ஏப் 22: ஆசான் லெனின் பிறந்த நாள்!
ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்க
தோழர் லெனின் அதிகம் தேவைப்படுகிறார்!


ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

ஏப்ரல் 22, ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனம், பாட்டாளி வர்க்கத்தின் தோழன், பேராசான் மாமேதை லெனின் பிறந்த நாள்!

இன்று பிறக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் தங்களது அல்லது தங்களது நெருங்கியவர்கள்,  மதிப்பிற்குரியவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுகின்றனர். ஏதோ ஒரு வகையில் தான் சார்ந்தவர்களுக்கு இன்பத்தைக் கொடுத்ததற்காக பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். சினிமா கழிசடைகள், ஓட்டுக்கட்சி அரசியல் பேர்வழிகளும் தங்களது இருப்பைத் தெரியப்படுத்த பிறந்தநாள் கொண்டாடிக் கொள்கின்றனர்

ஆனால், மனித சமூகத்தையே அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் மாபெரும் சித்தாந்தமாகிய மார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு, ரசிய மண்ணில் சொர்க்கத்தைப் படைத்து, உண்மையான விடுதலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் லெனின் பிறந்தநாள் ஆண்டுக்கொரு நாள் கொண்டாட வேண்டிய விசேஷமான நாளல்ல.

தோழர் லெனின்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் லெனினை வரித்துக் கொண்டு, அவரது அரசியல் வழியைப் பற்றி பயணிக்க வேண்டிய நாளாகும்.

இன்றைய அதிமோசமான அரசியல் சூழலில், கார்ப்பரேட் காவி பாசிச இருள் சூழ்ந்துவரும் வேளையில், மக்களுக்கு நம்பிக்கைக் கீற்றாக, கலங்கரை விளக்கமாக அவரை நிறுத்தி அதன்  ஒளியில் பயணிக்க வேண்டிய தருணமிது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு முதல், அரிசி, பருப்பு, எண்ணைய் என அத்தனை அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், லெனின் தலைமையிலான சோசலிச ரசியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக விலைவாசி உயராமல், மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப விலை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்பதையும், பலமுறை குறைக்கப்பட்ட பொற்கால ஆட்சியையும் நினைவு கூறாமல் இருக்க முடியுமா?

இந்தியாவில் மட்டுமல்லாது, அண்டை நாடான இலங்கையில் அமெரிக்க சீன ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத்தால் நாடே திவாலாகி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். பாகிஸ்தானில், மக்கள் நலனில் அக்கறை இன்றி, அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்காக அரசு கலைக்கப்படுகிறது. உக்ரைன் மீது மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்காக, அமெரிக்க ரசிய ஏகாதிபத்தியங்களின் சண்டையால் அந்நாடு உருக்குலைந்து கிடக்கிறது.

ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போட்டிக்காக நாடுகளைக் கபளீகரம் செய்யும் இன்றைய சூழலில், அன்றைய சோசலிச அரசின் அதி வேக வளர்ச்சி, ரசிய மக்களின் சுதந்திர வாழ்நிலையைப் பார்த்து, தங்களுக்கும் அதே போன்ற வாழ்க்கையை ஏக்கம் தீர அனுபவிக்க விருப்ப பூர்வமாக ரசியாவுடன் தாங்களாகவே இணைத்துக் கொண்ட காலம் கனவு போல் விரியுமே!

உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் சோசலிசத்தின் பலன்களை அனுபவித்த போது இருந்த உன்னதமான நிலையை தற்போது, கற்குவியல்களாக சிதிலமடைந்த தங்களது நாட்டை வெறிக்கப் பார்த்து நிற்கும் அம்மக்களை கண்கள் பனிக்க எண்ணும் போது, நினைவில் வந்து நிற்பவர் லெனினன்றி வேறு யாராக இருக்க முடியும்?

 

 

தொழிலாளர் உரிமைகளைப் போராடித் தான் பெற முடியும் என்ற வாய்ப்பை அளித்த தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும், விதிமுறைத் தொகுப்புக்களாக மாற்றி ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. 12 மணி நேர வேலை நேரமாக்கி ஊதியத்தைச் சுருக்குகிறது. NEEM, FTE போன்ற முறைகளைப் புகுத்தி, உரிமைகளற்ற கொத்தடிமைகளை உருவாக்கும் இன்றைய அரசியல் சூழலில், 8 மணி நேர வேலையையும், 6 மணி நேரமாக சுருக்கி, கட்டாய விடுப்பு, கட்டாய சுற்றுலா என தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை சுதந்திர மனநிலையுடன் அனுபவிக்கும் சோசலிச அரசை உருவாக்கிய லெனினைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாட முடியும்?

இன்று கிரீஸ், பெரு, இலங்கை என நாடுகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் உணவின்றி வீதிகளில் நிற்கின்றனர். நாடு பிடிக்கும் வெறியில் போர் செய்து நகரங்கள் கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படுகிறது. மக்கள் வீடின்றி, உணவின்றி பட்டினியோடு சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியா, பாலஸ்தீனம் என உலகம் முழுவதும் உள்ள மக்களின் நிலை இது தான். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பொருளாதார சுரண்டல் வடிவமான மறுகாலனியாக்கமும், இராணுவ சுரண்டல் வடிவமான போரும் இந்த நிலைமைகளை நாளுக்கு நாள் தீவிரமடையச் செய்து நெருக்கடிகளை விரைவுபடுத்துகிறது.

நெருக்கடிகளை சமாளிக்க ஆக கேடுகெட்ட ஜனநாயக விரோத வலதுசாரி சித்தாந்தமான பாசிசத்தை கட்டவிழ்த்துள்ளது ஏகாதிபத்தியம். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் தனது நெருக்கடிகளை மறைக்க கவர்ச்சிகரமான பொய்களை வெற்றுக் கூச்சல்கள் மூலம் மக்களை நம்ப வைக்கிறது.

உண்மையை உணர்ந்து போராடுபவர்களை கருப்புச் சட்டங்கள் மூலம் ஒடுக்குகிறது அதே சமயம், தனது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மத, இன, சாதிய சண்டைகளை உருவாக்கி மக்களை மோதவிடுகிறது.

இந்திய அரசியல் சூழலும் இவைகளைத் தான் நினைவுபடுத்துகிறது. கார்ப்பரேட் நலன்களுக்காக சட்டங்கள் அனைத்தும் திருத்தப்படுகிறது. கடன் தள்ளுபடி, வரிச்சலுகை, வரி குறைப்பு என கார்ப்பரேட்டுக்கள் கொழுக்க வைக்கப்படுகின்றனர். உலகின் 310 கோடி மக்களின் சொத்தை விட 10 பெரும் பணக்காரர்களின் சொத்து அதிகம் உள்ளது. மனிதர்கள் மத்தியிலான ஏற்றத்தாழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அற்ற, ஒடுக்குமுறை – சுரண்டலற்ற, சமதர்ம சமுதாயமான சோசலிசத்தை மண்ணில் படைத்த நமது ஆசான் லெனின் இன்றைய சூழலில் நமக்கு அதிகம், அதிகம், இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.

அப்படிப்பட்ட மாமனிதனின் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது,, அவரது அரசியலை நமது அரசியலாக, மக்கள் அரசியலாகக் கொண்டு சென்று, சோசலிச சமூகத்தைப் படைக்கும் போராட்டத்தைக் கட்டியமைத்து வெற்றி பெறுவதே அவரது பிறந்த நாளில் நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

மக்கள் கலை இலக்கிய கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here