மக்களின் உயிர்காத்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்!

நேற்று (07.06.2022) 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வெளியில் சாலை மறியலிலும், ஓமந்தூரார் மருத்துவமனையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தன்னுயிர் பாராது மக்கள் உயிரைக் காப்பாற்றும் மகத்தான சேவையில் ஈடுபட்டவர்கள் செவிலியர்கள். கொரோனா பாதித்து பல செவிலியர்கல் உயிரிழந்தார்கள். இந்த காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்பினர்.

கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு தொகுப்பூதிய செவிலியர்கள் பல ஆயிரம் பேர் ஒன்றுகூடி தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் சம்பளத்தை உயர்த்த கோரியும் போராட்டம் நடத்தினார்கள். இவர்களை அன்றைய அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை. “செவிலியர் வேலையில் சம்பளம் போதவில்லை எனில், வேறு வேலைக்குச் செல்லலாம். செவிலியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது” என்றுக் கூறி செவிலியர்கள் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 2018 ஆம் ஆண்டு செவிலியர்கள் போராட்டத்தினை அதிமுக அரசு கையாண்டதை கண்டித்து அறிக்கை விட்டார் மு.க.ஸ்டாலின். “செவிலியர்கள் பணி என்பது உயிர் காப்பதில் துணை நிற்கும் பணி எனவும், அதனை ‘வேலை’ என்று சொல்வதை விட ‘சேவை’ என்று சொல்வதே பொருத்தமானது” என்றும் அறிக்கையில் கூறியிருந்தார்.

 

2020 டிசம்பர் மாதம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பேசினார். அவரது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார். கடந்த மே 12 செவிலியர் தினத்தன்று செவிலியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தார்.

 அதன்பிறகு கொரோனா காலத்தில் தற்காலிகமாக MRB (Medical Recruitment Board) மூலமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தற்காலிகமாகப் பணியில் சேர்ந்த பலர் தனியார் மருத்துவமனையில் பணியை விட்டு விலகி இதில் சேர்ந்தவர்கள். காரணம் அரசுப்பணி என்பதாலும் பணிநிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையிலும் தான். ஆனால் தமிழக அரசு அவர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது..

MRB மூலமாக தேர்வு எழுதி மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு வந்து ஒப்பந்த அடிப்படையில் தான் வேலை பார்த்து வருகிறார்கள் செவிலியர்கள். இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒப்பந்தப்படி தான் தொடர்கிறது. இன்னொருபுறம் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஆர்பி மூலம் தேர்வான செவிலியர்களும் இன்னும் தொகுப்பூதியம் அடிப்படையில் தான் பணிபுரிகிறார்கள்.

இது குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கும்போது “செவிலியர் சங்கங்கள் பல உள்ளன. அதில் எந்த சங்கம் போராட்டம் செய்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் எங்களை அணுகவில்லை என்றும்,  செவிலியர்களை படிப்படியாக பணிநிரந்தரம் செய்து வருகிறோம். அவர்களைப் போராட வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் கடும் வெயிலில் ஏன் கஷ்டப்பட வேண்டும்” என்று கூறுகிறார்.

ஒரு பக்கம் போராடி வெயிலில் கஷ்டப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு மறுபுறம் போராடிய 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதான் தமிழக அரசின் அணுகுமுறையாக உள்ளது.

செவிலியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை நியாயமானது. தொகுப்பூதிய அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நிதி ஆதாரம் இல்லை என்று சொல்வதெல்லாம் சால்ஜாப்பு. பசுமடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கும் போது செவிலியர்கள் பணி நிரந்தரமும் தேர்தல் வாக்குறுதி தான். மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையே முதன்மையானது.

தமிழக மக்களே செவிலியர்கள் போராட்டத்தில் நமக்கும் பங்கு உண்டு. பேரிடர் காலத்தில் நம்மை பாதுகாத்தவர்கள் அவர்கள்தான். எனவே அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here