“கடந்த காலங்களில் திராவிடவாதிகளும் பெரியாரிஸ்டுகளும் இந்துக் கடவுள்களையும், நம்பிக்கையையும் பகிரங்கமாக அவமதித்த பல சம்பவங்கள் தண்டிக்கப்படாமல், குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரிவது வெட்கக்கேடானது.
இந்த இரட்டை நிலைப்பாடு மாநிலத்தில் மத விவகாரங்கள் கையாளப்படும் விதத்தில் அநீதி மற்றும் சார்பு உணர்வை ஆழமாக்குகிறது” என்று பார்ப்பன கும்பல் நடத்தி வரும் சமூக ஊடகமான தி கம்யூன் என்ற இணைய பத்திரிக்கை எழுதியுள்ளது.
அது என்ன பாரபட்சம்?
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் பார்ப்பன பவுரனிகர் என்று சொல்லிக் கொள்ளப்படும் திருவாளர் மகாவிஷ்ணு என்பவர் மாணவர்கள் மத்தியில் கர்மா, முற்பிறவி போன்றவற்றையும், ஊனமுற்றவர்கள் அவ்வாறு பிறப்பது சென்ற ஜென்மத்தில் செய்த பாவம் என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார்.
பள்ளி விழா ஒன்றில் மத விவகாரங்களை பேசுவதற்கு அனுமதிக்க கூடாது என்று பலரிடமிருந்து எதிர்ப்புக்கு குரல் அதிகரிக்கவே தமிழக அரசு அவரை கைது செய்து காராக்கிரகத்தில் அடைத்தது.
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் சங்கர் இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டதற்கு எதிராக ஆறுதல் அளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உடனே அந்த பள்ளிக்கு சென்று ஆசிரியரையும் பாராட்டியது மட்டுமின்றி இது போன்ற மத விவகாரங்களை பள்ளிக் கல்வித் துறையில் அனுமதிக்க முடியாது என்று உத்தரவாதப்படுத்தினார்.
இந்த சம்பவத்தையும் யூ டு புரூட்டஸ் என்ற சமூக ஊடகத்தில் மைனர் என்பவர் தொடர்ந்து இந்து கடவுளர்களையும், கடவுளர்ச்சிகளையும் இழிவுபடுத்தி காணொளிகளை வெளியிடுவதாகவும் இதுவரை அப்படிப்பட்டவர்களை தண்டிக்காத திமுக அரசு மகாவிஷ்ணு போன்றவர்களை மட்டும் தண்டிக்கிறது என்றும் கூச்சலிடுகிறது பார்ப்பன கும்பலில் இணையப் பத்திரிக்கை.
அதுமட்டுமின்றி casteless collection என்ற பாடல் இசை குழுவின் சார்பில் ஐ அம் சாரி ஐயப்பா என்ற பாடல் ஒளிபரப்பப்பட்டு பல்வேறு தரப்பினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
“இந்தப் பாடல் ஐயப்ப பக்தர்களை புண்படுத்தி விட்டதாகவும் உடனடியாக அந்தப் பாடலை பாடிய பெண் பாடகர் இசைவாணி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று பார்ப்பன கும்பலின் தலைவனான எச் ராஜா ஊளையிடத் துவங்கி விட்டார்.
ஐ அம் சாரி ஐயப்பா பாடல் இருக்கட்டும். ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற தடையை உச்ச நீதிமன்றம் கண்டித்து பெண்கள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் இன்றுவரை அதிகாரப்பூர்வமாக கோவிலுக்குள் நுழைவதற்கு தடை நீடிக்கின்றது.
படிக்க: சாமி சிலையை தொட்டதால் தலித் அடித்து கொலை! இதுதான் இராமராஜ்ஜியம்!!
இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஆண், பெண் பேதம் இல்லை என்றெல்லாம் வண்டி வண்டியாக கதையளக்கும் பார்ப்பன மதப் பிரச்சார கும்பல் சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவது, பெண் அடிமைத்தனத்தை ஆதரித்து பேசுவது மட்டுமின்றி பெண்கள் சபரிமலையில் தான் சென்று வழிபட வேண்டுமா என்று குதர்க்கமாக பேசி வருகின்றனர்.
பெண்கள் சபரிமலையில் வழிபடக்கூடாது என்று கூறுவது மட்டுமின்றி திமிர்த்தனமாக கீழ்கண்டவாறு பதில் கூறுகின்றனர்.
“ஐயப்பன் கோயில்களில் சபரிமலையில் பெண்கள் நுழைய முற்படுவது முற்றிலும் தவறான ஒரு செயல்… அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா தேவி ஆலயத்திலும் (மாதங்களில் சில நாட்களில்) ராஜஸ்தானில் உள்ள பிரம்மா கோயிலிலும் (திருமணமான ஆண்கள்) கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள குமாரி அம்மன் கோயிலிலும் (திருமணமான ஆண்கள்) பீஹாரில் உள்ள சில அம்மன் கோவில்களிலும் ஆண்கள் நுழையத் தடை அல்லது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது…
இதைப் பார்த்துவிட்டு ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று பேசுவது தவறு… ஒரு மதத்தில் உள்ள பழக்கவழக்கங்கள் அந்த மதத்தினுடைய முழு நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம்.. சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்து மதத்தில் இருந்து தோன்றியதாக சிலர் கூறுகின்றனர்…
புராண காலங்களில் தன் கணவன் தன்னை விட்டு பிரியும் பொழுது சில பெண்கள் அந்தப் பிரிவின் துயரை தாங்காமல் தன் கணவன் எரியும் தீயில் ஏறி உயிரை துறக்கின்றனர்… அதன் பின்பு இந்த சம்பவங்களை படித்த சில மகா புத்திசாலிகள் உடன்கட்டை ஏறினால் தான் ஒரு பெண் நல்லவள் என்று நினைத்து அதை வழக்கமாக்கிக் கொண்டனர்” என்றெல்லாம் பெண்கள் மீது நடத்தப்படும் ஆணாதிக்க தாக்குதல்களை ஆதரித்தும் இதன் உச்சகட்டமாக பெண்கள் உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்தியும் பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்த லட்சணத்தில் ஐ அம் சாரி ஐயப்பா என்று பாடியதால் ஐயப்பன் புனிதத்திற்கு கேடு விளைவித்து விட்டதாக ஊளையிடுகின்ற பார்ப்பன கும்பலுக்கு எதிராக தொடர்ந்து இப்பாடலை பட்டி தொட்டி எங்கும் பரப்புவோம்.
அதுமட்டுமின்றி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் ஐயப்பன் வழிபாட்டை பற்றி வெளியிடப்பட்டுள்ள பாடலையும் இந்த தருணத்தில் கொண்டு செல்வோம்.
பொன்னம்பலமேட்டில் நீண்ட காலமாக வனத்துறையின் ஆதரவுடன் பழங்குடியினர் சிலரை வைத்துக்கொண்டு கட்டி கற்பூரத்தை ஏற்றி மகரஜோதி என்று இந்த விஞ்ஞான காலத்திலும் காது குத்துகின்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராகவும் போராடுவோம்.
- பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
காராக்கிரகத்தில் அடைத்தது., இந்த வார்த்தை யின் அர்த்தம் புரியவில்லை
மேலும் cash less collection என்று உள்ளது
Cast less collection என்பது தான் சரி..
நம்ம எச் ராஜா இந்த பாடல் பற்றி பேசிட்டாரு, கண்டிப்பா இந்த பாடல் பேமஸ் ஆயிடும்,
நானும் இந்த பாடலை அனைவருக்கும் farword செய்கிறேன். நன்றி.
சிறப்பான கட்டுரை. அறிவியல் பூர்வமாக மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு அரசினுடையது! ஆசிரியர் பெருமக்களுடையது! சமூக அறிவியல் சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட புரட்சிகர இயக்கங்களுடையது!- என்பதனை ‘புதிய ஜனநாயகம் தினசரி’ சிறப்பாகவே வெளிக் கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியது! வாழ்த்துக்கள்!