ர்.பி.உதயகுமார் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் ஆவார். இவர் 2021-26 காலக்கட்டத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகியுள்ள, தவெக-வில் இணைய உள்ள சி.விஜயபாஸ்கர் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில்தான் நிதானம் கெட்டு உண்மையையும் உளறிவிட்டார்.  தாங்கள் அடித்துள்ள கூட்டுக்கொள்ளையைப் பற்றி நிதானம் கெட்டு ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

சி.விஜயபாஸ்கர் அதிமுக வில் 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சராக இருந்தார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் 2011,2016 மற்றும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

விஜயபாஸ்கர் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பிளவுப்பட்ட குழுவில் முக்கியமானவர். எஸ்.பி.வேலுமணி போல் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைய விரும்பாமல், அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.

இவர் எப்படி கட்சி மாறலாம் என்றுதான் ஆர்.பி. உதயகுமார் கொதித்துப் போய் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

ஒப்புதல் வாக்குமூலம்!

சி.விஜயபாஸ்கரை பார்த்து “நீ நேர்மையானவன் ஆக இருந்தால் உனது சொத்துகளைக் கட்சிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் போ” என்று கொந்தளித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார். மேலும்,  “சூடு சொரணை இருக்கிறதா? உப்புப் போட்டுத்தான் தின்கிறாயா?” என பேசியுள்ளார்.

விஜயபாஸ்கர் ஏன் தனது சொத்துக்களை அதிமுகவுக்கு எழுதி தர வேண்டும்? இதற்கான பதிலையும் உதயகுமாரே தருகிறார். வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டதாகவும் கதறுகிறார்.

விஜயபாஸ்கர் கட்சிக்குள் வரும்போது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இருந்த சொத்து எவ்வளவு? தற்போது கட்சியிலிருந்து விலகும் போது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள சொத்து – அதாவது கட்சியில் சேர்ந்து பெருக்கிக் கொண்டுள்ள சொத்து எவ்வளவு? அதை நேர்மையாக அதிமுகவுக்கு தந்து விட்டு போவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

“கட்சிப் பொறுப்பு வேண்டாம்; கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவி வேண்டாம் என்று அனைத்தையும் தூக்கி எறிகிறீர்களே, இந்த கட்சியின் மூலம் நீங்கள் குவித்துள்ள சொத்துகளையும் அது போல் தூக்கி எறிய வேண்டியதுதானே” என்று கேட்கிறார் உதயகுமார்.

“கடந்த பத்து வருஷமா எடப்பாடி கால பிடிச்சு எத்தனை காரியங்களை சாதிச்சுக்கிட்ட! இப்போ எம்ஜிஆர் வளர்த்த கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை, நீ சொத்து சேர்த்த கட்சியை காட்டிக் கொடுக்கிறாயா” என்கிறார். இதை அதிமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்றும் குமுறுகிறார்.

எடப்பாடி தலைமையானது ரத்தத்தின் ரத்தங்களுக்கு குவாட்டரும், பிரியாணியும், 500, 1000 ரூபாயை தாண்டி எதையும் தந்ததில்லை. அவன் எதற்கு கொந்தளிக்க போகிறான். நீங்கள் குவித்துள்ள சொத்தில் அவனுக்கும் ஏதாவது பர்சண்டேஜ், கமிஷன் தந்துள்ளீர்களா என்ன? ஒருவேளை அவன் கொந்தளிப்பதாக இருந்தால் உங்கள் அனைவரையும் பார்த்து தானே குமுற வேண்டும்.  இதுதான் உதயகுமாரை பார்த்து நாம் கேட்க வேண்டிய கேள்வி.

“உனக்கு காண்ட்ராக்ட், கல் குவாரி எல்லாம் எங்கிருந்து கிடைத்தது? உனது முதலீடுகள் எங்கிருந்து வந்தது?” என்றெல்லாம் கேள்வி எழுப்புவதன் மூலம் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார். அதிமுகவில் பொறுப்புக்கு வருபவர்கள், தேர்தலில் ஜெயித்து எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் ஆகிறவர்கள், சொத்துக்களை குவித்து வைத்துக் கொண்டுள்ளோம் என்று தம்மை அறியாமலேயே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

கேட்முன் காத்திருந்த நாய்கள்!

“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வீட்டின் முன் – கேட்டின் முன் நாய் போல் காத்துக் கிடந்திருந்து பொறுப்புகளை வாங்கிவிட்டு, இன்று அதிமுகவானது தேர்தலில் தோல்வி கண்டுள்ள சூழலில், கட்சியை காட்டி கொடுத்து விட்டு போகலாமா?” என்று கொந்தளிக்கிறார் உதயகுமார். இதன் மூலம் தான் காரியத்திற்காக வாலாட்டும் நாய்கள் என்றும்,  அதிமுகவில் இணைந்து இருப்பதே சொத்துக்களை குவிக்க தான் என்பதையும் பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

படிக்க:

 அதிமுக: அடிமைகளின் அக்கப்போர்!!

 கேனோடு சிக்கிய அதிமுக புள்ளி! ஸ்டாலின் இதை செய்வாரா?

அதாவது அதிமுக கட்சியில் சேர்ந்து பொறுப்புக்கு வந்து, காண்ட்ராக்ட் எடுத்து, சொத்துக்களை குவித்து, முதலீடுகளை பெருக்கி, சுகபோகமாக வாழ்ந்து வரலாம். அது தவறில்லை. ஆனால் அந்தக் கட்சியிலிருந்து பொறுப்பிலிருந்து விலகி, வேறு கட்சிக்குத் தாவுவது மட்டும்தான் குற்றம் என்கிறார் ஆர்.பி. உதயகுமார். அதுவும் முறைகேடாக சோர்த்த சொத்துக்களை அதிமுகவிற்கு தந்து விட்டால் அந்த குற்றமும் போய்விடுகிறதாம். என்ன ஒரு நீதி!

விஜயபாஸ்கர் கட்சித் தாவுவதில் இப்படியும் ஒரு நன்மை நடந்துள்ளது. நாங்கள் நாட்டை கொள்ளையடிக்கத்தான் கட்சியில் சேர்கிறோம் ஆட்சியைப் பிடிக்கிறோம் என்று ஆண்டவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருவது ஒருவகையில் நல்லதுக்கு தான்.

திமுகவின் சுயநலப் பார்வை!

ஆர்.பி. உதயகுமாரின் கொந்தளிப்பை  திமுகவின் சன் டிவி சந்தோசமாக ஒளிபரப்புகிறது. அதாவது அறிவில்லாமல் அதிமுக வினர் தன்னைத் தானே சேதப்படுத்திக் கொள்வதாக நினைத்து சந்தோஷமாக ஒளிபரப்புகிறது. ஆனால் முரண்நகை  என்னவென்றால், திமுகவிலும்கூட உதயகுமார்களும் விஜயபாஸ்கர்களும் நிரம்பியே இருக்கிறார்கள் என்பது தான்.

திமுகவில்  உயர் மட்டத்தில் இருப்பவர்களும் கட்சியில் சேர்ந்தபொழுது சாமானிய உடன்பிறப்பாக இருந்துவிட்டு, தற்போது மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகளாக, கல்வி வள்ளல்களாகத்தான் வலம் வருகின்றனர். தமிழகத்தின் அல்லது இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தரம் என்பது பொதுவில் இப்படியானதாகத்தான் உள்ளது. விதிவிலக்குகள் அற்பமானவையாகவே உள்ளன. உதயகுமார் விஜயபாஸ்கரை பார்த்து “கட்சியில் சேர்வதற்கு முன் உனது சொத்து கணக்கு என்ன?” என்ற  கேள்வியை இவர்களுக்கு பொருத்தினால், இவர்களும் தான் கதறுவார்கள்.

தரங்கெட்டு போகும் கட்சிகளின் எதார்த்தத்தை திமுகவானது – இன்றும் சமூக நீதி திராவிடம் என்ற கொள்கையில் பிடிப்புள்ள ஒரு சிலரேனும் புரிந்து கொள்வதும், புரிந்து தம்மை மாற்றிக் கொள்வதும்தான் அக்கட்சிக்கும், அரசியலில் நீடிக்க விரும்புபவர்களுக்கும் நல்லது.

படிக்க:

 அதிமுக என்ற கொள்ளை கூட்டத்திற்கு முடிவு கட்டும் நாள் எந்நாளோ?

 மதுரை முருக பக்தர்கள் மாநாடும் பாஜக-விடம் அடகு வைக்கப்பட்ட அதிமுக-வும்!

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை கூறு போட்டு விற்றுக் கொண்டே தாமும் ஒரு கார்ப்பரேட் முதலாளியாக வளர்வது; அல்லது, தமது புரோக்கர் வேலைக்கு ஏற்ற கமிஷனை பெற்றுக் கொண்டு திருப்தி அடைவது என்பதாகவே பெரும்பான்மையான கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன. இந்த உண்மையை நாட்டு மக்கள் படிப்படியாக புரிந்து கொண்டே உள்ளார்கள்.

ஜென்சிக்களும் படிப்படியாக அரசியல்வாதிகளின் தரத்தை புரிந்து கொள்கிறார்கள். கண் முன்னே ஊழலில் திளைத்து சாம்ராஜ்யங்களை கட்டி எழுப்பவர்களை பார்த்து வெறுப்பை காட்டுகிறார்கள். அவர்களின் அரசியல் புரிதலில் இருந்து  ஆண்டவர்கள் சரியில்லை  என்று முடிவடுத்துள்ளார்கள். தமது ஓட்டை மாற்றி போட்டு புதியவர்களான த.வெ.க.வை ஆட்சியில் அமர்த்தியும் உள்ளார்கள்.

ஊழலை ஒழிப்பது எப்படி?

வாக்காளர்கள் இனி ஆண்டுதோறும் தமது தொகுதி எம்எல்ஏவின் சொத்துக்கணத்தை பகிரங்கமாக வெளியிடும்படியும், MLA குடும்பத்தினரின் சொத்து கணக்கை பகிரங்கமாக வெளியிடும்படியும், கடந்த காலத்தில் இருந்த அவரது சொத்துக்களுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளும் வகையில் வெளியிடும்படி த.வெ.க. அரசை நிர்பந்தித்து போராட வேண்டி உள்ளது. ஆனால் இப்படி ஒரு போராட்டம் நடந்தால், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியும் இதற்கு தமது ஆதரவை தெரிவிக்காது. இதை செய்ய த.வெ.க. மறுக்கிறது என்றால், விஜய் மறுக்கிறார் என்றால், அவரும் அம்பலப்படுவார்.

மக்களுக்காக சேவை செய்ய என்று இல்லாமல், குறுகிய காலத்தில் சொத்துக்களை குவித்து, தொழில் சாம்ராஜ்யங்களை கட்டமைத்து, வேந்தர்களாகவும் கல்வி வள்ளல்களாகவும் பெரும் காப்பரேட் முதலாளிகளாகவும் வலம் வருகின்ற அனைவரையும், அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்த நிலைக்கு – அதாவது  உதயகுமார் சொற்படி  விட்டு வாசலில், கேட்டின் முன் நாய் போல் காத்து கிடந்த நிலைக்கு கீழே இறக்க வேண்டும். இதை தற்போதைய ஓட்டுக் கட்சிகள் அல்லது ஓட்டு கட்சியின் கூட்டணியில் உருவாகியுள்ள அரசாங்கங்கள் செய்யாது. உண்மையான “மாற்றை” நோக்கி தமிழக மக்கள், இந்திய மக்கள் சிந்தித்தாக வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here