நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் நேற்று (19.01.2025) பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை சந்திக்க சென்றிருந்தார். நடிகர் விஜய் பயணம் காரணமாக மீண்டும் பரந்தூர் கடந்த 10 நாட்களாக விவாத பொருளாகி உள்ளது.
விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில் பனையூரை விட்டு வெளியில் வருவதில்லை; வெள்ள நிவாரணம் கூட பாதிக்கப்பட்டவர்களை பனையூர் வரவழைத்து தான் கொடுக்கிறார், என விமர்சனங்கள் எழுந்த நிலையில் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த பனையூர் பண்ணையாருக்கு ‘யாரோ’ கொடுத்த ஐடியா தான் பரந்தூர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாக மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். புதிய விமான நிலையம் அமைப்பதாக இருந்தால் பரந்தூர், ஏகனாபுரம் நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனை எதிர்த்து தான் 908 நாட்களாக எகனாபுரம் மக்கள் இரவு நேரங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
900 நாட்களுக்கு மேலாக போராடிவரும் மக்கள் பற்றி அதுவரை விஜய் எந்த கருத்தும் கூறியது இல்லை. விஜய் பரந்தூர் மக்களை சந்திக்கப் போகிறார் என அறிந்த ஊடகங்கள் அவரின் பயணம் குறித்த ஹாட்டான விஷயங்களை ஒளிபரப்பி வந்தன.
விஜயின் பயணத்தை திமுக தடுப்பதாக ரசிகர்களும், பயணத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் ஏன் என கட்சிக்காரர்களும் இரண்டு நாட்கள் விவாதப் பொருளாக்கியுள்ளனர். விஜயின் சந்தர்ப்பவாத பயணம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க…
இரண்டு வருடங்களாக போராடிவரும் மக்களை சந்திக்க இயக்கங்களை, அமைப்புகளை திமுக அரசின் காவல்துறை அனுமதிப்பதில்லை. இன்று வரை அதே நிலை தான் தொடர்கிறது.
படிக்க: ♦ இந்திய மக்களின் எதிரி யார்? | நடிகர் விஜய்-ன் நோக்கம் என்ன? | வழக்கறிஞர் ராஜூ
பரந்தூரில் நிலங்கள் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட விமான நிலையத்திற்கு தேவையான சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது அரசு. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் காவி பாசிஸ்ட் மோடி அரசு இயற்கையையும், மக்களையும் அழிக்கும் திட்டங்களை கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மோடி கொண்டு வரும் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை அதே ‘வளர்ச்சி’ என்ற பெயரிலேயே அனுமதிக்கிறது. கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு திமுக – பாஜக கட்சிகள் பெரிய முரணில்லாமல் ஒத்துப் போகின்றன.
திமுக கட்சியினரும் சமூக வலைதளங்களில் இந்நாள் வரை காவிகளுக்கு எதிராக களமாடுபவர்களும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு ஆதரவாகவே பேசுகிறார்கள். வளர்ச்சியின் பெயரிலேயே ஆதரிக்கிறார்கள். பரந்தூர் விமான நிலையத்தின் மூலம் தான் பொருளாதார வளர்ச்சி அடைய போவதாக தீவிரமாக எதிர்வாதம் செய்கிறார்கள். விஜயை எதிர்ப்பது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போகிறார்கள்.
நடிகர் விஜய்க்கும் அதே நிலைப்பாடுதான். “நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் பரந்தூரில் தான் விமான நிலையம் அமைக்க வேண்டுமா” என கார்ப்பரேட் ஆதரவு மன நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
படிக்க: ♦ பரந்தூர் விமான நிலையம்: மக்கள் வரிப்பணத்தில் கார்ப்பரேட் கும்பல் கொழுக்க!
பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நீர்நிலைகள் நிறைந்த முப்போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும். தற்போது விமான நிலையம் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு அதனை நம்பி இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் அழிந்து போகும் சூழல் ஏற்படும்.

தொழில் வளர்ச்சி என்றால் அதற்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய தொழில் பாதிக்கப்படுவதில் அரசுக்கு அக்கறை இல்லை. இந்தியாவின் முதன்மையான தொழிலான விவசாயம் கார்பரேட்டுகள் நலனுக்காக தனியார் மயம் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட 1991 காலங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது.
விவசாயத் தொழிலுக்கு ஏற்ப ஆலைகள் அமைப்பதில் அக்கறை காட்டாத அரசுகள், இயற்கை வளங்களை கொள்ளையிடவும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் பரந்தூர் போன்ற இடங்களில் விமான நிலையங்களை ஏற்படுத்துகிறது.
இதிலிருந்து மக்களை திசை திருப்பும் விதமாக வளர்ச்சி என்ற முகமூடியை அணிந்து கொண்டு கிராமங்கள் நகரமயமாகும் ‘ஊர் டெவலப்பாகும்’ என ஆசை காட்டுகிறது. இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மிகச் சிலரே பயனடைவர் என்பதே கடந்த கால வரலாறு.
பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் விஜய் போன்ற கவர்ச்சி வாத தலைவர்களின் பேச்சைக் கண்டு ஏமாறாமல் கிராமந்தோறும் போராட்ட கமிட்டிகளை ஏற்படுத்தி போராட்டங்களை தீவிர படுத்துவதன் மூலம் தான் விவசாயத்தையும் நீர்நிலைகளையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற முடியும்.
- நலன்
கட்டுரை சிறப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் மக்கள் 908 நாட்கள் போராடி வருகிறார்கள் அவர்களை இதுவரை எட்டிப் பார்க்காத விஜய் இன்று ஏகனாபுரத்தில் விவசாயிகளை சந்திப்பது அரசியல் நாடகமே! சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் ! டங்ஸ்டன் போராட்டம்! பஞ்சாப் அரியானா விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் போராட்டங்களை கண்டுகொள்ளாத ஒரு துண்டு அறிக்கை கூட வெளியிடாத கவர்ச்சி நடிகர் விஜய் தற்போது கார்ப்பரேட் மனநிலையில் ஏகனாதபுரம் விவசாயிகளை சந்திப்பது ஒரு அரசியல் சூழ்ச்சி ! கவர்ச்சி நடிகரை கண்டு ஏகனாதபுரம் விவசாயிகள் ஏமாற வேண்டாம்! ஊர் தோறும் விவசாய கமிட்டிகளை கட்டி அமைத்து எக்குறுதி மிக்க போராட்டத்தை கட்டி அமைப்பதே விவசாயிகளின் உடனடி தீர்வு. நன்றி