குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்கக் கோரி ஆர்பாட்டங்கள்!

ந்தியாவெங்கிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்று கூடி செயல்பட்டு வரும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, குறைந்தபட்ச ஆதரவு விலை (கு.ஆ.வி)யை சட்டமாக்கக் கோரி நாடு தழுவிய ஆர்பாட்டங்களை ஏப்ரல் 11 – 17 நாட்களில் நடத்த வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி தமிழ் நாடெங்கிலும் பல்வேறு ஆர்பாட்டங்களும், தெரு முனைக் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இந்த ஆர்பாட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களும், பொது நல அமைப்புக்களும் ஆர்வத்தோடு பங்கேற்றன.

சென்னையில் முலக்கடை பகுதியிலும், சேத்துப்பட்டிலும், பல்லாவரத்திலும் மேலும் பல இடங்களிலும் கு.ஆ.வி கோரி தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் திருவாரூர், தஞ்சை, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, சேலம் மாவட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கடலையூர், விளாத்திகுளம், கோவில்பட்டியிலும், சேலம், ஆத்தூர், வாழப்பாடி, அ.பட்டிணம், ஓமலூர், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கனாபுரம், சங்ககிரி பனமரத்துப்பட்டி மல்லூர் ஆகிய மையங்களிலும் ஆர்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன.

சென்னை, தஞ்சை, சேலம், விருதுநகர் மற்றும் பல இடங்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.

வேளாண் விலை பொருட்களுக்கு ஏன் குறைந்த பட்சம் ஆதரவு விலை தேவை? என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு  மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமிகு கோபிநாத் முதன்மை விஞ்ஞானி MSSRF, தோழர் காளியப்பன் மக்கள் அதிகாரம் மற்றும் SKM மாநில குழு உறுப்பினர் உரையாற்றினார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்கக் கோரி தஞ்சையில் கருத்தரங்கம்!

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பாக தஞ்சையில் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்கக் கோரி கருத்தரங்கம் ஏப்ரல் 18, 2022 அன்று மாலையில் நடைபெற்றது. பெசன்ட் அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ் மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் சாமி நடராஜன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் பொறியாளர் கோ திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் தோழர் சு பழனிராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தோழர் வீர மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தோழர் பி செந்தில்குமார், மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் கே பக்கிரிசாமி மற்றும் தோழர் சி பக்கிரிசாமி, நீர் வளத்துறை பொறியாளர் ராஜாராம், ஜனசக்தியின் ஆசிரியர் தோழர் லெனின், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தோழர்கள் பாலசுந்தரம் மற்றும் இரா அருணாச்சலம் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து பங்கேற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் நீண்ட போராட்டம் குறித்தும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டிய உடனடித் தேவை குறித்தும், இந்திய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருவதைக் கண்டித்தும் உரையாற்றினார். பெரும் முதலாளிகளுக்கு இலாபத்திற்கு உத்திரவாதமளிக்கும் இந்திய அரசாங்கம் மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதியளிக்க மறுத்து அவர்களைக் கடுமையாகச் சுரண்டி வருவதை விவசாய சங்கத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண, முதலாளிகளுடைய கைகளிலிருந்து ஆட்சி அதிகாரத்தைத் தொழிலாளர்கள் – விவசாயிகள் கைப்பற்ற வேண்டிய அவசியத்தையும், அவர்களுடைய ஒற்றுமையைக் கட்டி வலுப்படுத்த வேண்டிய தேவையையும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர் சுட்டிக் காட்டினார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக குறைந்த பட்ச ஆதரவு விலை கோரியும், விவசாய வணிகத்தில் பெருமுதலாளிகளின் தலையீட்டையும் மேலாதிக்கத்தையும் தடுக்க வேண்டியும் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்பதை உரையாற்றிய அனைவரும் உறுதிபட தெரிவித்தனர்.

தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் பொறியாளர் திரு திருநாவுக்கரசு வெளியிட்ட “வரலாறு நெடுக தொடரும் உழவர்களின் அவலங்கள் உறைந்து போன அடிமை நிலை” என்ற நூலையும், “மழைநீர் சேகரிப்பு, பாசனம் வெள்ள – வறட்சி தடுப்பு – ஒரு ஆய்வு” என்ற நூலையும் கூட்டத்தில் தலைவர்கள் வெளியிட்டனர்.

முதல் நூல், குறைந்தபட்ச ஆதரவு விலை எவ்வாறு இந்திய விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டு வருவதோடு திட்டமிட்ட முறையில் அதை மிகவும் குறைவாக வைத்திருப்பதன் மூலம், விவசாயிகளுடைய வாழ்க்கை சீரழிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும், விவசாயிகளுடைய பல்வேறு பிற பிரச்சனைகளையும் எடுத்து விளக்குகிறது. தமிழக விவசாயிகளுக்கு நிலையான நீர் ஆதாரத்தை தர ஒன்றிய அரசு மறுத்துவரும் நிலையில் நீர் வளங்களை மேம்படுத்த பல்வேறு கருத்துக்களையும், திட்டங்களையும் மழை நீர் சேகரிப்பு குறித்த நூல் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

உழவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் பிற உரிமைகளுக்கான போராட்டத்தை வருகின்ற காலகட்டத்தில் மேலும் தீவிரப்படுத்துவோம் என்ற உறுதியை தமிழ்நாடெங்கிலும் நடைபெற்ற ஆர்பாட்டங்களும், கருத்தரங்குகளும் உறுதிபட தெரிவித்துள்ளன.

நன்றி: http://tamil.cgpi.org/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here