திரு.வை.வெங்கடேசன், 23-4-2022 அன்று காலை இயற்கை எய்தினார்

(தலைவர், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்) விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.

சென்று வாருங்கள் அய்யா!

அய்யா, கல்வி உரிமைக்கான போராட்டக்களத்தில் பல ஆண்டுகள் உங்களோடு பயணித்த நினைவுகள் என்றும் அழியாது!

நாங்கள் தொடர்ந்து உங்கள் நினைவுகளோடு செல்வோம்!

சென்று வாருங்கள் அய்யா!

பிரதிபலன் பாராமல் மக்களுக்காக தொண்டு செய்பவர்களின் மரணம் உன்னதமான கண்ணீர்துளிகளால் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் மரணம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் மனம் ஏற்க மறுக்கிறது.

இன்னும் சில காலம் எங்களோடு இருந்திருக்கலாம் என மனம் ஏங்குகிறது.

எடுத்த செயலை எத்தனை தடை இருப்பினும், அதை செய்து முடிக்கும் உறுதி, துணிவு, அதற்கான அயராத உழைப்பு என உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டோம்.

நீங்களும் சிறியவர் என பாராமல் அடக்கத்தோடு இயக்கமாக செயல்பட்ட எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள். எப்படிக் கற்றுக்கொள்வது என்பதை உங்களிடம் கற்றுக்கொண்டோம் அய்யா,

மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எங்களுடன் இணைந்த நமது அரசியல் நட்பு, நேற்று உங்களை இறுதியாக நானும் எஸ்.கேவும் சந்தித்தபோது கட்டிலில் படுத்தபடியே போயிட்டு வாங்க சார், என கரம் கூப்பி வழியனுப்பி வைத்த காட்சிதான் இறுதி என்பதை நாங்கள் நினைத்து பார்க்கவில்லை.

ஒவ்வொரு வரியிலும் சார் சார் சார் என அன்பு கலந்த, பொறுப்பு கலந்த, மரியாதை கலந்த, உணர்ச்சி கலந்த உவகையோடு என்னை அழைப்பவர்கள் யாரும் இல்லை அய்யா.

அரசு நிறுவனங்களை கடிதங்கள் மூலம் கதற வைக்கும் உங்கள் எழுத்து கூர்மையும், தொடர்ச்சியான முயற்சியும் அழகான கையெழுத்தும் உங்களுக்கு நிகர் யார் இருப்பார்?. கல்வி உரிமைக்காக, எத்தனை மாநாடுகள், எத்தனை ஆர்பாட்டங்கள், எத்தனை தெரு முனை பிரச்சாரங்கள், எத்தனை முற்றுகை போராட்டங்கள், சைக்கிள் பிரச்சாரம், மாரத்தான் ஓட்டம், உண்ணாவிரதம் நீதிமன்ற வழக்குகள் என எங்கள் வயதோடு போட்டி போட்டுக்கொண்டு தாங்கள் செயல்பட்டது, போராட்டத்தின் வசந்த காலம் அய்யா.

உங்கள் பணிகளை மக்கள் அறிவார்கள் சென்று வாருங்கள் அய்யா.

“நான் அய்யா பேசுறேன்“ என பேசுவதற்கு யாருமில்லை அய்யா. தங்களை பிரிந்த நிலையில் உணர்வுகள் கட்டுப்பட மறுக்கிறது. சென்று வாருங்கள் அய்யா! உங்கள் பிரிவு உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல எங்களுக்கும், எனக்கும் பெரிய இழப்பு அய்யா, காலம்தான் ஈடு செய்யும்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
நாள் 23-4-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here