கலெக்டர் ஏன் மேக் அப் போடல….?

கேரள மலப்புரம் மாவட்ட கலெக்டர் திருமதி ராணி சோயாமோய், பெண்கள் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய போது இப்படிக் கேட்டார்கள்.

அவர் மாவட்டத்தின் கலெக்டர், ஆனால் அவர் கையிலிருந்த கைக்கடிகாரத்தை தவிர எந்தவித நகைகளையும் அணியவில்லை, அது பெரும்பாலான மாணவர்களை ஆச்சரியப்பட வைத்தது. அவர் முகத்திற்கு பவுடர் கூடப் போடவில்லை.

சில நிமிடங்கள் மட்டுமே அவர் ஆங்கிலத்தில் பேசினார். ஆனால் அவரது வார்த்தைகளில் உறுதி நிறைந்திருந்தது.

பிறகு மாணவிகள் கலெக்டரிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள்.

கே: உங்கள் பெயர் என்ன?

ப; என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப்பெயர். நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள்.

வேறு ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டுமா?

(அரங்கிலிருந்து ஒல்லியான ஒரு மாணவி எழுந்து நின்றார்.)

கேளம்மா…

கே: நீங்கள் ஏன் மேக் அப் போடலே?

கலெக்டரின் முகம் உடனே வெளிறியது. மெல்லிய அவரது நெற்றியில் வியர்வை அரும்பியது. அவர் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது. அரங்கம் முழுவதும் ஒலிகள் அற்று திடீரென அமைதியானது.

தன் முன்னே மேசையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து ஒரு மிடறு நீரைக் குடித்தார். பிறகு ஒல்லியான மாணவியை உட்காரச் சொன்னார். பிறகு நிதானமாகப் பேசத் தொடங்கினார். (அந்த ஒல்லியான மாணவி அப்படி ஒரு இக்கட்டான கேள்வியைக் கேட்டுவிட்டார். அதை அவ்வளவு லேசில் விளக்கிவிட முடியுமா?)

“இந்த கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. ஒரு வரியில் சொல்லமுடியாத பதில் அது. கேள்விக்கு பதிலாக என் வாழ்க்கைக் கதையையே உங்களுக்குச் சொல்லப்போறேன். உங்க பொன்னான நேரத்துல பத்து நிமிசம் என் கதைக்காக ஒதுக்கி வைக்க நீங்கள் தயாராக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். தயாரா?.”….

தயார்….

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி கிராமம் ஒன்னுல நான் பிறந்தேன். ( ஒரு நிமிட இடைவெளிவிட்டு அரங்கத்தையே அவர் உற்றுக் கவனித்தார்.)

நான் “மைக்கா” சுரங்கங்கள் நிறைந்த கோடர்மா மாவட்டத்தில், பழங்குடிகள் வசிக்கும் பகுதியில் ஒரு சின்னக்குடிசையில் பிறந்தேன்.

அந்தப் பகுதி பூராவும் மைக்கா சுரங்கம் தான். அப்பா, அம்மா அதில் வேலை செய்தார்கள். எனக்கு மேலே அண்ணன்கள் ரெண்டுபேர்; கீழே ஒரே ஒரு தங்கச்சி…மழைக் காலம் வந்தா குடிசை பூரா ஒழுகும். பெற்றோருக்கு சொற்பக்கூலி, வேற வேல தெரியாது, போகவும் முடியாது, சுரங்கம் அருவருப்பான கழிசடை வேல…… எனக்கு அப்போ நாலு வயசிருக்கும், அப்பா அம்மா அப்புறம் ரெண்டு அண்ணங்களுக்கும் என்னென்னவோ நோய்கள் வந்து படுத்த படுக்கையாகி விட்டார்கள்,

அதெல்லாம் சுரங்கத்துலேருந்து ஓயாம கிளம்பிக் கொண்டேயிருக்கிற மைக்காதூசி கிளப்பிவிட்ட நோய்தான்னு… அவங்களுக்கு அப்போ தெரியாது– அப்புறமா, எனக்கு ஒரு அஞ்சு வயசிருக்கும்போது ரெண்டு அண்ணங்களும் காய்ச்சல் வந்து செத்துப்போயிட்டாங்க……(ஒரு பெருமூச்சுவிட்டு கலெக்டர் பேசுவதை சற்று நிறுத்தினார். ததும்பும் கண்ணீரோடு கண்களை மூடிக்கொண்டார்.)

பலநாள் ரெண்டு பாக்கெட் ரொட்டியும், தண்ணியும் தான் எங்க சாப்பாடு. அதிக கடுமையான நோய், காய்ச்சல் மற்றும் பட்டினியால் ரெண்டு அண்ணங்களும் செத்துப் போனாங்க.

எங்க கிராமத்திலிருந்து டாக்டர் கிட்ட போனவங்களும் இல்ல, பள்ளிக்கூடம் போனவங்களும் இல்ல. பள்ளிக்கூடம் இல்ல, ஆஸ்பத்திரி இல்ல, கரண்ட் இல்ல, கழிவறைகள் இல்ல,- இப்படி ஒரு கிராமத்தை உங்களால கற்பனை செய்து பார்க்க முடியுமா-?

ஒருநாள், அன்னைக்கு நான் கொலப்பசி, அப்பா வீட்டுக்கு உள்ளே வந்து என் கையப் பிடிச்சி இழுத்துக் கொண்டு வெளியே அழைத்துப் போனார். அப்பா எலும்பும் தோலுமாகவே இருந்தார்.

அன்று நாங்கள் போய்ச் சேர்ந்த இடம் ஒரு பெரிய சுரங்கம். மைக்கா தோண்டி எடுத்து எடுத்து அதல பாதாளத்தில் இருந்த பழங்கால சுரங்கம் அது—(காலம் போகப் போக குள்ளநரி, மைக்கா என்பதையே ஒரு வசைச்சொல்லாக ஆக்கிக்கொண்டோம்).

அந்தச் சுரங்கம் பழசு. தோண்டித் தோண்டி ஆழமாக குறுகிய பொந்துபோல உள்ளே உள்ளே போனது. அதில் தவழ்ந்து தான் போக வேண்டும். அடி ஆழத்தில் மைக்கா கனிமத்தை கைகளால் அள்ள வேண்டும். 10 வயசுக்கும் கீழே உள்ள சிறுசுகளாலதான் அப்படிச் செய்யமுடியும்.

வாழ்க்கையிலேயே முதல்முறையாக அன்னைக்குத்தான் விறுவிறுப்பாகவும் வயிறு நிரம்ப ரொட்டி சாப்பிட்டேன். ஆனா, ஆனா அதே வேகத்துல அத்தனயும் வாந்தி எடுத்தேன்.

பின்னால், முதல் வகுப்பு படிக்கிறப்ப கூட இருட்டறைக்குள்ள மைக்காவ சுவாசித்துக்கொண்டே வளர்ந்தது மறக்கவே இல்லே.

அந்தப் பகுதியில் அப்பப்போ நிலச்சரிவு வந்து அதில் வேலை செய்யும் அதிர்ஷ்டம் கெட்ட குழந்தைகள் செத்துப்போவதுண்டு. எப்போதாவது சிலர் உயிரை இனம் புரியாத நோய்கள் பறிக்கும். மொத்தத்தில் அது உயிர் சமாதி.

தினமும் எட்டு மணி நேர வேலை, கடுமையாக உழைச்சால்தான் ஒரு ரொட்டியாவது கிடைக்கும். பசி, பட்டினியால நான் ஒவ்வொரு நாளும் ஒல்லியாகவும், நீர்சத்து இழந்தும் போனேன்.

ஒரு வருசத்துக்குப்பிறகு என் தங்கச்சியும் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். நான் கொஞ்சம் தேறியதும், நாங்க நாலு பேரும் ஒன்னா வேலைக்குப் போன பிறகு பசி இல்லாம சமாளிக்கிற அளவு வந்து விட்டோம்.

ஆனால் ‘விதி’ வேறொரு வடிவத்தில் எங்களைச் சுற்றி வளைத்தது. ஒருநாள் காய்ச்சல் கண்டு படுத்திருந்த நான் வேலைக்குப் போகவில்லை. aன்று திடீரென்று பெரிய மழை பெய்தது. அந்த மழையில் சுரங்கம் சரிந்து விட்ட செய்தி கேட்டு ஓடினோம், சுரங்கம் சரிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகளை கண்முன்னாலேயே மூடிவிட்டதாகச் சொன்னார்கள், அந்த சரிவில் அப்பா, அம்மா, தங்கச்சி மூணு பேரும் சிக்கி செத்துப் போயிட்டாங்க

கலெக்டரின் இரண்டு கண்களிலும் கண்ணீர் பொங்கி வழிந்தது. அரங்கிலிருந்த எல்லோரும் மூச்சடைத்து நின்றனர். பலர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போ எனக்கு ஆறே வயசு….பிறகு அரசாங்க அகதிகள் முகாமுக்கு வந்து சேர்ந்தேன். ( இதனை அரசு அகதி மந்திர் என்று அழைக்கிறார்கள்..மொ-ர்.) அங்கே போராடிதான் படித்தேன். எங்க கிராமத்திலேயே ஆனா, ஆவன்னா படிச்ச முதல் ஆள் நான் தான். கடைசியில் இதோ கலெக்டராக உங்க முன்னாலே நிக்கறேன்.

இதற்கும் நான் மேக்அப் போடாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தமுன்னு யோசிக்கிறீங்களா?

கலெக்டர் அரங்கத்தைப் பார்வையிட்டவாறே பேசினார். இருட்டிலே தவழ்ந்துபோய் குழந்தைகளும், பெரியவங்களுமா சேமிச்ச அந்த மைக்கா எல்லாத்தையும் பயன்படுத்தித்தான் மேக் அப் சாதனங்களை, முகப்பூச்சை, உடம்பு எண்ணெயை, உதட்டுச்சாயத்தைத் தயாரிக்கிறாங்க.

மைக்காதான் ஒளிவீசும் முதல் வகை, சிலிக்கேட் கனிமம் ஆகும், பல பிரபல முக அலங்கார, அழகுசாதன கம்பெனிகள் தயாரிக்கிற பொருட்கள் அனைத்தும் இந்த உலோக கனிமப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவைதான், அவை அனைத்தும் பிரகாசிக்கக் கூடியவை பலவண்ண மைக்காதான். இன்றுவரை 20,000 குழந்தைத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து எடுக்கும் மேஜிக் பொருளான அந்த மைக்காதான் உங்கள் சருமத்தை ஒளிரச் செய்கிறது.

உங்கள் தாடையில் நீங்கள் பூசுகிற ரோஜாவின் மென்மை கொண்ட பவுடர் (Rose powder) மற்றும் அதன் மிருதுத்தன்மை அனைத்தும் அந்தச் சிறுவர்களின், குழந்தைகளின் கனவுகளைப் பொசுக்கி, வாழ்க்கைகளைச் சிதறடித்து, பாறைகளிடையே நசுங்கிக் கூழாய்ப்போன அவர்களின் ரத்தமும் சதையும் கலந்து செய்த ரசாயனம் தான்.

ஹௌ-டு-டெல்-இஃப்-யுவர்-பியூட்டி-ப்ராடக்ஸ்-ஹேவ்-எக்ஸ்பயர்டு | Be Beautiful  India

மைக்கா சுரங்கங்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள மைக்காவை இன்னமும் பொறுக்கி எடுக்கின்றன, குழந்தைகளின் பிஞ்சுக்கரங்கள்: நம் எல்லோர் அழகையும் மெருகூட்டுவதற்காக.

இப்போது நீ சொல்லு.

என் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது? பட்டினியில் செத்த என் சகோதரர்களின் நினைவைத் தள்ளிவிட்டு நான் எப்படி வயிறு நிறையச் சாப்பிடுவேன்? என் அம்மாவின் நினைவை ஒதுக்கிவிட்டு பகட்டான ஆடைகளை எப்படிப் அணிய முடியும்?, அவங்க கண்டதெல்லாம் கிழிஞ்ச சேலைதானே ?

கலெக்டர் அந்த அரங்கைவிட்டு வெளியே சென்றபோது, வந்திருந்த மாணவிகள் அத்தனைப்பேரும் தங்களை அறியாமல் எழுந்துநின்றார்கள். கலெக்டர் ,தலை நிமிர்ந்தவாறு , ஏதும் பேசாமல் ஒரு புன்சிரிப்புடன் சென்றார். கண்களில் இருந்து சொட்டும் வெந்நீரில் சிலரது முக மேக் அப்புகள் கலைந்து வழிய துவங்கியது.

000

(உயர்தர மைக்கா இன்னமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப் படுகிறது. இன்றுவரை 20,000 க்கும் மேற்பட்டஇளம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். சிலர் நோயினாலும், சிலர் நிலச்சரிவுகளினாலும் புதைக்கப்படுகின்றனர்.)

மூலம்: மலையாளம்

ஆங்கிலத்தில் கண்டெடுத்த செய்தியை முகநூல் மூலம் பகிர்ந்தவர் : கி.நடராசன்

தமிழாக்கம் : இராசவேல்

(மலப்புரம் கலெக்டர் ராணி சொயாமோய் பேசிய யூடியூப் மூல உரையும், மைக்கா சுரங்க குழந்தைத் தொழிலாளர் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரை ஒன்றும் இணைத்துள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.)

Mica in Makeup: Complete Guide (Updated 2021)

Mica in Makeup: The Problematic Mineral That Makes You Sparkle

1 COMMENT

  1. ராணியின் வாழ்க்கையைப் படித்தேன் வெந்நீர் துளிகள் இறங்கியது எனது கண்ணிலிருந்தும் தான்…..
    நல்லவேளை நான் ஆணாய் பிறந்துவிட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here