ஊருக்கு ஜனநாயகம்!
உள்ளே இனவெறி, மதவெறி!
இதுதான் பாசிசம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக சமாதானத்திற்காக பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது என்ற முகமூடியின் கீழ் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் 2007 ஆம் ஆண்டு உருவாக்கிய குவாட் அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்க பயங்கரவாதிகளின் கோட்டைக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

சொந்த நாட்டு மக்களை இன வெறி, மதவெறியில் இருந்து பாதுகாக்க துப்பில்லாத கேடுகெட்ட ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் எடுபிடிகள் அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக பசப்புகிறார்கள்.

படிக்க:

♦  போர்க் குறிப்புக்கள்: தேசவெறி பலிக்காது !

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் பிராந்திய அடியாளாக உருவாகியுள்ள, குட்டி பிராந்திய துணை வல்லரசுகள் அவ்வப்போது தனது எஜமானனுடன் கூடிக் குலாவி இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதும், அதை முதலாளித்துவ எச்சில் ஊடகங்கள் விதந்தோதுவதும் வாடிக்கையாகிவிட்டது.

உலக சமாதானத்திற்காக போர்களற்ற, அமைதியான உலகை படைக்க புதியதொரு கூட்டமைப்பு உருவாகும் நாள் தொலைவில் இல்லை.

1:99 என்ற இரு துருவ முரண்பாடுகள் முற்றும்போது அதற்கே உண்டான எதார்த்தமான தீர்வை தேடிக் கொள்வதும், அந்த தீர்வு மீண்டும் முதலாளித்துவ ஜனநாயக வகை பட்டதாக கண்டிப்பாக இருக்காது என்பதும், சோஷலிசம், கம்யூனிசம் மட்டுமே உலகை பாதுகாக்கும் என்பதும் வரலாற்றின் நியதியாகும்.

000

துப்பாக்கி மட்டும் கையிலிருந்தால்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருக்கும் ஒரு ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் சென்ற ஒரு 18 வயதுக்காரன் 18 குழந்தைகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறான்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 19000க்கும் மேற்பட்ட துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கடைக்குச் சென்று துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம்.

துப்பாக்கி உற்பத்தி செய்யும் லாபியைப் பகைத்துக் கொண்டு அங்கு அரசியல் செய்ய முடியாது. அது போல்தான் போர் ஆயுதம் செய்யும் தொழிலதிபர்களின் லாபியும்.

யார் செத்தால் எனக்கென்ன? லாபம்தான் முக்கியம் என்று ஒரு சிறிய முதலாளிகள் கூட்டமும், அது போடும் பிச்சையில் வாழும் ஓர் அரசியல் கூட்டமும்தான் உலகையே ஆட்டுவிக்கின்றன.

இதைத்தான் சுதந்திர சந்தை, தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்று பலர் கொண்டாடுகின்றனர். இந்த லட்சணத்தில்தான் உலகெங்கும் பயங்கரவாதச் செயலுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் இந்தியாவும் இருக்கிறது. சாத்தான்கள் வேதம் ஓதும் இரைச்சலின் நடுவே சுட்டுக் கொல்லப் பட்ட குழந்தைகளின் அலறல் அடங்கிப் போய்விடும். மிகச் சிறிய சவப் பெட்டிகள்தான் மிக அதிக கனமானவை.

விஜயசங்கர் ராமச்சந்திரன்.
முன்னாள் frontline ஆசிரியர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here