பத்திரிக்கை செய்தி

 

ஒப்பந்த முறையில் இராணுவத்தில் வேலை – அக்னிபாத்!

ராணுவத்தில் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களின் ஆத்திரத்தால்
ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக வட மாநிலங்கள் பற்றி எறிகிறது!

வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராடினால் சனிக்கிழமை புல்டோசர் வரும் என பேசிய பா.ஜ.க தலைவர்கள் எங்கே?

ஜெய்ஸ்ரீராம் சொன்னால் ராணுவத்தில் பணிநிரந்தரம் – மற்றவர்கள் காவி பாசிச குண்டர்படையில் கலவரம் செய்ய சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கு பெயர் மோடியின் அக்னிபாத்!

அக்னிபாத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!

டந்த ஜூன் 14 அன்று குறுகிய கால இராணுவ சேவைக்கு அக்னி வீரர்கள் என்ற பெயரில், 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நான்கு வருடங்கள் காண்ட்ராக்ட் முறையில் பணியாற்ற, அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மோடி அரசு.

அத்திட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாளே, பீகார் மாநில இளைஞர்கள் அதை எதிர்த்துப் போராடத் துவங்கினர். கல்வீச்சு, ரயில் எரிப்பு சம்பவங்கள் என பீகார் மாநிலமே கலவர பூமியானது.

பீகாரைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், தெலுங்கானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், ஜம்மு மற்றும் டெல்லி என போராட்டங்கள் பரவி வட மாநிலங்கள் பற்றி எரிகிறது.தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தை அடக்க போலிசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில், ஜிண்டில் உள்ள லிஜ்வானா எனும் கிராமத்தில், ஆயுதப் படைக்கு தயாராகி வந்த 23 வயது இளைஞர், இந்தப் புதிய திட்டத்தால் ஏமாற்றமடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

மாதம் ஒன்றுக்கு ரூ. 30,000 முதல் 40,000 வரை ஊதியம் தரப்படும். மாத சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணி முடியும் போது மொத்த தொகையும் வட்டியுடன் வழங்கப்படும். பணிக் காலத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், 14 லட்சமும், உடல் ஊனம் ஏற்பட்டால், ஊனத்திற்கு ஏற்பவும் இழப்பீடு வழங்கப்படும் எனும் வாய்சவடால் அறிவிப்புகள் நிரம்பி வழிகின்றன.

போராட்டம் நடந்து வரும் வட மாநிலங்களில் வேலை மற்றும் தொழில் வாய்ப்புக்கள் என்பதே அரிதினும், அரிதாகி விட்டது. படிக்காத, பள்ளிப் படிப்பைத் தாண்டாத இளைஞர்கள் தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்களுக்கு படையெடுக்கும் அதே நேரம், ஓரளவு படித்த இளைஞர்கள், இராணுவ வேலையை நம்பி இருக்கின்றனர். குறிப்பாக, இராணுவ சிப்பாய்கள் என்ற அளவில் இவர்களுக்கு கடைநிலை வேலைவாய்ப்புக்களே சாத்தியமாக உள்ளன. தங்களது வேலைவாய்ப்புக்கான நம்பிக்கையாக இருந்த இராணுவமும், காண்டிராக்ட்மயமாக்கும் மோசடியால், வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிவிட்டதே என்ற கோபம் பாஜவுக்கு எதிரான போராட்டங்களாக வெடித்து கிளம்பியுள்ளது. மேலும், ஏற்கனவே ஒன்றரை லட்சம் வீரர்கள் இராணுவத்திற்கு தேர்வாகி இன்னும் பணியில் சேர்க்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இந்நிலையில் நான்காண்டுகளுக்கு காண்ட்ராக்ட் என்ற அறிவிப்பு நமக்கும் பொருந்துமோ என்ற பயம் அவர்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும், குறைந்தது ஒரு இளைஞரையாவது ஆயுதப்படைக்கு அனுப்பாத கிராமம் பீகாரில் இல்லை. மாநிலத்தில் இரண்டரை முதல் மூன்று லட்சம் மாணவர்கள் ஆயுதப் படைகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். குறுகிய கால அக்னிபாத் திட்டம் அவர்களுக்கு ஒரு சாபமாக மாறியுள்ளது என்கிறார், வேலை தேடுபவர்களுக்கு பிரபலமான பயிற்சித் திட்டங்களை நடத்தும் எஸ்.கே.ஜா.

இராணுவம் என்பதை அரசு வேலைவாய்ப்புத் துறையாக பார்த்து வரும் இளைஞர்களுக்கு மோடி அறிவித்திருக்கும் இத்திட்டத்தில், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த தொடர் பணப்பலன்களும் கிடையாது. நீண்ட வேலை வாய்ப்புக்கான உத்திரவாதம் எதுவும் கிடையாது. தொழில்வாய்ப்புக்களுக்கு கடன் பெறுவது உள்ளிட்ட சில முன்னுரிமைகளைத் தாண்டி அக்னி வீரனால் வேறு எதையும் பெற முடியாது என்பதுடன், இது இராணுவத்திலும் காண்ட்ராக்ட் வேலைமுறையைப் புகுத்தும் திட்டமாகும்.

படிக்க:

தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 விதிமுறைத் தொகுப்புக்களாக மாற்றி, நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் முற்றாக ஒழித்துக் கட்டி விட்டது மோடி கும்பல். HIRE and FIRE முறையால் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்திலும் நீக்கமற புகுத்தப்பட்ட காண்டிராக்ட் முறை இராணுவத்திலும் நீட்டிப்பு செய்துள்ளது.

மறுபுறம், இந்திய இராணுவத்தை, காவிமயமாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டமே இது.

ஏற்கனவே, இந்துமதவெறி சங்கி கும்பலாக, இசுலாமிய வெறுப்பால் சலவை செய்யப்படும் ஒரு பிரிவு வடமாநில இளைஞர்களுக்கு, அரசின் செலவில் நான்கு ஆண்டுகள் ஆயுதங்களைக் கையாளுவது உள்ளிட்ட பயிற்சிகள், ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் அடியாட்களை உருவாக்குவதற்கான ஷாகா-வாக இராணுவத்தை மாற்றும் என்பதை மறுக்க முடியாது. இனி, இராணுவ சேவை, நாட்டுப்பற்று, தேசபக்தி என்பதெல்லாம் பித்தலாட்டம் என்பதை மோடியே அறிவித்து விட்டார்.

ராணுவ தளவாட உற்பத்தி தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் தனது ஆர்.எஸ்.எஸ். மதவெறியை, இந்து – இந்தி – இந்தியா என்ற தேசிய வெறியைக் கிளப்பும் அடியாட்படைகளாகத் தான் இத்திட்டம் உருவாக்கும். நான்காண்டுகள் கழித்து வெளிவரும் அக்னி வீரர்கள் முழு ஹிந்துத்துவ பயங்கரவாதிகளாகவே வெளிவருவார்கள்.

நாட்டின் பாதுகாப்பு என்பது, அரசு முடிவு செய்யும் இடத்தில் இருக்கும் போது மட்டுமே முடிவுகள் அரசு சார்ந்ததாக இருக்கும். எதிர்காலத்தில் காண்டிராக்ட் முறையில் ஒரு தனி முதலாளியின் கைக்குப் போனால் அந்த முதலாளிக்கு ஏற்ப நாட்டின் பாதுகாப்பு வளைக்கப்படும்.

எனவே, அரைகுறை இறையாண்மை கொண்ட நமது நாட்டிற்கு அரசின் கட்டுப்பாட்டில் இராணுவக் கட்டமைப்பு இருப்பதே மக்களுக்கு எதிராக தான் பயன்படுத்தப்படும் நிலையில், காண்ட்ராக்ட் முறை என்றால் நாட்டுப் பாதுகாப்பு மட்டுமல்ல மக்களின் பாதுகாப்பும் முற்றிலும் கேள்விக்குள்ளாகும்.

ஆகவே, இளைஞர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நாட்டின் ஒற்றுமையை- பாதுகாப்பை கருத்தில் கொண்டும் நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரும் அக்னி பாத் எந்த வடிவத்தில் வந்தாலும், எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here