முன்னுதாரணமிக்க இத்தாலி மாணவர்களின் எழுச்சி!
ஐரோப்பிய நாடான இத்தாலியில் அரசுக்கு எதிராக சுமார் 2,00,000க்கும் அதிகமான மாணவர்கள் 40 நகரங்களில் அணிதிரண்டு போராடி வருகின்றனர்.
ஏன் இந்த போராட்டம்?
இத்தாலியில் கடந்த 2015 ஆம் கல்வி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். அதாவது பள்ளி மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் இண்டர்ன்ஷிப்பில் (internship) படிக்கும் பொழுதே வேலைகளிலும் ஈடுபட வேண்டும். Internship என்ற வடிவத்தில் இளம் வயதினரை சுரண்டுவதே இதன் நோக்கம்.
அப்படி வேலையில் ஈடுபட்ட 18 வயது மாணவர் லோரென்சோ பரேல்லி 150 கிலோ எடையுள்ள இரும்பு மேலே விழுந்ததால் உடல் நசுங்கி பலியானார். அதே போல் கியூசெப் லெனோசி என்ற மாணவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே கோவிட்டை கட்டுப்படுத்தாத அரசின் மீது மாணவர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பெரும் போராட்டமாக வெடித்துள்ளது.
பயிற்சியா அல்லது சுரண்டலா?
2015 ஆம் ஆண்டு பள்ளி சீர்திருத்தம் ஒரு கட்டாய பயிற்சியை அமல்படுத்தியது. இந்த சீர்திருத்தம் குறித்து அவர்கள் சொன்ன காரணம், மாணவர்கள் படிக்கும் போதே பணி அனுபவத்தை பெறுகிறார்கள். மேலும் பட்டப்படிப்பு முடித்த பிறகு அவர்கள் வேலை தேடுவதற்கு வசதியாக இருக்கும் என்பது தான்.
ஆனால் நடந்தது வேறு. ஒரு வருடத்திற்கு 200 லிருந்து 400 மணிநேரம் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டும். வெளிப்படையாக கூற வேண்டுமானால் 400 மணிநேரம் தனியார் முதலாளிகளுக்கு ஓசியில் வேலை பார்த்து தர வேண்டும். இதற்கு பெயர் பயிற்சியாம். இது எவ்வளவு பெரிய கொடூரமான உழைப்பு சுரண்டல்.
ஆனால் இவர்கள் சொன்னது போல் பணி நிரந்தரம், வேலைவாய்ப்பு போன்ற எதுவும் நடக்கவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 25 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் 30% அதிகரித்துள்ளது. 18 வயதுக்குட்ட மாணவர்களை கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தினால் படித்து முடித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்.
இண்டர்ன்ஷிப் என்ற ஊதியமில்லா சுரண்டல்
“இண்டர்ன்ஷிப் (internship) என்பதே சுரண்டல் மற்றும் ஊதியம் இல்லாத வேலை” என்று உயர்நிலைப்பள்ளி மாணவர் அமைப்பான SAC ன் அமைப்பாளராக இருக்கும் லாரா கூறுகிறார். மேலும் அவர் கூறும் பொழுது பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வேலை பயிற்சி காலங்களில் ஆபத்தான நிலைமைகளை அனுபவித்து வருகின்றனர் என்கிறார்.
இந்த பாதுகாப்பு இல்லாத பயிற்சிகளை மேற்கொள்ள அரசு மாணவர்களை கட்டாயப்படுத்துகிறது என்றும் கூறுகிறார்.
நமது இந்தியாவிலும் தொழிலாளர்கள் FTE, NEEM பயிற்சி என்ற பெயரில் சொற்ப கூலிக்கு சுரண்டபடுகிறார்கள். இத்தாலிக்கும் இந்தியாவுக்குமான வித்தியாசம் இத்தாலியில் படிக்கும் போதே மாணவர்கள் பயிற்சி என்ற பெயரில் சுரண்டபடுகிறார்கள். இந்தியாவில் படித்து முடித்து காலம் முழுவதும் சொற்ப கூலிக்கு சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள்.
அடக்குமுறையை கையாளும் இத்தாலி அரசு
இத்தாலியில் பிரதமர் டிராகி, கல்வி அமைச்சர் பாட்ரிசியோ பியாஞ்சி மற்றும் உள்துறை அமைச்சர் லூசியான லாமோர்கீஸ் ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும், கட்டாய பயிற்சி சீர்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது ஆளும் அரசை குலை நடுங்க வைத்துள்ளது. மேலும் இத்தாலி NATO கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் போராட்டத்தில் அரசு அடக்குமுறையை கையாண்டு மாணவர்களை ஒடுக்கி வருகிறது. மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆசிரியர்கள், இடதுசாரி அமைப்புகள், எதிர்கட்சிகள் என பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.

இத்தாலி மாணவர்கள் போராட்டத்திலிருந்து கற்போம்!
இத்தாலியில் மாணவர்கள் கட்டாய சுரண்டலுக்கு எதிராக களத்தில் அஞ்சாமல் துணிவோடு போராடுகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம். இதேபோல் மெக்சிகோவில் கல்விக் கொள்கையை அமல்படுத்திய போது 2016-ல் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அடுத்த தலைமுறையை காக்க களத்தில் இறங்கியவர்கள் ஆசிரியர்கள். அந்த போராட்டத்தில் 10 பேர் குண்டடிபட்டு இறந்தார்கள்.

இந்தியாவிலும் கார்ப்பரேட் – காவி கும்பல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. இதில் ஆசிரியர்கள் களத்திற்கு வரவில்லை. ஒரு சில மாணவர்கள் அமைப்பு மட்டுமே போராடுகிறது. தனது குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டுமானால் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களில் அங்கம் வகிக்கும் பெற்றோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. காவிக் கும்பலின் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக அனைத்து தரப்பட்ட மாணவர்களையும் ஒரே குடைக்குள் அணித்திரட்டுவோம். குலக்கல்வியையும், நவீன சுரண்டலை நடைமுறைபடுத்தும் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இந்த மண்ணில் இருந்து அகற்றுவோம்.
நந்தன்