• இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும். 
  • சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் மாதம் ரூ.45000/- என வழங்க வேண்டும். 
  • 2023,  2024 ஆம் ஆண்டுகளுக்கான ஊக்கத் தொகையை உடன் வழங்க வேண்டும்.
  • செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படல் வேண்டும்.
  • பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். 

…போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆட்சி காலங்களில் செவிலியர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்தான்.

குறிப்பாக 2025 இல் திமுக ஆட்சிக் காலத்தில், செவிலியர்கள் போராடிய பொழுது, களத்திற்கே வந்து வீராவேசமாக லாட்டரி புகழ் ஆதவ் அர்ஜூனா இப்படிப் பேசினார்: ‘செவிலியர்களின் போராட்டம் முழுவதும் நியாயமான போராட்டம்; இந்தப் போராட்டத்தை ஒடுக்கிட திமுக அரசு கருதுமே யானால் தவெகவும், எங்கள் தலைவர் அண்ணன் விஜய்யும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்; செவிலியர்களுக்கு ஒரு சிறு கீறல் விழுந்தால் கூட இந்த அரசு அதற்கான விலை கொடுத்தாக வேண்டும்; நாங்களும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம்; செவிலியர்கள் அஞ்ச வேண்டாம்; பயப்பட வேண்டாம்; நாங்கள் ஆட்சிக்கு வந்த மறு தினமே உங்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவதோடு மட்டுமல்லாமல் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று கையொப்பமிடுவோம்…’ என்ற பாணியில் வீரமுழக்கமிட்டார் ‘லாட்டரி புகழ்’ ஆதவ். அந்த தற்குறி ‘நெடுமாடு’ பேச்சை நம்பி செவிலியர்கள் கூட்டமும் விசிலுக்குத் தான் வாக்களித்தார்கள்! ஆனால் இன்று மீண்டும் நடுரோட்டில் நிற்கிறார்கள். ஏன்?

இப்போது தற்குறி நடிகர் விஜய்யின் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்கள் நிறை வடைந்துவிட்டன. பதவியேற்ற மறுநாளே செவிலியர்கள் கோரிக்கை அனைத்தும் ஏற்கப்பட்டு கையொப்பமிடப்படும் என்று எதிர்க்கட்சியாக இருந்த பொழுது வாய் கிழிய கத்தியவர்கள், இன்று அவர்களது கோரிக்கை களை ஏற்க மறுப்பதோடு, போராடும் செவிலியர்களை விஜய்யின் காக்கிச்சட்டை காலிப்படை பெண்கள் என்றும் பாராமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திக் கைது செய்துள்ளது. 

போர்க்களமாக மாறிய அக்டோபர் 5 செவிலியர் போராட்டமும் – மிருகத்தனமான விஜய்யின் போலீஸ் அடக்குமுறையும்!

கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி 4000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சாமியானா பந்தல் அமைத்து அமைதியான வழிமுறையில் போராட்டத்தை நடத்தினர். ஆனால் நடிகர் விஜய் அரசாங்கமோ தமது அடியாள் படையான காக்கிச்சட்டை காலிப்படையைக் கொண்டு சுற்றி வளைக்கச் செய்தது. 

போலீஸ் அதிகாரிகள் நயவஞ்சகமாகப் பேசி ‘5 நிர்வாகிகள் மட்டும் எங்களுடன் தலைமைச் செயலகத்திற்கு வாருங்கள்; அங்கு வைத்து பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வினை எட்டலாம்’- எனக் கூறி உள்ளனர். அதற்கு செவிலியர் சங்கத் தலைவர் சுந்தரி உட்பட நிர்வாகிகள் சிலர், ‘பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் அதிகாரிகளை – அமைச்சர்களை இங்கே எங்களது போராட்டக் களத்திற்கு வரச் சொல்லுங்கள்; இங்கே பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லுங்கள்’ எனச் சரியாகவே கூறியுள்ளனர். 

படிக்க:

♦ MRB செவிலியர்கள் போராட்டமும், தமிழக அரசின் துரோகமும்!

♦ செவிலியர்களின் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்! புஜதொமு கண்டன அறிக்கை

ஆனால் போராட்டத்திற்கு உளப்பூர்வமாக ஆதரவாக நின்ற வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், பாலன் போன்றோர் ‘பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்ற பொழுது, வேண்டாம் என மறுப்பது சரியன்று; தாராளமாகப் பேச்சு வார்த்தைக்குப் புறப்படுங்கள்’ – என நம்பி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் நயவஞ்சக காக்கிச்சட்டை போலீஸ் கும்பல் அந்த ஐந்து நிர்வாகிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லாமல் கைது செய்து மண்டபத்தில் அடைத்து மாபெரும் துரோகம் செய்துள்ளது. 

போராட்டக் களத்தில் சாமியானா பந்தல்களை பிய்த்து எரிந்துள்ளனர், மின் இணைப்பை துண்டித்துள்ளனர்; ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்; போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அனைவரையும் குழந்தை குட்டிகள் என்றும் பாராமல் கடும் தாக்குதல் நடத்தி, காயங்கள் ஏற்படுத்தி குண்டுக் கட்டாகத் தூக்கிக் கைது செய்து, கேட்க நாதியற்ற முறையில் மண்டபத்தில் அடைத்து பெரும் கலவர பூமியாக்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட செவிலியர்கள் தான் 2020, 2021 காலக் கட்டத்தில் கொரோனா பெரும் தொற்று பரவி ஆயிரமாயிரம் பேர் செத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தத்தம் உயிர்களை துச்சமெனப் பாவித்து, நோயாளிகள் குணமடைய அர்ப்பணிப்புடன் பணியாற்றினர் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத் தகுந்த அம்சமாகும். இன்று வரை மருத்துவமனைகளில் செவிலியர்களின் மகத்தான பங்கினை எவராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்டவர்களின் கோரிக்கைகளையே  நிறைவேற்ற வக்கற்ற நடிகர் விஜய்யின் அரசாங்கமும் அதன் அடியாள் படையான காக்கிச்சட்டை போலீசு ரவுடிக் கும்பலும் செவிலியர் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி நரவேட்டையாடி உள்ளன. 

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை; பெண்கள் பாதுகாப்பிற்கென்றே ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ உருவாக்கி விட்டேன்…” என்று இறுமாப்புடன் மார்தட்டிய கூத்தாடி விஜய் ஆட்சியில், செவிலியர், மற்றும் பெண்கள் போராட்டத்தை ஒடுக்க – இந்த அளவிற்கு மானபங்கப்படுத்தும் அளவிற்குச் சென்றுள்ளது போலீஸ். எனவே ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற பெயரை உடனே மாற்றம் செய்து தமிழ்நாடு முழுவதும் பெண்களை ஒடுக்குவதற்கான “பெண்களை நரவேட்டை யாடும் அதிரடி நரிப்படை” எனப் பெயர் மாற்றிக் கொள்வதே விஜய் அரசுக்கும் அதன் காக்கிச்சட்டை போலீசுக்கும் பொருத்தமாய் இருக்கும்.

படிக்க:

♦ மக்களின் உயிர்காத்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்!

♦ சென்னை அரசு பல் மருத்துவமனையில் சிகிச்சை – மாறுபட்ட அனுபவம்.

செவிலியர் போராட்டம் முற்றிலும் நியாயமான போராட்டமாகும். போராட்டத்தை ஒடுக்கும் துரோகக் கும்பலான விஜய் அரசாங்கத்தையும், அதன் கூலிப்படையான காக்கிச்சட்டை ரவுடிகளையும் எதிர்த்து நிற்போம்.  தமிழ்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும் செவிலியர்களுடன் கரம் கோர்ப்போமாக! 

செவிலியர் போராட்டத்தை ஒடுக்குவதில் அரசு & அரசாங்கம் இவற்றின் கூட்டுச் சதி!

பொதுவாக உழைக்கும் மக்கள் பிரிவினர் பலரும் அரசு மற்றும் அரசாங்கம் இவற்றுக்கு இடையிலான துல்லியமான வேறுபாடுகளை உணர்ந்தோராய் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ராணுவம், போலீஸ், நீதிமன்றம், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல நியமன அமைப்புகளான அதிகார வர்க்கம், தத்தம் கல்வித் தகுதிகள் மற்றும் பல குறுக்கு வழிகள் மூலமாக நிரந்தரமாக அமையப் பெற்ற அடக்குமுறை கருவிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இவை மக்களுக்கு குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு எந்த வகையிலும் கட்டுப்படாத போராடும் உழைக்கும் மக்களை ஒடுக்கி நசுக்குவதற் காகவே உருவாக்கப்பட்ட நிரந்தர அமைப்புக் களாகும்; உறுப்புகளாகும். இதுவே “அரசு!” இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடிய பயிற்சியே, நிலவுகின்ற சுரண்டும் சமூக அமைப்பைப் பாதுகாத்து, மக்கள் விரோத சுரண்டும் கூட்டத்திற்கு அரணாக இருந்து,  அவற்றுக்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்களை, ‘சட்டம் ஒழுங்கு’ என்ற பெயரில் அடக்கி ஒடுக்குவதற்கென்றே பழக்கப் பட்டவர்கள்! நியமிக்கப்பட்டவர்கள்! இதுதான் உண்மையான “அரசு!”.

1947 போலிச் சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முன்பே வெள்ளையனால் பிரிட்டிஷ் இந்திய பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு விட்டது. காரணம் நாடு முழுவதும் வீறு கொண்டு எழுந்த சுதந்திரப் போராட்டத் தீ பற்றி எரியத் துவங்கிய பொழுது அவற்றை ஒழித்திடவும், மறைத்திடவும் பிரிட்டிஷ் அரசு நிரந்தர உறுப்பான அதிகாரவர்க்க அரசு இயந்திரத்தை மட்டும் நம்பி இருக்கவில்லை. மாறாக திரைச்சேலையாக உருவாக்கப் பட்டதே பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொழுவங்கள். இவற்றுக்கு வரம்பிற்கு உட்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உண்டு. சட்டங்களை இயற்றலாம்; சில சில்லறை சலுகைகளை வழங்கலாம். அடிப்படைக் கட்டுமானங்கள் இவர்களால் சிதைந்துபடாது. சட்டங்களை அமல்படுத்தும், நிலவக்கூடிய சமூகக் கட்டமைப்பை பாதுகாக்கும், மூல இயந்திரம் அதிகார வர்க்க ‘அரசு’ அமைப்பே!

ஆனால் அடிப்படைக் கட்டுமானம் சிதைந்து விடாதபடி, ‘மக்கள் பிரதிநிதிகள்’ எனக் கூறிக் கொள்ளும் இவர்களும் பார்த்துக் கொள்வார்கள். காரணம் இந்த முதலாளித்துவக் கட்சிகளின் கொள்கைகள் சித்தாந்தங்கள் யாவையுமே சுரண்டும் கூட்டத்துடன் ஒத்திசைந்து போவதேயாகும்.

ஆகவே அடக்குமுறை கருவிகளான அரசு எனப்படும் அதிகார வர்க்க கூட்டமாயினும் சரி; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எனக் கூறப்படும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் ஆயினும் சரி இவர்கள் இரு தரப்பினருமே சுரண்டும் கூட்டத்திற்கு – பெருமுதலாளிகள் கூட்டத்திற்கு சேவை செய்வதும், அவர்களிடம் பிடுங்கித் தின்பதுமே ஆகும். இன்னும் சொல்லப்போனால் பொருளாதார ரீதியில் அவர்கள் தரத்திற்கு இவர்களில் பெரும் கும்பல் உயர்ந்து விட்டனர் என்பதுவும் பேருண்மை.

எனவே தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் யார் யார் போராடினாலும் அரசும் அரசாங்கமும் ஒன்றிணைந்து நசுக்கும் என்பதனை கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் அவர்கள் எப்பொழுதும் கார்ப்பரேட் காவி பாசிசக் கூட்டத்திற்கு அரணாகவே நிற்பார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ,எதிர்க்கட்சியாக இருக்கின்ற பொழுது போராட்டங்களை ஆதரிப்பதும், ஆளுங்கட்சியான பிறகு போராட்டங்களை அரசு அடக்குமுறை கருவி கொண்டு நசுக்குவதும் முதலாளித்துவக் கட்சிகளால் மாறி மாறி நிகழ்ந்தேறுகின்றன. அது முதலாளித்துவ கட்சிகளுக்கிடையிலான அதிகாரப்போட்டி என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

படிக்க:

♦ தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்

♦ இந்திய நாட்டைக் கெடுக்கும் பாஜகவும் தமிழ்நாட்டைக் கெடுக்கும் தவெகவும்!

அதிலும் குறைந்தபட்ச முதலாளித்துவ அரசியல் ‘ஞானம்’ கூட அறவே அற்ற – அறிவித்துக் கொண்டுள்ள கொள்கைகளில் ஒரு வரி கூட தெரியாத –  குறைந்தபட்ச பெரியாரிய – அம்பேத்காரிய – அண்ணாவிய  கொள்கைகள் எள்ளின் முனை அளவும் தெரிந்திராத கடைந்தெடுத்த தற்குறி அரசியல்வாதி நடிகர் விஜய்யின் தவெக ஆட்சி 5 மாதங்களிலேயே அம்பலப்பட்டு அனைத்து வகைகளிலும் பல்லிளித்து நிற்கின்றது.

“… ஆகவே அரசு மிகப் பழங்காலம் முதலாய் இருந்துள்ள ஒன்றல்ல; அரசின்றியே நிலவிய சமுதாயங்கள், அரசையும் அரசு அதிகாரத்தையும் அறியாத சமுதாயங்கள் இருந்திருக்கின்றன. பொருளாதார உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் – சமுதாயம் வர்க்கங்களாக பிளவுண்ட கட்டத்தில் – இந்தப் பிளவின் காரணமாய் ‘அரசு’ (ஆளும் வர்க்கத்திற்கு) இன்றியமையாததாகியது…. பொருள் உற்பத்தி வளர்ச்சியில் இப்பொழுது நாம் விரைவாய் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.  முந்தைய ஒரு கட்டத்தில் வர்க்கங்கள் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழுந்தது போலவே, தவிர்க்க முடியாதவாறு அவை மறைந்தொழியும். அவற்றுடன் கூடவே (அடக்குமுறை இயந்திரமான) ‘அரசு’ம் தவிர்க்க முடியாதவாறு மறைந்தொழியும்…”

…ஆசான் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் மகத்தான மேற்கண்ட வரிகளை போராடும் உழைக்கும் மக்கள் பிரிவினர் அனைவரும் அதன் உண்மைப் பொருளில் உட்கிரகித்து, மென்மேலும் உழைக்கும் மக்கள் நிரந்தர விடியலுக்கான புரட்சிகர சமூக மாற்ற போராட்டப் பாதையில் பயணம் தொடருவோம்! பொருளாதாரக் கோரிக்கைகளில் மட்டுமே உழைக்கும் மக்கள் நிரந்தர விடுதலையைப் பெற முடியாது. உழைக்கும் மக்களுக்கான சரியான அரசியல் சித்தாந்த வழிமுறைகளையும் கற்றே ஆக வேண்டும். அதன் மூலமாகத்தான் விடியலைப் பெற முடியும்.

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here