தேதி:07.10.2026

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரும் செவிலியர்களின் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்!

கண்டன அறிக்கை

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 05.10.2026 முதல் தங்களது நியாயமான கோரிக்கைகளான பணிநிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் செவிலியர்களின் போராட்டத்திற்கு எங்களது முழுமையான ஆதரவையும், ஒருமைப் பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய பொது சுகாதார தரப்படுத்தல் வழிமுறைகளின் படி “பொது வார்டுகளில் 6 படுக்கைகளுக்கு ஒருவரும், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஒரு படுக்கைக்கு ஒருவரும், பிரசவ வார்டுகளில் இரண்டு படுக்கைகளுக்கு ஒருவரும், நான்கு சிசுக்களுக்கு ஒருவரும் என செவிலியர்கள் இருக்க வேண்டும்” என்று வரைமுறைப்படுத்தி உள்ளது.

மக்களின் உயிரையும், உடல்நலத்தையும் பாதுகாக்கும் மிக முக்கியமான பணியை செவிலியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நோயாளிகளின் சிகிச்சை, அவசரநிலைப் பராமரிப்பு, இரவு-பகல் பாராமல் பணியாற்றுதல் என மருத்துவத் துறையின் அத்தியாவசியமான பணிச்சுமையை செவிலியர்கள் தொடர்ந்து சுமந்து வருகின்றனர்.

இத்தகைய அத்தியாவசியப் பணியை மேற்கொள்ளும் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டது. ஆனால் நிறைவேற்றாதது மட்டுமின்றி, 2025 டிசம்பர் 18ஆம் தேதி இரவில் சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் அனைவரையும் திமுக காவல் துறை பேருந்துகளில் ஏற்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் இறக்கி விட்டது.

அப்போது ஆதவ் அர்ஜுனா அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றிவிடுவோம் என வாக்குறுதியளித்தார். அதனை காற்றில் பறக்கவிட்டு தற்போது அவர்களின் முன்னணியாளர்களை பேச்சுவார்த்தைக்கு என நைச்சியமாக அழைத்து கைது செய்துள்ளது த.வெ.க. அரசு. கொஞ்ச நாட்களுக்கு முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராடினார்கள். அவர்களின் கோரிக்கையாகிய பணிநிரந்தரம் பற்றி அவர்களின் போராட்ட இடத்திலேயே சென்று ‘அண்ணன், தங்கை’ என வசனம் பேசி, ஆதரிப்பதாக ரீல்ஸ் போட்டு போராட்டத்தை கலைத்துவிட்டு சென்றது தான் மிச்சம். வேறெந்த மாற்றமும் நிகழவில்லை.

படிக்க:

♦ MRB செவிலியர்கள் போராட்டமும், தமிழக அரசின் துரோகமும்!

♦ நோயாளிகளை அவதிக்குள்ளாக்கும் திருச்சி அரசு மருத்துவமனை சரி செய்யக் கோரும் மக்கள் அதிகாரம்!

போராடுவது தூய்மைப்பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் விருப்பமான நடவடிக்கை அல்ல. தங்களது வாழ்வாதாரம், பணிப்பாதுகாப்பு, ஊதியம், பணிநிலை மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு

உரிய தீர்வு கிடைக்காத நிலையில், ஜனநாயக ரீதியாக தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்களது முக்கிய கோரிக்கைகள்:

போராடும் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்!

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது!

செவிலியர்களின் பணிச்சுமை, வேலை நேரம் மற்றும் பணிச்சூழல் ஆகியவை உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகள் முறையாக உறுதி செய்யப்பட வேண்டும்!

செவிலியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!

அரசு மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான அளவில் நிரந்தர பணியிடங்கள் மற்றும் மனிதவளத்தை உறுதி செய்ய வேண்டும்!

“மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களின் வாழ்க்கையையும் அரசு பாதுகாக்க வேண்டும்” என்பதே எங்களது நிலைப்பாடு. செவிலியர்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரத்தையும் பாதிக்கக்கூடியதாக அமையும்.

எனவே, 05.10.2026 முதல் நடைபெற்று வரும் செவிலியர்களின் போராட்டத்தை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு, போராட்டப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

செவிலியர்களின் ஜனநாயக உரிமைகளையும், தொழிலாளர் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், அவர்களது நியாயமான போராட்டத்திற்கு எங்களது முழுமையான ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.

செவிலியர்களின் கோரிக்கைகள் வெல்லட்டும்! செவிலியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படட்டும்!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

இப்படிக்கு,

R.லோகநாதன்
பொதுச்செயலாளர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here