உக்ரைனில் என்ன நடக்கிறது?

நேற்று வாக்கிங் போகும்போது கோபால்சாமி சார் ‘ உக்ரைனில்
போர் ஏற்பட வாய்ப்புண்டா?’ கேட்டார்.

கோபால்சாமி சார் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர். உலக அரசியல், இலக்கியம் எனப் பரந்த வாசிப்பு அனுபவம் உடையவர்.

இடதுசாரி அனுதாபி. இவரைப் போன்று மானுடத்தை நேசிக்கும் அனைவரிடமும் போர் எதிர்ப்பு மனநிலை இருக்கிறது.

போர் என்பது சாகசம் இல்லை. அது ஒரு நோய். எல்லா போரிலும் தோற்கடிக்கப்படுவது உண்மையும் எளிய மனிதர்களுமே.

எனக்கு ஐன்ஸடின் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. ‘ மூன்றாவது உலகப்போர் எந்த ஆயுதத்தைக் கொண்டு நடக்குமென்று தெரியாது. நான்காம் உலகப்போர் குச்சிகளாலும் கல்லாலும்தான் நடைபெறும் !’
என்றார் ஐன்ஸ்டின்.

ஆம் மூன்றாம் உலகப்போர் நடந்தால் உலகம் கற்காலத்துக்கு திரும்பியிருக்கும். கார்ப்ரேட்டுகள் தங்கள் கார்களை, செல்ஃபோன்களை, துப்பாக்கிகளை, ஏவுகணைகளை, டாலரோ யூரோவோ இல்லாத மனிதர்களிடம் எப்படி விற்கமுடியும்? போரில் முதலாளிகள் அழியப்போவதில்லை. பொருளாதாரம் அழியும்.

போர் பதற்றம் இருக்கும் நிலையிலேயே பங்குச் சந்தைகள் சரிகின்றன. பெட்ரோல் விலை ஏறுகிறது. பொருளாதாரம் தாருமாறாகிறது. சந்தையை அழிக்கும் வேலையை முதலாளிகள் செய்யப்போவதில்லை.

இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன் . நீயும் வரக்கூடாது! என்பதாகத்தான் வல்லரசுகளின் மோதல் இருக்கும்.

இந்த நம்பிக்கையில்தான் ‘போர் நடக்க வாய்ப்பில்லை! ‘ என கோபால்சாமி சாரிடம் சொன்னது.

உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வளமான நாடு. இதன் எல்லையோர நாடு ரஷ்யா. உக்ரைனில் பெரும்பாலான மக்கள் ரஷ்யமொழியும் பேசுகிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்த நாடுதான் உக்ரைன். சோவியத் சிதறியபோது தனி நாடாக மாறியது. உலகின் தானியக் களஞ்சியம் என செழித்திருந்த நாடு. அதன் வளம்தான் உக்ரைன் மீது அமெரிக்கா ஆசைப்படக் காரணம்.

தனிநாடாக உக்ரைன் மலர்ந்தபோதும், ஆட்சியாளர்களின் சுயநலம், ஊழல், முதலாளித்துவத்தின் சுரண்டலால் பொருளாதாரத்தில் இந்நாடு வீழ்ச்சியைச் சந்தித்தது.

இந்நிலையில்தான், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது எனும் முடிவை, அமெரிக்க ஆதரவுடைய உக்ரைன் வலதுசாரி கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இதை உக்ரைன் முதலாளிகள் விரும்பினாலும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் விருமாபவில்லை. அவர்கள் ரஷ்யாவோடு இணக்கமாக இருப்பதையே விரும்பினார்கள்.

ஐரோப்பாவோடு இணைந்த ஸ்பெயின், கிரிஸ் போன்ற நாடுகளின் இன்றைய நிலையை அறிந்த உக்ரேனியர்களுக்கு ஐரோப்பாவுடன் இணைவதிலும் சம்மதமில்லை.

அவர்கள் தங்களது சுயேச்சை அடையாளத்தோடு வாழவே விரும்புகிறார்கள்.

லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் மேற்குலக நாடுகளின் தொடர் முயற்சியின் ஓர் அங்கமே உக்ரைனை ஐரோப்பிய பொருளாதாரம், ராணுவத்தோடு இணைக்கும் முயற்சி.

இதற்கு தடையாக இருக்கிறது ரஷ்யா. ஆனால் அமெரிக்க ஆதரவுகொண்ட இந்திய ஊடகங்களோ உக்ரைனில் போர் ஏற்பட ஏதோ ரஷ்யாதான் காரணம் என்பதுபோல் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன.

1. தீவிர வலது நாஜி கொள்கையுடைய கட்சிகள். 2. ரஷ்யசார்பும் கம்யூனிச சித்தாந்தமும் கொண்ட கட்சிகள். 3. உக்ரைனின் தனித்தன்மையை விரும்புகிற அரசியல் இயக்கங்கள். என உக்ரைனில் மூன்றுவிதமான அரசியல் இயக்கங்கள் செயல்படுகின்றன.

இத்தகைய கொதிநிலையை அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகள் பயன்படுத்தி, அங்கு அரசியலில் நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்து இவை தம் நிழலரசுகளை அமைத்தன.

சோவியத் ஒன்றியத்தோடு இருந்தபோது, உக்ரைன் குடியரசு வியத்தகு முன்னேற்றதை கண்டிருந்தது. விவசாயம், கல்வி,தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என அனைத்திலும் ஏறுமுகத்தில் திகழ்ந்தது. ஏற்றத் தாழ்வற்ற நிலை அங்கு காணப்பட்டது. சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியமாகவும் அது திகழ்ந்தது.

இன்றைய போர் பதற்றத்தின் பின்னிருப்பது, ஒன்று , உக்ரைனின் வளமான மண்ணை அபகரிப்பது. மற்றொன்று உக்ரைனை பாதுகாக்கிறேன் பேர்வழி என உக்ரைனில் நேட்டோ படைகளை நிறுத்தி ரஷ்யாவை அச்சுறுத்துவது! போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேராசையே.

ஈராக், ஆப்கானிஸ்தான் எகிப்து, துனீஷியா, லிபியா, பஹ்ரைன்
போன்ற நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் குழப்பத்தையும், கலகத்தையும் உருவாக்கிய அதே அமெரிக்க புத்திதான் இன்றைய உக்ரைன் போர் பதற்றத்திற்கும் காரணம் .

ரஷ்யா மீது தவறே இல்லையா? எனும் கேள்வி எழலாம். உக்ரைனில் உக்ரேனியர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அங்கு எந்தவொரு ஏகாதிபத்தியமும் ஆதிக்கம் செலுத்துவதை ஆதரிக்க முடியாது. அதேவேளை உக்ரைனுக்கு இயல்பான கூட்டாளியாகத் திகழ அமெரிக்காவைவிட ரஷ்யாவுக்கே அதிகம் நியாயம் இருக்கிறது!

  • கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here