யார் இந்து என்பதையும், பட்டியல் சாதிகளையும் வரையறுத்தல்

மதச் சுதந்திரம் வழங்குவதாகப் பிரகடனப்படுத்துவதற்கு அப்பால், அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 ‘இந்து’ நிறுவனங்களின் ‘சமூகநல, சீர்திருத்த’ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க அரசுக்கு வழிகாட்டுகிறது.

இந்து எனும் சொல் ‘சீக்கிய, ஜைன, புத்த மதத்தைப் பின்பற்றுவோரையும் குறிக்கக் கையாளப்படும்’. இந்த இந்துத் தொகுப்பானது முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் தவிர்க்கும். பேராசிரியர் ப்ரீத்தம் சிங் தனது ஆய்வுக் கட்டுரையில், இந்தச் சட்டப்பிரிவின் ‘மிக முக்கியமான கரிசனம்’, ‘தலித்களை இந்துத் தொகுப்பிலிருந்து வெளியேறவிடாமல் தடுப்பதே’ என்று வாதிடுகிறார்.

பட்டியல் சாதிகளுக்கான வரையறையைக் கவனிக்கையில் இந்த நிலைப்பாடு மேலும் தெளிவாக விளங்கும். இந்த அமைப்புமுறையானது இந்துக்களிடம் இறுக்கமான, பாரபட்சம் மிகுந்த படிநிலையைக் கூர்மைப்படுத்துகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் ஆணை 1950 கூறுகிறது: ”இந்து மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தைத் தழுவும் எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்படமாட்டார்.”

முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ‘இந்து’ அல்லது ‘இந்திய’ வகைமைக்கு அப்பால் கருதப்படுகிறார்கள். சீக்கியமும் பெளத்தமும் அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படாதது முரண்நகையான ஒன்று. ஏனெனில், அவை தோன்றிய காலத்தில் குறிப்பிடத்தக்க சாதி எதிர்ப்பு இயக்கங்களாய் இருந்துள்ளதோடு இஸ்லாம், கிறிஸ்தவம்போல மானுடச் சமத்துவத்தின் மீது அவை நம்பிக்கை கொள்கின்றன.

பரம்பரை பரம்பரையாக மிகச் சாதாரணமான வேலைகளில் ஈடுபட்டுவந்த நிலமற்ற முஸ்லிம் சாதிகளைச் சார்ந்தோருக்கு உடனடித் தேவையாய் இருந்த ‘தாழ்த்தப்பட்ட’ எனும் சமுதாயப் படிநிலை அந்தஸ்து வழங்கப்படவில்லை. அதேபோல், பொருத்தமான திட்டங்களைக் கொண்டு மத்திய-மாநில அரசுகள் அவர்களுக்கு உதவாதது அவர்களை மேலும் வறுமையில் ஆழ்த்தியது. ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று அவர்களை அடையாளப்படுத்துவது பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் குறுக்கிடும் என்பதாலும் அது போட்டியை அதிகப்படுத்தும் என்பதாலும் இந்த விவகாரம் பெரும்பாலான தலித் செயல்பாட்டாளர்களின் செயல்திட்டத்திலும் இடம்பெறவே இல்லை.

பசுப் பாதுகாப்பு

பசுப் பாதுகாப்பு என்பது சமீப காலமாகப் பல முஸ்லிம்களை கும்பல் கொலை செய்யக் காரணமாக அமைந்துள்ளது. இந்தக் குரூரமான சம்பவங்களுக்கெல்லாம் நீண்டதொரு வரலாறு உண்டு. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிலிருந்து பஞ்சாப் மற்றும் வட இந்திய இந்துக்களிடம் இந்தப் போக்கு வெகுஜன ஏற்பைப் பெற்றது. 1893ல் ஹஜ் பெருநாள் அன்று கிழக்கு உ.பி.யிலும் பிஹாரிலும் கிராமப்புற முஸ்லிம்கள் மீதான முதல் தாக்குதல்கள் அரங்கேறின.

1917ம் ஆண்டு ஹஜ் பெருநாளில் மிகப் பெருமளவில் தாக்குதல்கள் நடந்தன. அப்போது உ.பி.-பிஹார் எல்லையிலுள்ள சாஹாபாத் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இலக்காக்கப்பட்டன. 1920களில் ரத்தம் தோய்ந்த அத்தியாயங்களுள் ஒன்று பக்ரீத் தினத்தன்று அரங்கேறியது. 1946ல் அதே பண்டிகை நாளன்று பிஹாரிலுள்ள சுமார் 2,000 கிராமங்களில் மிகப்பெரிய தாக்குதல்கள் நடந்தன. அதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிரிட்டிஷ் நிர்வாகம் முஸ்லிம்களின் உயிர்களைக் காக்க பல சமயங்களில் முயன்றுள்ளது. எனினும், பசுப் பாதுகாப்பு இயக்கம் அந்த நிர்வாகத்தையே திணறடித்தது. இந்தப் பின்னணியில்தான் அரசியல் சாசனமானது ‘பசுக்களையும் கன்றுகளையும் அறுப்பதைத் தடைசெய்ய’ அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று பிரகடனப்படுத்தியது.

மாட்டுக் கறி உண்ணும் சமூகங்களுக்கு இந்தப் பிரகடனத்தால் ஏற்படவுள்ள பின்விளைவை உணர்ந்து, சட்ட அவையில் உறுப்பினராக இருந்த பல முஸ்லிம்களும் பழங்குடியினரும் அதை எதிர்த்தார்கள். ஆனால், அவர்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பசுப் பாதுகாப்புச் சட்டத்தை ஒரு எம்.பி. முன்மொழிந்தபோது, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பதவி விலகுவதாக எச்சரித்தார். ஆனால் சுவாரஸ்யம் என்னவெனில், பல்வேறு மாநிலச் சட்டமன்றங்கள் அதைச் சட்டமாக்கும்போது அவர் பதவி விலகவில்லை. இந்த விஷயத்தில் நேருவும் இந்து தேசியவாதிகளும் திருப்தியடைந்தனர். பசுவை அறுத்தல் விவகாரத்தில் பிரிட்டிஷ் நிர்வாகம் முஸ்லிம்களின் உரிமைகளைக் காக்க முயன்றது; ஆனால் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளோ முஸ்லிம்களைக் குற்றவாளிக் கூண்டிலேற்றுகின்றன.

இறுதியாக …

எளிதில் ஏமாறக்கூடிய முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடைசெய்ய காங்கிரஸ் இப்போது ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ எனும் முழக்கத்தை எழுப்புகிறது. முஸ்லிம்களுக்கு விரோதமாக பாஜக மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதும், மிக வெளிப்படையாகவே இந்துக் குறியீடுகளை அது பயன்படுத்துவதும் உண்மை. ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களின்போது ‘அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ எனும் இந்த முழக்கத்தால் எந்த அளவுக்குப் பயன் விளையும் என்பது கேள்விக்குறிதான். அதைப் பற்றியெல்லாம் யாரும் தீவிரமாக விவாதிப்பதில்லை.

இந்தியாவில் சட்டப்பூர்வமாக முஸ்லிம்கள் என்ன சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இந்து ராஜ்ஜியம் வந்தால் இழப்பதற்கு? நிர்வாகத்திலும் அரசியலிலும் நமக்கான பங்கு ஏற்கனவே மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது. வக்ஃப் நிலங்களைக் கையகப்படுத்துவது, அல்லது முஸ்லிம்களை குடிமக்களே இல்லை என்று பிரகடனப்படுத்துவது போன்று ஏதேனும் படுதீவிரமான முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சர்வதேச மட்டங்களிலிருந்து கண்டனத்தையும், தேசம் முழுவதும் முஸ்லிம்களின் எதிர்வினையையும் அவை பெற்றுத்தரும்.

அதிகபட்சம் என்ன நடக்கலாம் என்றால், நாம் சில கல்வி உதவித் தொகைத் திட்டங்களையோ, சில சிறுபான்மை நிறுவனங்களின் அந்தஸ்தையோ இழக்கலாம். இந்து அரசை உருவாக்குவதாக இந்துத்துவச் சக்திகள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது அவற்றின் பாதுகாப்புணர்வின்மையின் வெளிப்பாடு. இது அரசியலமைப்பைச் சார்பற்றதாகக் காண்பிப்பதற்கும், அதைப் பாதுகாத்தாக வேண்டும் என்று முஸ்லிம்களை பயமுறுத்துவதற்குமே பயன்படுகிறது. அதேசமயம், இந்துத்துவர்கள் தம் நிலையை உயர்த்துவதற்கு முக்கியமான சட்டத் திருத்தங்களையும் செய்துகொள்ளக் கூடும். ’இந்து அரசு’ எனும் இந்தப் பூச்சாண்டி காங்கிரஸ் முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும், தங்களின் இருப்பை நிலையான ஜனநாயக இந்து இந்தியாவில் உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் பேருதவியாய் அமைந்திருக்கிறது.

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

மூலம்: The Hindu Republic: Seven decades of Muslim exclusion in India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here