ரு சில பொதுத்துறை வங்கிகளையாவது தனியார்மயமாக்குவது என்ற ஒன்றிய அரசின் திட்டம் வங்கிகளின் கடன் வழங்கல் முறையை மாற்றிவிடும் என்ற மையமான உண்மையை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்புகள் உள்ளன. வங்கிகளை உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து ஊக வணிகத்தை நோக்கியும், விவசாயத்திலிருந்து பெருவணிகத்தை நோக்கியும், உள்நாட்டிலிருந்து விலக்கி உலகளாவிய இடங்களுக்கு இட்டுச்செல்லும் என்ற அடிப்படைகளில் இப்பிரச்சினை அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளன. 2008-வது ஆண்டின் “சப்-பிரைம் நெருக்கடியின்” போது இந்திய பொதுத்துறை வங்கிகள் எந்தவிதத்திலும் பாதிப்படையவில்லை என்பதை சுட்டிக்காட்டி பொதுத்துறை வங்கிகளின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நாட்டு நலனைக் காட்டிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருவணிகத்தை மகிழ்விப்பதில் அதிக அக்கறை கொண்ட ஒன்றிய அரசு இக்கருத்துக்களை தொடர்ந்து புறக்கணிக்கிறது. எனினும் எனது நோக்கம் வங்கிகள் தனியார்மயத்தின் எதிர்கருத்துகளை மீண்டும் வலியுறுத்துவது அல்லாமல் குறைவாக விவாதிக்கப்பட்ட, நாடு புறக்கணிக்க முடியாத மற்றொரு தீவிர ஆபத்தை சுட்டிக்காட்டுவதுதான்.

அரசின் கட்டுப்பாட்டில் வங்கிகள் இருந்தவரை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் சரக்குகளை வைத்திருப்பதற்கு நிதியளிப்பது போன்ற முதன்மையான குறுகியகாலக் கடன் தேவைகள்வங்கிகளால் பூர்த்தி செய்யப்பட்டன. நிலையான மூலதன உருவாக்கத்திற்கான, “நீண்டகால நிதித் தேவைகள்” அதற்காகவே உருவாக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் (ICICI, IDBI, UTI, etc) மூலம் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனங்கள்” இந்திய ரிசர்வ் வங்கியின் இலாபம்” போன்ற அரசாங்க ஆதாரங்களில் இருந்து நிதிகளைப் பெற்று வங்கி வட்டி விகிதங்களை விடக் குறைந்த வட்டியில், அதாவது பெயரளவு வட்டி விகிதங்களில் கடன்களை வழங்கின. முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்நிறுவனங்கள் வசூலித்த விகிதங்கள் பணவீக்க விகிதத்தைவிடக் குறைவாகவும் இருந்தன.

1990-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “தாராளமயமாக்கல்” சிறப்பு நிதி நிறுவனங்கள் என்ற இந்த முழுக்கட்டமைப்பையும் தகர்த்தெறிந்தது. “ICICI, IDBI, UTI போன்ற முதலீட்டு நிதி நிறுவனங்கள் வங்கிகளாக மாற்றப்பட்டன”. தொழில்நிறுவனங்களின் நீண்ட கால நிதித் தேவைகள் இனி மூலதனச் சந்தையின் மூலம் பூர்த்தி செய்யப்படவேண்டியதானது. ஆனால் ஒரு தொழில் போதுமான லாபம் தரவில்லை என்றால் அல்லது நட்டம் ஏற்படும் நிலையில் முதலாளிகள் சந்தையை அணுகுவதற்குப் பதிலாக பொதுத்துறை வங்கிகளை அணுகத் தொடங்கினர். உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக பெரிய அளவில் கடன்களை வழங்குவதற்கு அரசாங்கமும் வங்கிகளை நெட்டித்தள்ளியது. இதன் விளைவாக, அரசாங்கத்தால் விரும்பப்படுவோர்க்கு கடன்களை வாரி வழங்குவதற்கு பொதுத்துறை வங்கிகள் நெருக்கப்பட்டன. அதனால் அவ்வங்கிகள் அபாயத்தைக் குறிக்கும் இருப்புநிலைக் குறிப்பை (balance sheet) பராமரித்து வருகின்றன.

எப்போதுவேண்டுமானாலும் திரும்பப் பெறப்படக்கூடிய ‘பொதுமக்களின் வைப்புத் தொகைதான் வங்கிகளுக்கு நிதி ஆதாரமாக இருக்கின்றன’. நீண்டகால முதலீட்டுக் கடன்களாக பொதுமக்களின் வைப்புத் தொகையில் கணிசமான பகுதி வழங்கப்படும்போது பணப்புழக்க நெருக்கடிக்கு வங்கிகள் ஆளாகின்றன. இதைத்தடுக்க வங்கிகள் “நீண்டகாலக் கடன் கொடுக்க குறுகியகாலக் கடன்களை” வாங்குகின்றன. இந்நிலையில் மக்கள் பலரும் திடீரென தங்கள் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற முடிவு செய்தால் வங்கி திவாலாகிவிடும் அல்லது ஒரு சிலர் மட்டும் வைப்புத்தொகையை திரும்பப் பெற விரும்பினாலும், தொகையை திரும்பப் பெறுவதில் சிக்கல் என்ற செய்தி பரவினாலும் வங்கி திவாலாகிவிடும். அத்தகைய வாய்ப்பைத் தடுக்க குறுகியகாலக் கடன்களை வழங்கியுள்ள வங்கிகள்; பொதுவாகக் குறுகியகாலச் சொத்துக்களையும் (தங்கம், கடன் பத்திரங்கள், பங்குகள், etc.) வைத்திருக்கின்றன. குறுகியகால சொத்துக்கள் அதிக இழப்பு ஏற்படாமல் பணமாக மாற்றப்படலாம் என்பதால், வைப்புத்தொகைகளை திடீரென திரும்பப் பெறுவதால் வங்கிக்கு ஏற்படும் ஆபத்து குறைக்கப்படுகிறது. ஆனால் நீண்டகால சொத்துக்கள் (பெரும்பாலும் அசையா சொத்துக்கள்) இருந்தால் அவற்றின் திடீர் விற்பனை கணிசமான இழப்பை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்: வங்கிகள் தனியார்மயம் தேசத்துரோக குற்றம்!

பொதுத்துறை வங்கிகள் நீண்டகால சொத்துக்களை வாங்குவதற்கு மட்டும் கடன் வழங்கவில்லை. அவை வழங்கிய கடன்களில் பெரும்பாலானவை நீண்ட முதிர்ச்சி காலம் கொண்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் அதிகரிக்கும் நேரம் மற்றும் செலவினங்கள் பொதுவானவை. நீண்ட காலத்திற்குப் பிறகுதான் இலாபம் (ஒருவேளை) என்பது கிடைக்கும். அத்தகைய கடன்களில் பெரும்பகுதி வங்கிகளின் “செயல்படாத சொத்துக்களில்” (Non-performing assets) என்ற வகையில்தான் கணக்கிடப்படும் சாத்தியமும் உள்ளது. ஆனால் “செயல்படாத சொத்துக்கள்” என அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்படாத அந்த பகுதி கூட “அழுத்தப்பட்ட சொத்துக்கள்” (stressed assets) என்ற வகையின் கீழ் வரும். இதனால் பொதுத்துறை வங்கிகள் நீண்ட கால கடன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் “அழுத்தப்பட்ட கடன்களை” வழங்கவும் அரசாங்கத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளன. சுருக்கமாக, எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக்கூடிய “நிதி நெருக்கடி” என்ற எரிமலையின் மேல் இந்த அரசாங்கம் அமர்ந்திருக்கிறது எனலாம். ஆனால் அது இன்னும் வெடிக்காமல் அமைதியாக இருப்பதற்குக் காரணம் இந்த வங்கிகள் அரசுக்குச் சொந்தமானவை என்பதுதான். நீண்டகாலக் கடன்களுக்காக, தங்களது வைப்புத்தொகை பயன்படுத்தப்படுவதைக் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடையவில்லை. வங்கிகள் நெருக்கடியை எதிர்கொண்டால் அவற்றை வைத்திருக்கும் அரசாங்கம் அவசியம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கையே வங்கிகள் நெருக்கடியை எதிர்கொள்வதிலிருந்து இதுநாள்வரை காப்பாற்றி வந்திருக்கிறது.

தனியார் நிதி நிறுவனங்கள் காலப்போக்கில் சொத்து-பொறுப்பு (கடன்) சமநிலையில் சிக்கல் உருவாக்கும்போது உலகளாவிய நிதி நெருக்கடிகள் எழுந்துள்ளன. “1997-இல் கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி” இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தென்கொரிய வங்கிகள் வெளிநாட்டு நாணய வைப்புகளை நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்கு உள்நாட்டில் கடன்களை வழங்கின. இது அவ்வங்கிகளின் சொத்து-பொறுப்புகளுக்கு இடையே இரட்டைப் பொருத்தமின்மையை ஏற்படுத்தியது. முதலீட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்க மக்களின் வைப்புத்தொகைகளை பயன்படுத்தியதாலும், அந்நியச் செலாவணியை ஈட்டாத திட்டங்களுக்கு நிதியளிக்க வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்கியதாலும் தவிர்க்க முடியாமல் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டன.

2008-இல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி கூட அத்தகைய பொருத்தமின்மையின் பிரதிபலிப்பாகும். 1929-இல் ஏற்பட்ட பெரும் மந்தநிலையின்போது (Great depression) அமெரிக்காவில் ரூஸ்வெல்ட் நிர்வாகம் 1933-இல் கிளாஸ்-ஸ்டீகல் சட்டத்தை (Glass-Steagall Act) இயற்றி, முதலீட்டு வங்கிகளிலிருந்து வணிக வங்கிகளைப் பிரித்தது. இதன்மூலம் வணிக வங்கிகள் வைப்புநிதி மூலம் குறுகியகாலக் கடன்களை வழங்குவதற்கும், வைப்புநிதி இல்லாத முதலீட்டு வங்கிகள் பங்குச்சந்தை நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவதற்கும் கட்டுப்படுத்தப்பட்டன. 1933 வரையில் அனைத்து வங்கிகளும் தங்கள் வைப்புத்தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்துவந்ததுதான் பெரும் மந்தநிலைக்குக் காரணமாக இருந்தது. ரூஸ்வெல்ட் அரசாங்கம் கொண்டுவந்த இச்சட்டம் வங்கிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. ஆனால், 1999-இல் கிளாஸ்-ஸ்டீகால் சட்டம் இரத்து செய்யப்பட்ட தால் மீண்டும் 2008-இல் ஒரு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலையை அந்நாட்டில் உருவாக்கியது. இந்த நெருக்கடிக்குப் பின்னால் இருந்த ஒரே காரணி அதுமட்டுமல்ல, வணிக மற்றும் முதலீட்டு வங்கிகள் கடன் அபாயங்களை குறைத்து மதிப்பிட்டு தனியார்மயமாக்கலுக்கு முன்பிருந்த தங்களது சொத்துக்களுக்கு எதிராகக் கடன்களை வாரி வாரி வழங்கின. அதனால்தான் லேமன் பிரதர்ஸ் போன்ற முதலீட்டு வங்கி வீழ்ச்சியடைந்தது.

இதையும் படியுங்கள்: பொதுத் துறை வங்கிகளை காப்போம்! காவிகளின் கனவை கலைப்போம்!

இந்தியாவிலும் பொதுத்துறை வங்கிகள் அரசாங்கத்தின் நெட்டித்தள்ளுதலால் , முன்னெப்போதும் இல்லாத அபாயங்களுக்கு ஆளாகியுள்ளன. ஆனால்’ பொதுத்துறையின் மீதுள்ள, மக்களின் நம்பிக்கை ‘காரணமாக இதுவரை அவை காப்பாற்றப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் முற்றுமுழுதாக தனியார்மயமாக்கப்படும்போது அரசாங்கம் அமர்ந்திருக்கும் எரிமலை வெடித்து வங்கியில் வைப்புத்தொகை வைத்துள்ள பொதுமக்களை மட்டுமல்லாது இந்தியப் பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டாலும் அவற்றைக் காப்பாற்ற அரசாங்கம் வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் தொடர்ந்து இருக்கும் என்றும் இந்த நம்பிக்கையே வங்கிகளை பாதிக்கும் எந்த நெருக்கடியையும் தடுக்கும் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு மிகக் குறைவான நியாயம்தான் உள்ளது. வங்கியின் நேரடி உரிமையாளராக இருக்கும்போது அரசாங்கத்தின் மீது ஏற்றப்படும் அரசியல் அழுத்தம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தால் இருக்காது என்பதுதான் உண்மை.

சுருங்கச் சொன்னால், பொதுத்துறை வங்கிகளின்’ சொத்து-பொறுப்புப் சமநிலை’ அரசாங்கத்தால் சிதைக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றை முழுவதுமாக தனியார்மயமாக்குவதன் மூலம், கைகழுவுவது முற்றிலும் பொறுப்பற்ற செயலாகும். இது நாட்டின் சாதாரண மக்களுக்கு கடுமையான நிதி இழப்பை மட்டுமல்லாது வங்கி முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை நீக்கி, வங்கிகளை வைப்புநிதிகளை விட்டுவிட்டு நாணயப்பதுக்கல் மற்றும் சொத்து பறிமுதல் என்பதை நோக்கி இட்டுத்தள்ளும். இது நீண்டகால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சேதப்படுத்தும் ஒரு பிற்போக்கு நடவடிக்கையாக இருக்கும்.

ஆங்கிலத்தில்: Prabhat Patnaik

மொழியாக்கம்: செந்தழல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here