அமெரிக்க – ரசிய வல்லரசுகளின் மேலாதிக்கப் போட்டிக்கு பலியிடப்படும் உக்ரைன் மக்கள்!

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்து

தேதி: 24.02.2022

கண்டன அறிக்கை

மேலாதிக்க வெறியோடு இன்று (24-02-2022) உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரில் இறங்கியுள்ள ரஷ்யாவிற்கு பு.ஜ.தொ.மு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது.

“உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள ரசிய மொழி பேசும் மக்கள் வாழும் சுதந்திர குடியரசுகளான டோனட்ஸ்க் மக்கள் குடியரசு, லுகான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை உக்ரைன் அரசு தாக்க முயற்சிக்கிறது. இதற்காக உக்ரைன் அரசு மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தி போருக்கு தயாரித்து வருகிறது. எனவே, கிழக்கு உக்ரைனில் உள்ள மக்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்கிறோம். மேலும், ரசிய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என மற்ற நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது ஏகாதிபத்திய ரஷ்யா.

1991 டிசம்பர் 25-ல் சோவியத் யூனியன் 15 நாடுகளாக பிரிந்த பிறகு, அமெரிக்கா மட்டுமே உலகின் பலம் வாய்ந்த ஒற்றை துருவ வல்லரசாக மாறியது. தனது ஒற்றை துருவ ஆதிக்கத்தை நிலைநாட்ட நேட்டோ (NATO) அமைப்பு மூலம் உலகில் உள்ள அனைத்து பகுதிகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தனது மேலாதிக்க நோக்கத்திற்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலானவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக போலந்து, லாட்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நேட்டோ (NATO) தன்னுடைய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது. மேலும், தனது போர் படையையும் அந்நாடுகளில் குவித்துள்ளது.

இந்த அடிப்படையில்தான் உக்ரைனையும் தனது ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாகக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியத்திலும், நோட்டோவிலும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு உள்ளடி வேலைகளை செய்து வருகிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு.

ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவின் மீதும், சிதறுண்ட ரஷ்யாவின் பகுதிகள் மீதும் தனக்கு இருக்கும் ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் உக்ரைனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது ரசிய ஏகாதிபத்தியம். யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கும் ரசிய ஏகாதிபத்தியத்திற்குமான போட்டியே இந்தப் போர். இந்த இருவரின் மேலாதிக்க வெறிக்காக உக்ரைன் மக்கள் கொல்லப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. அத்துமீறல், ஆக்கிரமிப்பு போர் மூலம் வளரும் நாடுகளை மறுகாலனியாக்குவது போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

2008 உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஏகாதிபத்திய முதலாளித்துவம் தோற்றுப் போய் முட்டுச் சந்தில் நிற்கிறது. தங்களது தோல்வியை மறைப்பதற்கு ஏகாதிபத்தியங்களுக்கு போர் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் பூமிக்கடியில் கிடக்கும் கனிம வளங்களையும், விண்வெளியில் உள்ள அலைக்கற்றை, பிற கிரகங்களில் உள்ள கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சூறையாட ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல் வெறியுடன் கிளம்பியுள்ளனர். தனது லாபவெறிக்கு சொந்த நாட்டு மக்களை காவு கொடுக்கவும் தயங்குவதில்லை.

குறிப்பாக, அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றால் மக்கள் செத்து மடிவதை தடுக்க முடியாமல் கையறு நிலையில் நிற்பது, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை காக்கத் தவறியது, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றால் அதிபர் பைடன் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இதிலிருந்து மக்களை திசை திருப்பவும், ரசியாவின் இயற்கை எரிவாயு – எண்ணெய் பைப் லைன் திட்டத்தை தடுக்கவும், அமெரிக்காவிற்கு இந்தப் போர் அவசியம். அதுமட்டுமின்றி, பேரழிவு ஆயுதங்களை விற்கும் போர்ப் பொருளாதாரத்தின் மூலம் தனது வாழ்வை தக்க வைத்து கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர் நடப்பதையே விரும்புகிறது; ஊக்குவிக்கிறது.

அதே போல, ரசியாவில் எரிவாயு பைப்லைன் திட்டத்தினை ஐரோப்பா முழுவதும்  கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கவும், அதிபர் புதின் மீதான ஊழல் புகாரை மறைத்து மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை திசைதிருப்பவும், 1990-களில் ஏற்பட்ட சிதைவு, பின்னடைவில் இருந்து மீண்டுவிட்டதை நிரூபிக்கவும், உலக மேலாதிக்கப் போட்டிக்குத் தயார் என அறிவிக்கவும் ரசியாவிற்கு இந்தப் போர் அவசியம்.

அமெரிக்க, ரசிய ஏகாதிபத்தியங்களின் இலாபவெறிக்காகவும், தங்களது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கும் நோக்கத்திற்காகவும், தங்களது தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியை திசை திருப்புவதற்காகவும் நடத்தப்பட்டு வரும் இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ரசியாவின் மேலாதிக்க நோக்கத்திற்காக நடக்கும் இந்த அநீதியான போரை எதிர்த்துப் போராடும் மக்களை பாசிச முறையில் ஒடுக்கி வருகிறது விளாதிமிர் புதின் அரசு.

புதினின் மக்கள் மீதான கைது – ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடு இது போன்ற போர் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் ரசிய – உக்ரைன் மக்கள் பக்கம் நிற்பது உலக மக்கள் அனைவரின் கடமையாகும். எனவே “ரசியாவே மேலாதிக்க வெறியோடு உக்ரைன் மீது நடத்தும் போரை நிறுத்து!” என்பதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்காகவும், மூன்றாம் உலகப் போரின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற நேட்டோ (NATO) படை கலைக்கப்பட வேண்டும் என்பதும், உலக மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்.

இந்திய அரசு அமெரிக்கா, ரசியா ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கத்திற்காக நடத்தப்படும் போரில் அமெரிக்க சார்பு நிலை எடுக்காமல் அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும். நடுநிலை, சமாதானம் என பசப்பாமல் வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்காக நடக்கும் போரை கண்டனம் செய்ய வேண்டும்.

————————–

  • அமெரிக்க – ரசிய வல்லரசுகளின் மேலாதிக்கப் போட்டிக்காக பலியிடப்படும் உக்ரைன் மக்கள்!
  • புதின் – பைடன் இரு பாசிஸ்டுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடிய பேரபாயம்!
  • நேட்டோ போன்ற இராணுவக்கூட்டைப் பயன்படுத்தி உலக மேலாதிக்கத்தை நிறுவ முயலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசே மூன்றாம் உலகப் போரின் ஊற்றுக்கண்!

    இந்திய அரசே,

  • சமாதானம் என மழுப்பாமல் அமெரிக்க – ரசிய போர் வெறியை கண்டனம் செய்!

உழைக்கும் மக்களே,

  • அமெரிக்க – ரசிய உலக மேலாதிக்கத்தையும், போர்வெறியையும் முறியடிப்போம்!
  • போர் அபாயமற்ற, அமைதியான உலகை படைக்க சோசலிசமே மாற்று என வீதியில் இறங்கிப் போராடுவோம்!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு: 94444 42374

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here