கரூரில் மகஇகவின் தலையீட்டால் வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தில் SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே உள்ள வெண்ணிலை புகையிலை குறிச்சனூர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி என்பவர் வேலாயுதம் பாளையம் புகலூர் முருகம் பாளையத்தை சேர்ந்த பால்காரர் ரவி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான மாட்டுப் பண்ணையில் கடந்த 4 ஆண்டு காலமாக அங்கேயே தகர கொட்டகையில் தங்கி பண்ணையத்தில் வேலை செய்து வருகிறார்.

மாடு மேய்ப்பது மாடுகளை பராமரிப்பது, சாணி அல்லுவது, கூட்டுவது போன்ற வேலைகளை செய்து வரும் பெரியசாமி தனது மனைவி, பேரக் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று ரவியிடம் 2 நாள் விடுப்பு கேட்டு தனது சொந்த ஊரான வெண்ணிலை க்கு வந்துள்ளார். பிறகு ரவி பெரிய சாமியை உடனே வேலைக்கு வரும்படி கூறியதால் அடுத்த நாள் 25.12.2025 இரவு பண்ணைக்கு வந்து விட்டார். வந்த விவரத்தை ரவியிடம் சென்று கூறவே அதற்கு ஆதிக்க சாதி வெறியுடன் ரவி பெரியசாமியை கெட்ட வார்த்தையால் திட்டி, நீ லீவு போட்டால் யார் சாணி அள்ளுவது என கேட்டு தகரக் கொட்டாய்க்குள் சென்று பெரியசாமியை சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்தி கடுமையாக தாக்கியுள்ளார் .

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெரியசாமி அன்று இரவு முழுவதும் அங்கே தங்கி அடுத்த நாள் தனது வீட்டிற்கு வந்து மனைவி மக்களை பார்த்து நடந்த விவரத்தைக் கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் கூட வாங்குவதற்கு முன் வராத காவல்துறையினர் அலட்சியமாக இருந்து வந்தார்கள்.

பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலர் தோழர் அரசப்பன் அவர்களுக்கு தகவல் கிடைத்தவுடன் மகஇக வின் மாவட்ட சட்ட ஆலோசகர் தோழர் ஜெகதீசன் மற்றும் தோழர்கள் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெரியசாமியை நேரில் சந்தித்து அவருக்கு தேவையான சட்ட உதவிகளும், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர் டிஸ்டார்ஜ் ஆகி 29.12.2025 அன்று வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் அவர்கள் ரவியை அழைத்து நேரில் விசாரித்தனர். ஆதிக்க சாதி திமிருடன் ரவி வழக்கம் போல பெரியசாமியை அடிக்கவில்லை தாக்கவில்லை என்று கூறவே நமது தரப்பில் விரிவான விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் காவல்துறையினர் வழக்கம்போல ரவியை பலமுறை விசாரணை செய்தும் அவர் மேல் வழக்குப் பதிவு செய்வதில் இழுத்தடிப்பு செய்து அலட்சியமாக நடந்து கொண்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கடந்த 05.01.2026 தேதி அன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவி மீது வழக்கு பதிவு செய்யும்படி மனு அளிக்கப்பட்டது . பின்னர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து முறையிட முயற்சி செய்யப்பட்டது. இதன் விளைவாக காவல்துறையினர் வேறு வழியின்றி பெரியசாமியை சாதிப் பெயரை சொல்லி இழிவு படுத்தி தாக்கிய பால்காரர் ரவி மீது பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (SC/ST) கீழ் 07.01.2026 அன்று வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் விளைவாக நம் அமைப்பின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட பெரியசாமிக்கு நீதி கிடைத்துள்ளது.

ஆதிக்க சாதி வெறி கும்பல்களுக்கு முடிவு கட்ட அமைப்பாய் திரள்வோம்

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 9489683347.

1 COMMENT

  1. வன்கொடுமை காரணமாக பதிக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு சட்ட ரீதியாக உதவி செய்து வழக்கு பதிவு செய்ய முன் முயற்சி மேற்கொண்ட கரூர் ம.க.இ.க. தோழர்களுக்கும் சட்ட உதவி செய்த வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! எனினும் வழக்குப் பதிவு செய்ததோடு விட்டுவிடாமல் குற்றவாளியை உடன் கைது செய்து தக்க தண்டனை வழங்கத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here