டந்த ஆறு ஆண்டுகளாக உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அவர் முதல்வர் ஆனபிறகு, இந்த மாநிலத்தில் மார்ச் 2017 லிருந்து தற்போது வரை 190 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; 5591 பேர் போலீசாரால் சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது பற்றி லக்னோ நகரில் நடந்த போலீசார் நினைவேந்தல் நாள் நிகழ்ச்சியில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கண்ட புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் சட்ட ஒழுங்கை வலுப்படுத்துவதற்கும் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை உருவாக்குவதற்கும் கிரிமினல்கள் மத்தியில் சட்டத்தைப் பற்றிய பயத்தை விதைப்பதற்கும் தான் தனது அரசு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக அரசு பதவிக்கு வந்ததிலிருந்து தற்போது வரை
69,332 பேர் மீது குண்டர் சட்டத்தையும் 887 நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் போட்டுத் தாக்கியுள்ளதாக பெருமை பொங்க யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்றால் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடுகள் அவசியமானவை என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைத்து வருகிறது பாஜக அரசு.

6 ஆண்டுகளில் 190 கொலைகள்! உத்திரபிபிரதேச போலீசின் ரத்த வெறியாட்டம்!!

ஒரு நபர் கொல்லப்பட்டு விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நபரை “நான் தான் கொன்றேன்” என்று ஒரு நபர் போலீசாரிடம் சரணடைகிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அவர் தான் கொலைகாரர் என்று தீவிரமான விசாரணை இன்றி உறுதியாக கூறிவிட முடியுமா? என்றால் முடியவே முடியாது.

ஏன் எனில், உண்மையான கொலைகாரன் இந்த கொலையைப் பற்றிய விசாரணையை திசை திருப்பி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, வேறு ஒரு நபரிடம் ஏராளமான பணத்தை கொடுத்து இந்த கொலையை தான் தான் செய்தேன் என்று ஒப்புக் கொள்ளும்படி செய்திருக்கவும் வாய்ப்புள்ளது. இம்மாதிரியான திசை திருப்பல்களை இந்திய நீதிமன்றங்கள் கண்டுள்ளன.

உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத நபர்களை, காவல்துறையினரே, போலி மோதலில் கொன்று வழக்கை முடித்துவிடும் நிகழ்வுகளையும் இந்தியத் திருநாடு கண்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “விசாரணை” என்ற திரைப்படத்தை பார்த்தால் இதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

உத்திரப் பிரதேச போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் குறித்து போலீசார் கூறும் கதைகள் நம்பவே முடியாத அளவுக்கு ஒரே மாதிரியாக உள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட நபரை அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அல்லது சந்தேகத்துக்கிடமான நபர்களை ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்களிலோ அல்லது மேம்பாலத்திற்கு கீழோ அல்லது சோதனைச் சாவடிக்கு அருகிலோ பண்ணை அல்லது கால்வாய்க்கு அருகிலோ (இவர்கள் எல்லா நிகழ்வுகளிலும் மோட்டார் சைக்கிளில்) வந்ததாகவும், அப்படி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் உடனே அவர்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் எனவே போலீசார் தற்காப்பிற்காக திருப்பிச் சுட்டதாகவும் மேலும் அவர்களிடம் இருந்து (315 bore ரக) நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றியதாகவும் காவல்துறை ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளன.

குற்றச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்களையும் கூட உத்திரப் பிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பதை எப்படி புரிந்து கொள்வது? விசாரித்தால் தான் உண்மை தெரியும் என்ற நிலையில் காவல்துறையினரே சந்தேகத்திற்குள்ளான நபர்களை விசாரணை இன்றி சுட்டுக் கொல்லலாம் என்ற நிலை இருக்கிறது என்றால் என்ன பொருள்? அங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல; மக்கள் ஆட்சி அல்ல. காவலர்கள் தான்– காவலர்கள் மூலமாக பாசிச பாஜகவினர்தான் அந்த மாநிலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலைதான் மாநிலத்தில் நிலவுகிறது என்று பொருள்.

தங்களுக்கு ஒத்துழைக்காத நபர்களை அல்லது தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் நபர்களையும் கூட காவல்துறையினர் சுட்டுக் கொல்ல முடியும் என்ற நிலை தான் உத்திரப்பிரதேசத்தில் உள்ளது. போலீசாருடன் இணக்கமாக செல்லாததற்காக தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயராஜ் ,பென்னிக்ஸ் என்ற இரு நபர்களை போலீசார் அடித்துக் கொன்றது நம் நினைவிற்கு வருகிறதா இல்லையா? இப்படிப்பட்டவர்கள் மக்களைப் பற்றி தீர்ப்பு எழுதலாம் அவர்களைச் சுட்டும் கொல்லலாம் என்ற நிலை உத்திரப்பிரதேசத்தில் உள்ளது என்றால் அங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியா, காட்டாச்சியா?! இல்லை. அது அதற்கு மேலே , அங்கே நடப்பது பாசிச ஆட்சி.

அரசியல் ரீதியாக ஆதாயம் அடைவதற்காகவும் அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்காகவும் சாதாரண மக்களை துன்புறுத்துவதற்காகவும் குண்டர் சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு அடிக்கடி தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் என்பது தற்காப்பிற்காக நடத்தப்பட்ட எதிர் தாக்குதல்கள் என்று போலீசார் கூறி வருகின்றனர். ஆனால் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் எதார்த்தமாக நடந்தவைகள் அல்ல; மாறாக அவை திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:

அதுமட்டுமின்றி , உத்திரப் பிரதேசம் மாநில அரசு குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக அலகாபாத் உயர்நீதிமன்றமே, சில நேரங்களில், தனது கவலையை தெரிவித்துள்ளது.

இத்தனைக்குப் பிறகும் உத்தரப்பிரதேசத்தில் போலீசாரால் நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகள் நியாயமானவை தான் என்று கூறுபவர்களுக்கு சில கேள்விகள்….

மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பிரக்யாக்சிங் என்ற பெண் சாமியாரை (அவர் இப்பொழுது பாஜக எம்பி ஆக உள்ளார்) விசாரணை இன்றி சுட்டுக் கொல்லலாமா?

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண்-னை கைது செய்ய வேண்டும் என்று
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினார்களே அந்த பிரிஜ் பூசனை விசாரணை இன்றி சுட்டுக் கொல்லலாமா?

குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது “இஸ்லாமிய பெண்கள் பழம் போன்று இருக்கிறார்கள்…. அந்த பெண்களை எங்கள் ஆட்கள் சுவைத்தார்கள் …. நானும் ஒரு பழத்தை சுவைத்தேன்” என்று பாபு பஜரங்கி என்ற பார்ப்பன பயங்கரவாதி கூறினானே– அவன் பேசிய காணொளி இணையத்தில் வந்துள்ளதே. அவனை விசாரணை இன்றி சுட்டுக் கொல்லலாமா?

குஜராத் படுகொலையின் போது “இந்துக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு முழுமையாக அனுமதியுங்கள்” என்று குஜராதின் அன்றைய முதல்வர் மோடி கூறியதாக காவல்துறை அதிகாரி சாட்சியம் கூறினாரே…. குஜராத் படுகொலையை மோடியும் அமித்சாவும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்…. என்று குற்றச்சாட்டு உள்ளதே அவர்களையும் மேற்கண்ட முறையில் தண்டிக்கலாமா? சங்கிகளின் ஆதரவாளர்களே பதில் சொல்லுங்கள்!

  • பாலன்
    செய்தி ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here