சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. பன்னூர், பரந்தூர், திருப்போரூர் மற்றும் படாளம் ஆகியவை சென்னை கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு அடையாளம் காணப்பட்டு, பரந்தூர் இறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான நிலைய திட்டத்திற்காக 4,791.29 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.  இதனை எதிர்த்து 13 கிராம மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். கையகப்படுத்த உள்ள நிலத்தில் 2,605 ஏக்கர் நிலம் சதுப்பு நிலங்கள் என்றும் அதனால் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவு உற்பத்தியை நிறுத்தி விட்டு யாருக்காக இந்த விமான நிலையங்கள் அமைக்கப்படுகிறது? என்பதே போராடும் மக்களின் கேள்வி. நிலம் கையகப்படுத்தும் வேலையை தொடங்கும் முன்னர், மக்களை திசை திருப்புவதற்காக, கையகப்படுத்தப்படும்  நிலத்திற்கு அதிகமான விலை வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். மக்கள் பணத்தை பார்த்தால் மனம் உருகிவிடுவார்கள் என்று தப்பு கணக்கு போடுகிறது அரசு. ஆனால் மக்கள் பணத்திற்காக, தாங்கள் காலம் காலமாக விவசாயம் செய்து பல தலைமுறையாக வாழ்ந்து வந்த நிலத்தை விட்டுத் தர தயாராக இல்லை.

நியாயப்படுத்தும் திமுக அரசு!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 500 விமானங்கள் வந்து செல்வதாகவும், புதிய விமானநிலையத்தின் மூலம் 650க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்லும் என்றும் கூறுகிறார்கள். மேலும் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியிலிருந்து 3.5 கோடியாக அதிகரிக்கும் என்றும், ஆசிய அளவில் பெரிய முதலீட்டு மையமாக சென்னை மாறுவதற்கு 2 விமான நிலையங்கள் பங்கு வகிக்கும் என்று கூறுகிறார்கள்.

சென்னை விமான நிலையம்

அன்றாடம் உழைக்கும் மக்கள், அரசு பேருந்தில் செல்லக் கூட பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நிலையில் தான் ‘பெண்களுக்கு பேருந்தில் இலவசம்’ என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் விமானத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை காரணமாக சொல்வது ஏற்றுக் கொள்ளும் வகையிலா உள்ளது?

மேலும் அரசு கூறும் போது ஏற்றுமதி, வர்த்தகம் மற்றும் தொழில்வளர்ச்சி மேம்படும்  என்பது தான் புதிய விமான நிலையத்தின் பயன்களாக கூறுகிறார்கள். விவசாயம் என்ற மிகப்பெரிய தற்சார்பு பொருளாதாரத்தை  அழித்து மக்களை சொந்த ஊரில் இருந்து துரத்துவது தான் வளர்ச்சியா?

மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

சென்னைக்கு இரண்டாவது விமானநிலையம் வேண்டும் என்ற  கோரிக்கையானது 1998 லேயே முன்வைக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகாலம் எடுத்துக் கொண்ட அரசு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இடத்தை தேர்வு செய்யவில்லை என்பதே மக்களின் எண்ணம்.

குறிப்பாக மொத்தம் 4,791.29 ஏக்கர் நிலத்தில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும், 1000 ஏக்கருக்கு மேல் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அதிக அளவில் பாதிப்பை சந்திக்கக் கூடிய மக்கள் ஏகனாபுரம், நெல்வாய், இடையார்பாக்கம், மகாதேவிமங்கலம் ஆகிய பகுதியை சார்ந்தவர்கள்.

பரந்தூர் விமானநிலையம் வேண்டாமென போராடும் கிராம மக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சரை சந்தித்த பிறகு ஊர் மக்கள் அளித்த பேட்டியில் கம்பன் கால்வாய் விமான நிலைய வரைபடத்தில் 7 கிலோ மீட்டர் அளவுக்கு வருகிறது, அதை என்ன செய்ய போகிறார்கள். மேலும் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளுக்கு நடுவே ஓடை ஒன்று வருகிறது.மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது உபரி நீர் இந்த ஓடை வழியாக தான் கொசஸ்தலை ஆற்றில் கலக்கும்.  விமான நிலையத்தால் இந்த ஓடையின் குறுக்கே சுவர் அமைத்தாலோ அல்லது மூடினாலோ 30 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம். இதனால் விளைநிலங்களும் மூழ்கும். சுற்று வட்டராத்தில் உள்ள 6ஏரி மற்றும் 3க்கும் மேற்பட்ட குளங்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார்கள்.

கிராமசபை தீர்மானம்:

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிதாக அமைக்கவுள்ள விமான நிலையம் வேண்டாம் என்று ஏகனாபுரம், தண்டலம், பரந்தூர், அக்கமாபுரம் உள்ளிட 12 கிராமங்களில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போராட்டத்தை கையிலெடுத்த மக்கள்:

கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே பரந்தூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . புதிய விமான நிலையத்திற்கான திட்ட மதிப்பீடு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்ட பிறகு இறுதி செய்யப்படும். தற்போதைய திட்ட மதிப்பீடு ரூ.20,000 கோடியாக உள்ளது” என்று முதல்வர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநில அரசு அவர்களின் நிலம் மற்றும் சொத்துகளுக்கு சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு வரை சலுகை அளித்தும் கிராம மக்கள் விடவில்லை.

இதையும் படியுங்கள்: நெற்பயிரை அழித்து சாலை அமைப்பது தான் மக்கள் நல அரசா?

தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள்  ஊர்வலம் நடத்த திட்டமிட்டு ஏகனாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் சென்ற நிலையில் இந்த பேச்சு வார்த்தை அழைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரண்டாவது முறையாக நடந்தது.

கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் குழு, கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் புவியியல் மற்றும் நீரியல் அம்சங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்று கிராம மக்களிடம் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் தங்களது கருத்துக்களை நிபுணர் குழுவிடம் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

தொடரும் போராட்டம்

எவ்வாறாயினும், புதிதாக வரவுள்ள விமான நிலையத் திட்டத்தை எதிர்க்கும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் கிராமங்களில் புதிய விமான நிலையம் வராது என்று அரசாங்கம் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினர். இந்த போராட்டமானது டிசம்பர் 20 அன்று 147வது நாளை எட்டியுள்ளது.

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், “பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 147 நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறோம். நாங்கள் மூன்று அமைச்சர்களை சந்தித்து மக்களின் வாழ்வாதாரத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினோம்.

பரந்தூர் விமான நிலையத்தின் வரைபடம்

“கனமழையின் போது அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்கும் நீர்நிலைகள் உள்ளன, மேலும் இந்த நீர்நிலைகள் விமான நிலைய கட்டுமானத்தால் பாதிக்கப்படும். இதனால் சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்படும். மூன்று அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது, ​​புதிய விமான நிலையத்தை அங்கு உருவாக்கினால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மீண்டும் அவர்களிடம் கூறினோம். சமீபத்திய மழையின் போதும், அதிகப்படியான மழைநீர் உள்ளூர் வெள்ளத்தை ஏற்படுத்தியது, ”என்று அவர் மேலும் கூறினார்.

இழப்பீடு என்று ஏமாற்றும் அரசு

கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு  3.5 மடங்கு விலை தருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பல இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடும், வேலையும் முறையாக வழங்கபடாமல் உள்ளது. உதாரணமாக NLC நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை வேலை வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக தற்போது பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

விமான நிலைய கட்டுமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மக்களின் போராட்டங்களை திசை திருப்ப மக்களை ஏமாற்றும் வேலை  தான் இழப்பீடும், அரசு வேலை அறிவிப்பும். இதனை மக்கள் உணர வேண்டும்.

அரசு சொல்லும் வளர்ச்சி யாருக்கு?

புதிதாக ஆலைகள் வரும் போதும், சாலைகள் அமைக்கும் போதும், இதுபோன்ற விமான நிலையங்கள், அணுஉலைகள் அமைக்கும் போதும் இது நாட்டின் வளர்ச்சிக்கு என்று கதையளக்கிறார்கள். இது உண்மையா என்று நாம் அனுபவத்தில் பார்க்க வேண்டும். கூடங்குளத்தில் அணு உலை அமைந்ததில் என்ன வளர்ச்சி வந்தது? நோக்கியா, பாக்ஸ்கான், மோட்டரோலா என பல்வேறு நிறுவனங்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன, ஆனால் என்ன நடந்தது? நாட்டின் வளத்தையும், தொழிலாளார்களின் உழைப்பையும் சுரண்டிய நோக்கியா பல்லாயிரம் கோடி வரி ஏய்த்து விட்டு நாட்டை விட்டு சென்றது. மோட்டரோலா தொடங்காமலேயே ஆலையை மூடி விட்டது.

இதையும் படியுங்கள்: ஃபாக்ஸ்கான் ஆலையில் பெண் தொழிலாளர்கள் 8 பேர் பலி!

பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கவும் நிலம், தண்ணீர், விவசாயம் உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. ஆனால் அவர்களோ அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு நமது தொழிலாளர்களை நவீன அடிமைகளாக அற்ப சம்பளத்திற்கு (8,000 – 12,000) வேலைக்கு அமர்த்துகிறார்கள். நம்மையும் , நாட்டையும் ஒட்ட சுரண்டுகிறார்கள்.

இங்கிருந்து மலிவான உழைப்பு சக்திக்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்ல தான் இது போன்ற விமான நிலையங்களும், 6 வழி சாலைகளும், 8 வழிச் சாலைகளும் அமைக்கப்படுகின்றன. இதை தான் வளர்ச்சி என்று அரசு சொல்லுகிறது. இது யாருக்கான வளர்ச்சி என்று மக்கள் தான் சொல்ல வேண்டும்.

விமான நிலையங்கள் தனியாருக்கு!

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் விமானநிலையங்கள், எல்லா வேலைகளும் முடிந்த பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய தமிழகத்தின் முக்கியமான 4 விமான நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட வளர்ச்சி(?) நோகாமல் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

போராடும் மக்களுக்கு துணை நிற்போம்!

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை பற்றி விமர்சித்து வந்த  திமுக அரசு, தற்போது பாசிசம் என்ற வார்த்தையையே பயன்படுத்த அஞ்சுகிறது. பாஜக என்ற கட்சியை எதிர்ப்பது மட்டும் மக்களின் வாழ்க்கையை மாற்றி விடாது, மாறாக பாஜகவின் பாசிக கொள்கைகளையும், கார்ப்பரேட் அடிவருடித்தனத்தையும் எதிர்த்து போராட வேண்டும். ஆனால் திமுக அரசின் பரந்தூர் விமான நிலையம் குறித்த நிலைப்பாடு, கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாட்டையே காட்டுகிறது.

எந்த அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களின் சேவை கார்ப்பரேட்டுக்கே. மக்களின் வாழ்க்கையை சூறையாட நினைக்கும் அரசின் வளர்ச்சி திட்டங்களை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். கார்ப்பரேட் கும்பலின் அடுத்த இலக்கு நாமாக கூட இருக்கலாம். ஆகையால் பரந்தூர் விமான நிலையத்திற்க்கு எதிராக போராடும் மக்களுக்கு துணை நிற்போம், தோள் கொடுப்போம்!.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here