உத்திரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் ஒரே துப்பட்டாவில் தூக்கில் தொங்கவிடப்பட்டது அம்மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பின்மையை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை தற்கொலை என்று மறைக்கப் பார்க்கிறது உபி போலீஸ்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து மணிக்கொரு முறை மோடி பேசுவதெல்லாம் வெற்றுப் பேச்சு என்றும் நடைமுறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலை நிகழ்த்தக்கூடிய கட்சியாகவே பாரதிய ஜனதா இருப்பது நிரூபணம் ஆகி உள்ளது.
காவி சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயதுடைய சிறுமியும் அவரது தோழியான 15 வயது சிறுமியும் மாந்தோப்பில் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர். ஃபரூக்காபாத்தில் உள்ள பகௌதிபூர் கிராமத்தில் உள்ள மாந்தோட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 26 திங்கட்கிழமை இரவு காணாமல் போன இருவரும் 27 செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு சிறுமிகளும் போலீசாரால் பிணமாக மீட்கப்பட்ட உடனேயே காவல்துறை இதனை தற்கொலை என்று இறுதி செய்தது கிராம மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதற்கான காரணங்களாக இரண்டு சிறுமிகளின் உடலில் எந்த வித காயங்கள் இல்லை என்றும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்றும் தெரிவித்து இது தற்கொலை என்று நியாயப்படுத்துகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இதே போன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்தது. இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இதனை அடிப்படையாக வைத்து ARTICLE 15 என்ற இந்தி படமும் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்றும் வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் தலித் சகோதரிகள் மேல் சாதி ஆணாதிக்க வெறியனால் கொல்லப்பட்டது தெரியவந்தது.
தற்போது கொல்லப்பட்ட இரண்டு சிறுமிகளும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இம்மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் ஏராளம். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு நாக்கு துண்டிக்கப்பட்டு ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்டார்கள் என்ற விவரம் வெளிவரவில்லை. எப்படியாவது இந்த கொலை பெரிதாக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறது உபி காவல்துறை. அதனால் தான் ஆரம்பத்திலேயே தற்கொலை என்று அறிவித்துள்ளது. ஊடகங்களிலும் இந்த செய்தி பரவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தற்கொலை அல்ல, கொலை தான் என்பதை ஊர் மக்களும் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர்களும் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 17 வயது சிறுமியின் தந்தை The Print இணையதளத்திடம் கூறுகையில் தனது மகள் 50 கிலோ எடையும், 15 வயது சிறுமியின் எடை 35 கிலோவாகவும் இருக்கையில் இளைய பெண்ணின் எடையை விட தனது மகளின் உடல் உயரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது என்கிறார். (இருவரும் இரண்டு துப்பட்டாக்களை இணைத்து ஒரே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தார்கள்)
17 வயது சிறுமியின் அத்தை வீட்டிற்கு வந்து சென்று வந்த இருவரும் இரவு மீண்டும் ஜென்மாஷ்டமி விழாவை காண சென்றுள்ளனர். இரவு 1:15 வரை திரும்பாததால் சிறுமியின் அத்தை வீட்டிற்கு போன் செய்து கேட்டுள்ளனர். அங்கும் வராததால் நள்ளிரவில் சிறுமிகளை தேடி சென்று உள்ளனர். அதிகாலையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக பார்த்தவர் கிராமத்திற்கு தகவல் அளித்துள்ளார். கடும் இருட்டில் இருவரும் எப்படி தோட்டத்திற்கு சென்றிருக்க முடியும் என்று கேள்வியெழுப்புகிறார் 15 வயது சிறுமியின் தந்தை. “எங்களுக்கு நீதி வேண்டும் இது கொலையா என போலீசார் விசாரிக்க வேண்டும் என் மகள் தற்கொலை செய்து இருக்க முடியாது” என்கிறார்.
சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட மற்றொரு கிராமவாசி ஆகஸ்ட் 26 அன்று மழை பெய்ததை சுட்டிக்காட்டி உள்ளார். சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவர்களின் காலிலும் மரத்திலும் சேறு படிந்து இருக்க வேண்டும் அத்தகைய அடையாளங்கள் காணப்படவில்லை என்கிறார்.
“சிறுமிகள் யாருடனும் பகை இல்லை ஆண்களுடன் தொடர்புகளும், மோதல்களும் இல்லை அப்படி இருக்கும் பொழுது இருவரும் சேர்ந்து ஏன் தற்கொலை செய்திருக்க வேண்டும்” என்று 15 வயது சிறுமியின் தந்தை கேட்கிறார்.
“பிரேத பரிசோதனையில் இந்த சம்பவம் கொலை அல்ல, தற்கொலை என்றும் சிறுமிகளின் உடலில் காயங்கள் இல்லை என்றும், பாலியல் வன்கொடுமைகளுக்கான தடயங்கள் இல்லை என்றும்”, ஃபரூக்காபாத் தலைமை மருத்துவ அதிகாரி அவ்னிந்திரசிங் தி பிரிண்ட்டிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஊர் மக்களோ சிறுமியின் தலையில் முள் இருந்ததாகவும் உடலை தகனம் செய்யும் முன் பார்த்தோம், அதில் சிறுமியின் மார்புக்கு கீழே காயம் இருந்ததாகவும் கூறுகிறார். இதனை மறுக்கும் காவல் அதிகாரி பழத்தோட்டங்கள் முட்கள் நிறைந்ததாக இருந்ததால் தடயங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார். அப்படி இருக்கும் பட்சத்திலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஏன் குறிப்பிடப்படவில்லை?
இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிவுகளை இறந்தவர்களின் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர். விசாரணை கோரியுள்ளனர். ஃபரூக்காபாத் எஸ்பி அலோக் பிரியதர்ஷி பாதிக்கப்பட்டவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்த பின்னரே புதன்கிழமை காலை உடலை தகனம் செய்தனர்.
இதுவரை சந்தேக மரணமாக கிராம மக்களால் பார்க்கப்படும் 2 சிறுமிகளின் வழக்கில், மக்களுக்கு ஏற்படும் அடிப்படையான சந்தேகம் கூட காவல்துறைக்கு ஏற்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி தான் என்றாலும், இதெல்லாம் பாஜக ஆளும் உத்திர்பிரதேசத்தில் சகஜம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
படிக்க:
♦ 6 ஆண்டுகளில் 190 கொலைகள்! உத்திரபிரதேச போலீசின் ரத்த வெறியாட்டம்!!
கடந்த வாரம் உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் அரசை புகழ்ந்து பதிவிடும் நபர்களுக்கு 8 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதாவது தொழில்முறையில் பொய்யை பரப்பும் கும்பலுக்கு சம்பளம் அளிக்கிறார்.
அந்த வகையில் இந்த 2 சிறுமிகளின் கொலை குறித்து இந்நேரம் எத்தனையோ பொய்களையும், அவதூறுகளையும் பரப்பியிருப்பார்கள். அதற்கு அதிகார வர்க்கமான போலீசையும், துணைபோகும் மருத்துவ அதிகாரிகளையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
சமீபத்தில் ஊடகவியலாளர் ரண்விஜய்சிங்கின் பதிவை பார்க்க முடிந்தது. யோகி ஆதித்திய நாத் ஆட்சியின் பெருமை என்னவென்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உபி முதலிடம், பெண்களை கடத்துவதில் உபி முதலிடம், பாலியல் வல்லுறவு குற்றங்களில் உபி முதலிடம், கொலை குற்றவாளிகளில் உபி முதலிடம், சிறைக் கொலைகளில் உபி முதலிடம், வரதட்சணை கொலைகளில் உபி முதலிடம் என தேசிய ஆவண காப்பக தகவலை எடுத்துக் காட்டி குறிப்பிட்டிருந்தார்.
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், சுரண்டலும் அதிகரித்து வருகிறது. இது பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தால் அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்கிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால் மாநிலத்தை முடக்கும் அளவுக்கு போராட்டங்களை தூண்டி கலவரமாக மாற்றுகிறது.
அவர்களின் நோக்கம் பெண்கள் மீதான அடக்குமுறை ஒழிப்பதல்ல. மாறாக அதனை பயன்படுத்தி எவ்வாறு அரசியல் செய்வது என்பதே. ஊடகங்களை தங்களது நோக்கத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி செய்திகளை முடக்குகிறது. அதனால் தான் 2 சிறுமிகளின் கொலை தேசிய அளவில் பேசுபொருளாகவில்லை.
கொல்லப்பட்ட 2 சிறுமிகளும் ‘இந்துக்கள்’ என்றே சட்டம் சொல்கிறது. அப்படியென்றால் பாஜக அமைக்கத் துடிக்கும் ‘இந்துராஷ்டிரம்’ யாருக்கானது? இவர்களை ஆட்சியதிகாரத்தில் நீடிக்க விட்டால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே!
- நந்தன்