சிவந்த கண்கள் கவனிக்கட்டும்!
செயலுக்காக கிளர்ந்து எழட்டும்!

திமுக அரசை விமர்சித்து வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருந்த யூடியூபர் மாரிதாஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அதற்கே சிலர் அதிர்ச்சியடைந்து எதிர்வினையை தெரிவித்தனர்.

கொலைகாரன் ஆஷிஷ் மிஸ்ரா இந்திய ஒன்றிய யூனியன் அமைச்சரான அஜய் மிஸ்ராவின் தறுதலை மகன். அவர் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த விவசாயிகளின் மீதான ’கார் கொண்டு தாக்குதல்’ நடத்திய கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்ட அஷிஸ் மிஸ்ரா தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு இந்த பிணையை வழங்கியுள்ளது.

லக்கிம்பூர் கேரி கொலை நடந்த இடம்

கார்ப்பரேட் கொள்ளைக்காக ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலினால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேச விவசாயிகளுக்கு, இந்த வழக்கை ஒட்டி கைது செய்யப்பட்ட தறுதலையின் அப்பனான இந்திய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா விவசாயிகளுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார்.

அமைச்சர் என்ற அந்தஸ்துடன் திரியும் ரவுடியான அஜய் மிஸ்ராவின் கொலை மிரட்டலை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு அணிதிரண்டு கொண்டிருந்தபோது தான் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவனது மாமன் உள்ளிட்ட குண்டர்கள் அடங்கிய கொலைகார கூட்டம் ஒன்று வரிசையாக கார் ஊர்வலம் நடத்தி அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி 8 விவசாயிகளை படுகொலை செய்தனர்.

கொலைகாரன் ஆஷிஸ் மிஸ்ரா

இந்த கொலைவெறி தாக்குதலை நாடு முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கண்டித்தன. அதன் பிறகே அந்த தறுதலை கைது செய்யப்பட்டான். அவனுக்குதான் 4 மாதங்களுக்குள் பிணை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இது போன்ற கொலைவெறித் தாக்குதல்கள், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்பலி மற்றும் கடுங்குளிர், மழை ஆகியவற்றை எதிர்கொண்டுதான் டெல்லியில் போராடிய விவசாயிகள் வெற்றி கண்டனர்.

3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மோடி அரசு ஓராண்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு அடிபணிந்து பின்வாங்கியது.. இந்த போராட்டங்கள் மூன்று அம்சங்களை நமக்கு உணர்த்துகிறது.

முதலாவதாக 2014 ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுக்கடங்காத மதயானை கூட்டம் போல அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை இந்திய சமூகத்தின் மீது திணித்து வெறியாட்டம் போட்டு வந்த மோடி அரசுக்கு இது முக்கியமான பின்னடைவாக கருதப்படுகிறது.

இரண்டாவதாக விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டி அடித்துவிட்டு அவர்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு குறைந்த கூலிக்கு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் கார்ப்பரேட்டுகளின் நிர்ப்பந்தத்தை உடைக்கின்ற வகையில் இந்தப் போராட்டத்தின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மூன்றாவதாக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் மூலம் உலகை மறுபங்கீடு செய்துகொள்வதற்கு துடித்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின், நிதி மூலதன கும்பலுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மரண அடியை கொடுத்த, சமகாலத்தில் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியுள்ளது.

இந்திய அரசியலில் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளும் தேர்தலை செயல்தந்திர ரீதியாக பயன்படுத்தும் புரட்சிகர இயக்கங்களும், கட்சி சார்பற்ற விவசாய இயக்கங்களும் ஒன்றிணைந்து இந்த மகத்தான வெற்றியை ஈட்டி உள்ளனர். எனினும் விவசாயிகளின் இந்தப் போராட்ட வெற்றியை சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆளும்வர்க்கத்தினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

5 மாநில தேர்தல் அதனை ஒட்டியே பாசிச மோடி அரசு பின் வாங்கியுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு இதையே வேறு வடிவங்களில் கொண்டு வருவார்கள் என்றெல்லாம் சிலர் தங்களது அவதானிப்புகளை முன் நிறுத்தி தனது அரசியல் மேதமையை காட்டி வருகின்றனர். அவ்வாறு மீண்டும் வேறு வகைகளில் கொண்டு வந்தால் மீண்டும் போராட்டம் தொடரும் என்பதே நிலைமையாகும்.

ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலகெங்கிலும் உள்ள உணவு உற்பத்தி மற்றும் மூலப்பொருள் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. அதுபோலவே பூமிக்கடியில் கிடைக்கின்ற புதைபடிவ எரிபொருள்களையும் அதற்கான ஆதாரங்களையும் கட்டுப்படுத்துகிறது அந்த திசைவழியில் உலகம் முழுவதும் உள்ள நிலங்களையும் கட்டுப்படுத்துவதற்கு விரும்புகிறது.

இப்படிப்பட்ட கொடூரமான ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக போராடிய விவசாயிகளைதான் கொடூரமாக கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆசிஸ் மிஸ்ரா தான் தற்போது பெயிலில் வெளி வந்துள்ளார்.

நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் யோக்கியதை என்ன. பீமா கோரேகான் வழக்கில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்ற போலியான பொய்க் குற்றச்சாட்டின் பேரில் இடதுசாரி மற்றும் ஜனநாயக ரீதியில் செயல்படுகின்ற செயல்பாட்டாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

பாதிரியார் ஸ்டென்சாமி தனது தள்ளாத வயதில் சிறைக்குள்ளேயே இருந்து மாண்டு போனார். ஆந்திரத்து புரட்சிக்கவிஞர் வரவரராவ் நினைவு தப்பி குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது கூட அவரது பிணை மறுக்கப்படுகிறது. சுதா பரத்வாஜ் பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால பிணையில் வெளி வந்துள்ளார். மார்க்சிய அறிஞரும் தலித்திய ஆய்வாளருமான ஆனந்த் டெல்டும்டே இன்று வரை பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்களின் மீது புனையப்பட்ட உள்ள வழக்குகள் அனைத்தும் பெகாசஸ் உளவுக் கருவியின் மூலம் அவர்களின் இணையதளங்களில், லேப்டாப்களில், தனிப்பட்ட இணைய கணக்குகளில் உள்ளே புகுந்து போலியான ஆவணங்களை திணித்து, அந்த ஆவணங்களை கைப்பற்றி அதை ஆதாரமாகக் கொண்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் மற்றும் ஓரளவுக்கு சமூகத்தை நேசிக்கின்ற ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இதை எதிர்த்து மிகப் பெரிய கொந்தளிப்பு எதுவும் நிகழவில்லை. ஆனால் ஒன்பது பேரை கொலை செய்த கொலைகாரன் 4 மாதங்களில் பெயிலில் வெளி வருகிறார். அவருக்கு சட்டரீதியான வழக்கு நடத்துதற்கான உரிமையும், நீதிபதிகள் ”நீதி வழங்கத் தக்கவகையில்” உரியவாதமும் நடத்தப்பட்டதன் காரணமாக வெளிவந்துள்ளார்.

இந்தியாவில் நிலவுகின்ற அரசியல் சாசனம் மற்றும் கிரிமினல், சிவில் சட்டங்கள் அனைத்தும் இதுபோன்ற கொலை பாதகர்களையும், பஞ்சமா பாதகங்களை செய்யும் அயோக்கியர்களையும் சுதந்திரமாக நடமாடவிட்டு உள்ளது. ஆனால் நாட்டின் மீது உண்மையான பற்று கொண்ட தேசபக்தர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது.

பரந்துபட்ட மக்களை அரசு பயங்கரவாத அடக்குமுறையின் மூலம் வாயை மூட வைத்துவிடலாம் என்று பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் தினவெடுத்து திரிகிறார்கள். சொல்லிக் கொள்ளப்படும் நீதிமன்றமும் அதில் கூலிக்கு மாரடிக்கும் நீதிமான்களும் சட்டத்தையும், ஒழுங்கையும் பாஜகவின் காலடியில் போட்டு அதற்கு சன்மானம் பெற்று தனது உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

ரமணா போன்ற நீதிபதிகள் ஒருசிலர் கேள்வி எழுப்பினாலும் அவர்களுக்கு எந்த நேர்மையான பதிலும் கிடைப்பதில்லை. இனியும் இந்த நாட்டில் சட்டம், நீதி பெரும்பான்மை மக்களைப் பாதுகாக்கும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதையே ஆசிஸ் மிஸ்ரா லக்கிம்பூர் கெரி வழக்கில் குறுகிய காலத்தில் பிணையில் விடுதலையான சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here