கழிவறையிலும் கண்காணிப்பு கேமரா: சிவசேனா அரசின் வக்கிரம்!

பேராசிரியர் சாய்பாபா அவர்கள் அன்றாடம் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் ஒருநாள் கூட உயிர் வாழ முடியாது என்ற நிலையில் இருப்பவர்.

0

மும்பை நகரில் கலவரம் நடத்தி இஸ்லாமியர்களை படுகொலை செய்து இழி புகழ்பெற்ற சிவசேனா கட்சி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது.

அப்படிப்பட்ட சிவசேனா அரசு, நாட்டில் அமைதி நிலவிட ‘தீவிரவாதி’ ஒருவரின் செயல்களை துல்லியமாக கண்காணித்து அவர் பயங்கரவாத செயல்கள் எதுவும் செய்யாமல் தடுப்பது அவசியம் என்று முடிவெடுத்து செயல்பட தொடங்கியுள்ளது.

அந்த ‘தீவிரவாதி’ குளிப்பது, கழிவறை செல்வது உள்ளிட்ட அனைத்து அசைவுகளையும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்து கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா அரசு.

எதற்காக இவ்வளவு தடபுடல்? சற்று அசந்தாலும் ஓடி விடுவாரோ? என்று நீங்கள் சந்தேகிக்கக் கூடும். அந்தக் கேள்வியே இங்கு வேண்டாம்.

Also read   : பேராசிரியர் சாய்பாபாவை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

90 சதவீதம் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், தண்டுவட நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தனது வாழ்க்கையை சக்கர நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் 55 வயதான பேராசிரியர் G.N. சாய்பாபா தான் அந்த ‘தீவிரவாதி’. மக்கள் நலனில் அக்கறையும், மாறாப் பற்றும் கொண்ட சமூக செயற்பாட்டாளரான G.N. சாய்பாபா தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர். மிக மிக முக்கியமாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாக்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்.

இவரைத்தான் (கழிவறைக்கு செல்வது உள்ளிட்ட அனைத்து அசைவுகளையும்) ஒவ்வொரு நொடியும் கேமராவில் படம்பிடித்துக் கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா அரசு.

கேட்பதற்கே அருவருப்பான, மனிதத்தன்மையற்ற இந்த செயலை எதிர்த்து “இப்படி தன்னை, தனது அசைவை 24 மணி நேரமும் கேமரா வைத்து கண்காணிப்பது என்பது மனித உரிமைக்கு எதிரான செயல் எனவே அதை உடனடியாக கைவிட வேண்டும்” என்று கூறி மே 21ஆம் தேதியில் இருந்து கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் சாய்பாபா அவர்கள் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் மே 25ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறை நிர்வாகம் அவரது கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுள்ளது.

பேராசிரியர் சாய்பாபா அவர்கள் அன்றாடம் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் ஒருநாள் கூட உயிர் வாழ முடியாது என்ற நிலையில் இருப்பவர். தனது உயிர் காக்கும் மருந்துகள், படிப்பதற்கான புத்தகங்கள், துணி உள்ளிட்டவற்றை தனது குடும்பத்தினரிடம் இருந்து பெறவிடாமல் தடுப்பதை கண்டித்து 2020ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தார். அதன் மூலம், அப்பொழுது, அவர் கேட்டவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் பெற்றார்.

இப்படி சிறைக்குள் சாய்பாபாவை மனிதத்தன்மையற்ற முறையில் நடத்துவது என்பதை தனது நடைமுறையாகவே கொண்டுள்ளது மகாராஷ்டிர சிறைத்துறை.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள கீழமை நீதிமன்றம் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் செய்துள்ள மேல்முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்காமல் சிறைக்குள் மிருகத்தனமாக நடத்தப்படுவது மனித குலத்திற்கே அவமானம். பேராசிரியர் சாய்பாபாவின் உரிமைக்கு குரல் கொடுப்போம். ஊபா போன்ற கருப்புச் சட்டங்களுக்கும் அநீதியான சிறைக் கொடுமைகளுக்கும் முடிவு கட்டுவோம்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here