” பெருகிவருகுது புரட்சி நம்பிக்கை ! “


மே 4 அன்று டெல்லியில், மக்கள் உரிமைப் போராளி ( UAPA, ஊபாவின் கீழ் அடைக்கப்பட்டுள்ள, சிறு வயதிலேயே  போலியோ நோயால் பாதிக்கப்பட்டு செயலிழந்த கால்களோடு,  அண்டா–முட்டை வடிவ தனிமைச் சிறையில்   தற்போது அடைபட்டு வதைபடும் )தோழர் சாயிபாபா -வின்  ” எமது வழியைப் பார்த்து ஏன் இப்படி அஞ்சுகிறாய் ? ” என்ற “சிறைக் கவிதைகள், கடிதங்களின் தொகுப்பு    (வெளியீடு : பேசும்புலி,டெல்லி ) ” டெல்லியில் வெளியிடப்பட்டது.

பேராசிரியர் சாய்பாபா

நூலுக்கு முன்னுரை சாய்பாபாவின் மனைவி   தோழர்.A.S. வசந்தகுமாரி எழுதியுள்ளார். தோழரைச் சந்திக்க அவர் சிறைக்கு வரும்போதெல்லாம் அவர்களின் உயிர் போன்ற தாய்மொழி தெலு(ங்)குவில் பேசமுடியாது; பரிமாறும் கடிதங்களிலும் அவர்களைப் பிணைக்கும் தாய்மொழி மறுக்கப்பட்டது.

நூல்வெளியீட்டு  விழாவில்  பேசிய  வசந்தகுமாரி இதைச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பினார் : ” எனக்கு ஆங்கிலம் அதிகம் வராது. தாய்மொழி மறுக்கப்படுவது எத்தனை வலிதரும் விசயம் ? ” அவர் மேலும் சொன்னார் : ” ஆள்தூக்கிச் சட்டமான  ஊ பா கீழ் கைதான சாய்பாபா மீதான வழக்கு சதித்தனமானது.எந்தக் கிரிமினல் குற்றத்தையும் அவர் செய்யவுமில்லை , அதற்கு சாட்சியமும் இல்லை…….இந்த நாங்கள் சமமான ஒரு உலகம் மக்களுக்கு வேண்டும் என்று கனவு கண்டோம். சோறும் வீடும் (உரிமைகளும்) கேட்பது  யாருக்குக் கேடு  செய்யும் ? இதில்தான் அரசு சதியைத் தேடுகிறது. அவர்களை எதிர்க்கும் சித்தாந்தத்தை  அவர்களால் பொறுக்கமுடியவில்லை.”

எழுத்தாளர் அருந்ததிராய்

எழுத்தாளர் அருந்ததிராய் பேசும்போது, சட்டீஸ்கர் பிராந்தியத்தில்  அரசு அரங்கேற்றிய  பயங்கரத்துக்கு எதிராக சாய்பாபாவோடும்  மற்ற தோழர்களோடும்   அரசியல் பிரச்சாரம் செய்ததை நினைவுகூர்ந்தார் ” அரசைப் பொறுத்தவரை மக்களுக்கான அறிவுஜீவிகள் எல்லாம் பயங்கரவாதிகள். நம்காலத்தின் முக்கியமான அறிவாளிகளில் ஒருவர் ஆனந்த் தெல்தும்டே. இடதுசாரி அரசியல் சாதிஒழிப்பு இயக்கத்தைச் சந்திக்கும் இடத்தில் அவரது சிந்தனை இருக்கிறது. அதனால்தான் அவர் ஊபாவின்கீழ் சட்ட விரோதச் சிறையில் இருக்கிறார்; அதனால்தான்  சாய்பாபா சிறையில் இருக்கிறார்; அதனால்தான் உமர்காலித் சிறையில் இருக்கிறார்….உண்மையான புரட்சிக்காரன் இடது அரசியலைப் புரிந்துகொண்டாக வேண்டும்.சாதி வெறி, மதவெறி  முதலாளித்துவ–கார்ப்பரேட் அதிகார பீடங்களைப் புரிந்துகொண்டாக வேண்டும்.அதனால்தான், சாய்பாபா போன்றவர்களைப் பார்த்து  ( இந்த இணைப்புக்களைப் பற்றி அவர்புரிந்து கொண்டுள்ளார், அவற்றையே பேசினார்.)  ஆளும் அதிகார வர்க்கம்  பயப்படுகிறது ” என்றார் அருந்ததிராய்.

ஆனந்த் தெல்தும்டே

விழாவில் பேசிய எழுத்தாளர் மீனா கந்தசாமி

” தாய்மொழியில் தொடர்பு கொள்வது  அரசு மறுப்பது கழுத்தை அறுப்பதற்குச்  சமம் ” என்று சாடினார். மேலும் “சாய்பாபாவின் கவிதைகளில்  அவரது சொற்கள் புரட்சிநம்பிக்கையைப் பேசுகின்றன ” என்றும் தொட்டுப் பேசிச் சென்றார். “…..இந்துத்துவாவுக்கு வெளியே  ( அதைத் தூக்கி எறிந்துவிட்டு) ஓர் உலகத்தைப் படைக்கப் போராடவேண்டும். அதற்கு அவர் கூறும் புரட்சிநம்பிக்கை தேவை” என்றார் மீனா கந்தசாமி.

புரட்சி நம்பிக்கைகளைச் சிறையிட முடியாது !

படிக்க:

♦  பேராசிரியர் சாய்பாபாவை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!
♦  சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு பிணை மனு நிகாரிப்பு!

2018-ல் சாய்பாபா சிறையிலிருந்து எழுதிய

” உனது வருகைக்காகக் காத்திருப்பது எத்தனை அழகானது ? ” என்ற கவிதை  இதோ:

உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்
எத்தனை ஆழ்ந்த அழகு அது.
பல திசைகளிலிருந்தும் வந்து நிரம்பும்செய்திகள் நடுவே—
இயற்கையற்ற மரணங்கள்,
துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கான
கசப்பும் கரிப்பும்  கலந்த போர்கள்,
அன்றாட வாழ்வின் மனிதச் சீற்றம் சூறை—
இப்படி நிரம்பும் செய்திகள் நடுவே
காத்திருக்கிறேன்.

என் கூட்டுக்குள் தடுக்கப்பட்ட உறவுகள்,
துரத்தப்பட்ட காதல்,
மறுக்கப்பட்ட இதயங்களின் தாய்மொழி.
பின்னாலிருந்து  ஒரு பெண்—
எப்போதும் நினைவூட்டுகிறாள்:
“இந்தி மட்டுமே பேசு”.

மங்கிய கண்ணாடித் தடுப்பின் இந்தப்பக்கம் நிற்கும்
என் நாவில் சொற்கள் எழ மறுக்கின்றன,
பாசம் நேசம் மிக்க உயிரான என்மொழி
மறுக்கப்படுகையில் எப்படிப் பேசுவேன் ?

அன்பே நீ  எனக்கு
நெடுஞ்சுவர்களின் இப் பக்கம் அன்னியமாகிவிட்டாய்
தடுப்பின் அருகே வேவுக்கண்கள் துளைத்திருக்க,
தொங்கும் கூர்வாள்கள் இதயம் கிழிக்க காத்திருக்க
தடுப்புவழியே பேசுவது வலி எடுக்கிறது.

பல ஆயிரம் கல் தொலைவிலிருந்து
அன்பே நீ ஓடிவருகிறாய்—
முற்றுகையிடப்பட்ட
என் உள்ளத்தை இதப்படுத்த.

நம்மிடையே தள்ளாடும்  அமைதியில்
அருளப்பட்ட சிலநிமிடங்களும் கரைந்து போகின்றன.
சிறைக்கம்பிகளுக்குப் பின்னால்– காலம்
வேகமாக நரையேற்றுகிறது– நான்
பச்சைப்பசேலெனத் தழைத்திருக்கும்
உன் புன்சிரிப்பை இறுகப் பற்றுகிறேன்,
–விசித்திரமான
தற்கால சச்சரவுகளை எதிர்த்து நின்று
உயிர்த்திருக்கவும் மனிதனாயிருப்பதற்கும்.

உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்,
உன்வரவோ ஒவ்வொரு முறையும்
கொந்தளிப்பு , மிகுந்த வலி
இருவருக்குமே!

ஆம், நசீம் இக்மத் * சொல்கிறான்—

” நம்பிக்கையே வாழ்க்கை
வாழ்வது பாரதூரமான விவகாரம்,
அன்பே உன்னைக் காதலிப்பது போல !”

( நசீம் இக்மத் : துருக்கி நாட்டின் புரட்சிக் கவிஞன்.)

(தோழர் சாய்பாபாவின் சிறைக் கவிதைகள், கடிதங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய செய்தி)

ஆதாரம் : The wire,  5.5.2022.

எழுத்தாளர் : ஜானவி சென்.

தமிழில் மறு ஆக்கம்  : புதிய புத்தன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here