படையில் நாம் இந்தப் போரை, அதன் அரசியல் மற்றும் வரலாற்று ரீதியிலான பின்னணியில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு இந்தக் கட்டுரை உதவியாக இருக்கும் என கருதுகிறோம்.

அமெரிக்க ஒற்றை துருவ வல்லரசு;

1917 ரசியப் புரட்சிக்குப் பின்னர், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் தோழர் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போன்று, உலகத்தின் வரலாறு கம்யூனிசம் எனும் பூதத்தால் எழுதப்பட்டது. அது வரையில், நிலப்பிரபுத்துவ அடிமைத்தனம், உழைப்புச் சுரண்டல் என ஒடுங்கியிருந்த மனித இனம், உண்மையான விடுதலையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டது. அந்த விடுதலைக் காற்றை சுவாசிக்க ரசியாவைச் சுற்றியிருந்த பல்வேறு நாடுகள், சோசலிசத்தை ஏற்றுக் கொண்டு ரசியாவுடன் தானாகவே இணைத்துக் கொண்டன. அந்த கால கட்டத்தில் சோவியத் ரசிய ஒன்றியம் என்ற ஒன்றுபட்ட நாடு உருவாகியது.

தோழர்கள் லெனின், ஸ்டாலினுக்குப் பிறகு, சோவியத் ரசியா தனது சோசலிச கொள்கைகளைக் கைவிட்டு மெல்ல மெல்ல முதலாளித்துவ கொள்கையை கடைபிடிக்கத் தொடங்கியது. மார்க்சிய -லெனினிய கொள்கைகளை கைவிட்டு திருத்தல்வாத பாதையில், குருச்சேவ் தொடங்கிய வழியில் பிரஷ்நேவ், கார்ப்பசேவும் பயணித்து வந்ததன் விளைவாக 90-களின் துவக்கத்தில் சோவியத் ரசிய ஒன்றியம் உடைந்து போனது.

சோவியத் ஒன்றியத்தில் விருப்பத்துடன் இணைந்திருந்த ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகிய 14 நாடுகள் பிரிந்து தங்களை ’சுதந்திர நாடாக’ அறிவித்துக் கொண்டன. அதுவரை உலக மேலாதிக்க போட்டியில் நடந்து வந்த பனிப்போரில் இருந்து, சோசலிச ரசியா வீழ்ச்சியடைந்த பிறகு, அமெரிக்கா  ஒற்றைத் துருவ வல்லரசாக வளர்ந்தது. உலக மேலாதிக்க வெறியுடன் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் ரசியாவைத் தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலத்தில், சோவியத் ரசியாவின் கம்யூனிச வளர்ச்சிக்குத் தடை போடவும், தனது முதலாளித்துவ பொருளாதார நோக்கங்களுக்காகவும் ஐரோப்பிய நாடுகளை அணிதிரட்டும் நோக்கத்துடன் அமெரிக்காவால் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு – நேட்டோ (NORTH ATLANTIC TREATY ORGANISATION – NATO) என்ற பெயரில் ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கியது.

இந்த நேட்டோ அமைப்பைப் பயன்படுத்தி, இராணுவ ரீதியாக சோவியத் ரசியாவிலிருந்து பிரிந்த நாடுகளை அமெரிக்கா தனது பக்கம் இழுத்து வருகிறது. ரசியாவின் எல்லைப் பகுதி நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், ரசியாவை ராணுவ ரீதியாக அச்சுறுத்துவது, அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை நிலை நாட்டுவது என செயல்பட்டு வருகிறது. தற்போது, இதில் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் உக்ரேனையும் இணைக்க முயற்சிப்பதுதான் தற்போதைய போருக்கான காரணங்களில் பிரதானமானது.

படிக்க:

♦  உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்து!

ரசிய யூனியனில் இருந்து பிரிந்து போன நாடுகள், மத்திய ஆசியாவில், யுரேசியா என்று அழைக்கப்படும் ஐரோப்பிய ரசிய எல்லைப் பகுதியில் இருப்பதால், இவை ரசியாவையும், ஐரோப்பாவையும் தரைவழியாக இணைக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இந்நாடுகளைக் கட்டுப்படுத்தினால் ஆசிய கண்டத்தின் பெரும் பகுதியை தனது ஆளுமையின் கீழ் கொண்டு வர முடியும் என்ற புவிசார் அரசியல் (Geo political) நோக்கத்துடன், அமெரிக்கா அந்நாடுகளை தனது மேலாதிக்கத்தில் கொண்டு வர முயற்சி செய்து பல்வேறு பொருளாதார மற்றும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, மத்திய ஆசியா மற்றும் காகசஸ் பகுதியானது, ரசிய அமெரிக்க போட்டிக்கான களமாக உள்ளது. இந்தப் போட்டிக்கும், முரண்பாட்டுக்கும் குவிமையமாக இருப்பது அப்பகுதியின் எரி எண்ணெய் மற்றும் எரிவாயு வளமாகும். அப்பகுதியின் எரி எண்ணெய் வளம் மட்டுமே 10,000 கோடி பேரல் ஆகும். அமெரிக்க – ஆங்கிலேய கம்பெனிகள் எண்ணெய் வளத்தில் 27%-ஐயும், எரிவாயு வளத்தில் 40%-ஐயும் கட்டுப்படுத்துகின்றன. இந்த எண்ணெய் வளத்தை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்ல ரசியப் பகுதியைத் தவிர்த்து பிற பகுதிகளில் செல்லும் பாகு – திப்லிசி – சேகான் குழாய்ப்பாதை 2002-ல் துவங்கப்பட்டது.

அதே போல் அமெரிக்கா தனது மேலாதிக்க நோக்கில், 1999-ல் தொடங்கப்பட்டு செயலற்றுக் கிடந்த ஒரு பிராந்திய அமைப்பை ஜியார்ஜியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான், மால்டோவா நாடுகளைக் கொண்ட அமைப்பை 2010-ல் மீண்டும் உயிர்ப்பித்து தனது கட்டுப்பாட்டில் இயக்கி வருகிறது அதன் மூலம், அந்நாடுகளில் இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போட்டு, ரசியாவை அதன் அருகிலேயே இருந்து உளவு பார்க்கும் வகையில் இராணுவத் தளம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உதவித் திட்டங்கள் என்ற பெயரில், 2002-ஆம் ஆண்டு மட்டும் மத்திய ஆசியாவிற்கு 90 கோடி டாலர்கள் வழங்கியுள்ளது.

அதே போல், கிர்கிஸ்தானிலும், உஸ்பெகிஸ்தானிலும் விமான தளங்களை அமைத்துள்ளதோடு ரசிய எல்லைக்கு மிக நெருக்கமாக காஸ்பியன் கடலில் ஒரு கப்பற்படைத் தளம் அமைக்க கஜகஸ்தானுக்கு நிதி உதவி செய்துள்ளது. தஜிகிஸ்தானில் மூன்று இராணுவ தளங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளுக்கு இராணுவ தொழில்நுட்ப உதவிகளைச் செய்வதோடு, தொடர்ச்சியாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இராணுவப் பயிற்சியையும் கூட்டாக நடத்தி வருகிறது. “நேட்டோவின் அமைதிக்கான கூட்டு” என்ற பெயரில் இது நடத்தப்படுகிறது. மேலும், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாட்டு இராணுவங்களுக்கு அதிகாரப்பூர்வ பயிற்சியும் அளித்து வருகிறது.

இவ்வாறு மத்திய ஆசியாவில் இருக்கும் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு இராணுவ உதவிகள் செய்து தனது கட்டுப்பாட்டக்குள் கொண்டு வருவதோடு, தனது உலக மேலாதிக்கப் போர்த் தந்திரத்தின் அங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிணைத்துக் கொள்ள அமெரிக்கா முயன்று வருகிறது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் சுயேச்சையான இராணுவ வலிமையை பெற்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கிறது.

பனிப் போரில் இருந்து விலகிய ரசியா அமெரிக்காவின் முயற்சிக்கு துவக்கம் முதலே தனது எதிர்ப்பைக்காட்டி வருகிறது. நேட்டோ நாடுகளை விரிவுபடுத்தி – குறிப்பாக, கிழக்கு அய்ரோப்பாவின் முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இணைத்து தம்மை சுற்றி வளைப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சியை ரசியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமெரிக்கா அந்நாடுகளில் இராணுவ தளங்களை அமைக்குமானால், நேட்டோவின் போர் விமானங்கள் மூன்று நிமிடங்களில் ரசியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை வந்தடையும் அளவுக்கு மிக அருகில் நேட்டோவைக் கொண்டு வந்து விடும்.

உலகம் முழுவதும் ’சுதந்திரத்தை நிலைநாட்ட’ போவதாக கூறிக் கொண்டு அமெரிக்க மேல்நிலை வல்லரசு செய்துள்ள அட்டூழியங்கள் ஏராளம். 19 நூற்றாண்டில் 114 போர்களையும், 20 ஆம் நூற்றாண்டில் இரு உலகப் போர்கள் உள்ளிட்டு 100-க்கணக்கான போர்களையும், 21 நூற்றாண்டில் ஆப்கன், ஈராக், சிரியா உள்ளிட்ட கொடூரமான போர்களையும் நடத்தி பல கோடி மக்களை கொன்று குவித்துள்ள, தற்போதும் கொன்று குவிக்கும் அமெரிக்க மேல்நிலை வல்லரசே உலகின் கொடிய எதிரியாகும். அதன் தலைமையில் இயங்கும் நேட்டோவே இன்றைய உலகின் அச்சுறுத்தலாகும்.

தொடரும்…

ஆசிரியர் குழு
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here