“ஜிம் க்ரோவ் இந்துத்வா” – புரிந்துகொள்வோம்!


பா.ஜ.க.-வின் அரசியலை கவனித்துவரும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியர் அசுதோஷ் வார்ஷினி தற்போது இந்தியாவில் நிலவி வரும் இந்துவெறியை “ஜிம் க்ரோ” (Jim Crow) இந்துத்துவா என அழைக்கிறார். 1800-களில் அமெரிக்க அரசியலில் நிலவிய நிறவெறியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் சமுதாய போக்குதான் ஜிம் க்ரோ நோய் (Jim Crow syndrome) என்ற பதத்தில் குறிப்பிடப்படுகிறது.

“ஜிம் க்ரோ” என்பது அமெரிக்க கறுப்பினத்தவரை பழித்து சிறுமைப்படுத்தும் ஒரு இசை-நாடக வடிவமாகும். இதுவே பின்னர் அவர்களை அடக்கி ஒடுக்கும் வகையில் அவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கவும், தனிமைப்படுத்தவும், அவர்களின் கலப்பின மணங்களை செல்லாததாகவும், அவர்களை கும்பல் படுகொலைகள் செய்யதற்கான சட்டங்களாகவும், வழக்கங்களாகவும் கடைப்பிடிக்கப்பட்டன.

இத்தகைய சட்டங்கள் அமெரிக்காவின் தெற்குப்பகுதியின் பதினோரு மாநிலங்களில் அமலில் இருந்தது. அதனால் இம்மாநிலங்கள் ஜிம் க்ரோவ் தெற்கு (Jim Crow south) என்று அழைக்கப்பட்டது. இது ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் நீடித்து 1960-களில் சமூக உரிமை மற்றும் ஓட்டுரிமை கறுப்பினத்தவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் வரையில் அமலில் இருந்தது.

jim row நாடக காட்சி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவின் “ஜிம் க்ரோவ்” இந்துத்துவா என்று இக்கட்டுரையாசிரியர் கூறுகிறார்.

குறிப்பாக, தனது இரண்டாம் ஆட்சி காலத்தில், CAA போன்ற சட்டங்களை கொண்டுவந்ததன்மூலம் பா.ஜ.க. முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. முஸ்லிம்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டு அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது மற்றும் ஈவிரக்கமின்றி கும்பல் கொலை செய்வதன்மூலம் அச்சமூகத்தினரிடையே உள்ளூர அச்சத்தை ஏற்படுத்தி இந்துக்களைக் கண்டாலே அச்சத்தில் ஆளும் வகையில் செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க. அரசு இந்துக்கள்-முஸ்லிம்களுக்கிடையே நிரந்தர பிளவை உண்டாக்கும் வகையிலான சட்டங்களை வடித்து, அவர்கள் தொழில், திருமணங்கள் மற்றும் சமூகத்தில் ஒன்று கலப்பதைத் தடுத்து, அவர்களுக்கிடையே நடக்கும் இருமத திருமணங்களை செல்லாததாக ஆக்கி வருகிறது. இத்தகைய திருமணங்களை செய்யும் முஸ்லிம்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து வருகிறது.

பொது பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை திருத்துவதன்மூலம் அரசு எந்த ஒரு தனிநபரையும் தீவிரவாதியாகவும், தேசதுரோகியாகவும் முத்திரை குத்தி அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமலேயே ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்து வருகிறது. அப்படிதான் காஷ்மீரின் தலைவர்கள் ஆகஸ்ட் 2019-க்குப் பிறகு சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்துக்கள் முஸ்லிம்களின் கலப்பு திருமணங்களை செல்லாததாக ஆக்கும் சட்டங்களை அமல்படுத்தியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மத அடிப்படையிலான CAA எனும் குடியுரிமை சட்டம் மற்றும் அதன் தேசிய குடியுரிமை பதிவேடு (NPR) ஆகியவை கோடிக்கணக்கான முஸ்லிம்களின் ஓட்டுரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அரசின் எந்தவொரு திட்டமும் அவர்களை போய்ச்சேரக்கூடாது என்ற நோக்கத்திற்காக பா.ஜ.க.-வால் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவில் குழிதோண்டி புதைக்கப்பட்ட “ஜிம் க்ரோவ்” சட்டங்களை தோண்டியெடுத்து இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ.க. அரசு இந்த 21-ஆம் நூற்றாண்டில் மீண்டும் ஒவ்வொன்றாக அமல்படுத்திவருகிறது.

இன்னொரு முக்கியமான கருத்தாக கட்டுரையாசிரியர் முன்வைப்பது, பா.ஜ.க.-வின் இந்தியா, நாஜி ஜெர்மனியிலிருந்து வேறுபட்டது என்பது. வதைமுகாம்களை அமைத்து, நாட்டின் எதிரிகள் எனப்பட்டவர்களை அதிகாரவர்க்கத்தின் ஒப்புதலுடன், அதேசமயம் நீதிமன்றங்கள் தலையிடாவண்ணம் கொன்று குவிப்பது அல்லது அவர்களை கடும் உடலுழைப்பில் தள்ளுவது என்பதுதான் நாஜிக்களின் நோக்கமாக இருந்தது.

அத்தகைய வதைமுகாம்கள் என்ற முயற்சியை இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் எந்த ஒரு நாடும் முன்னெடுத்தால் அது சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் என்பதும், பொருளாதார-இராணுவ ரீதியில் போதிய பலமில்லாத, வெளிநாடுகளை பெருமளவு சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அது பெரும் பாதிப்பைக்கொண்டுவரும் என்பதும் நிதர்சனம்.

ஆகையால், கட்டுரையாசிரியரைப் பொறுத்தவரையில், தற்போதைய பா.ஜ.க. அரசு அமெரிக்காவின் “ஜிம் க்ரோவ்” மாதிரியைத்தான் இந்தியாவில் கொண்டுவர முயல்கிறது என்கிறார்.

இந்தியாவின் பத்திரிக்கைத்துறை மற்றும் நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் கட்டுரையாசிரியர், வரவிருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தேர்தலில் பா.ஜ.க.-வை முறியடிப்பதுடன் இழந்துபோன மாநில உரிமைகளுக்காகவும், மதத்தின் பெயரால் அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்படுவதை எதிர்த்தும் ஜனநாயக வழியிலான தொடர் போராட்டங்களையும், ஒத்துழையாமை இயக்கங்களையும் ஒத்துழையாமை இயக்கங்களையும் மக்கள் முன்னெடுத்தால் மட்டுமே இந்தியா மீண்டும் ஒரு “ஜிம் க்ரோவ்” இந்துத்துவா நாடாக அழிந்துபோவதை தடுக்க முடியும் என்கிறார்.

(சுருக்கப்பட்ட வடிவம்)

தமிழில்: செந்தழல்.

நன்றி: Countercurrents.org.

https://countercurrents.org/2021/10/understanding-jim-crow-hindutva-state/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here