பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பெண்தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் ஒப்பந்தத்தின் மூலம் அரண் அமைத்த #JUSTICE_FOR_JEYASRE இயக்கம்!


டை உற்பத்தியில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற H&M நிறுவனம் தலித் பெண் தொழிலாளர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு பணிந்து தனது ஆலைகளில் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக ஒப்பந்தத்தின் மூலம் உறுதியளித்துள்ளது.

பட்டப்படிப்பு முடித்து நல்ல வேலைக்கு சென்றால் வாழ்க்கையில் கரையேறி விடலாம் என்று எல்லா உழைக்கும் மக்களும் ஆசை படுவது போலவே ஜெயஸ்ரீயின் ஆசையும் அமைந்திருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீதான் அந்த ஊரின் முதல் பெண் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்க வைக்க பெற்றோர்களுக்கு வசதியில்லாத நிலையில் வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் படிப்பைத் தொடர வேண்டும் என்ற கனவோடு 18 வயதில் தன் ஊருக்கு அருகில் இருந்த Natchi apparels எனும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

Natchi apparels நிறுவனமானது இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமான Eastman exports-க்கு சொந்தமான நிறுவனமாகும். இது உலகின் மிகப் பிரபலமான பிராண்டான H&M நிறுவனத்திற்கு ஆடைகளை தயாரித்து தரும் சப்ளையர் நிறுவனம் ஆகும்.

மாலை 4:30 மணியிலிருந்து விடியற்காலை 1 மணி வரையான ஷிபிடுகளில் தொடர்ச்சியாக வேலையையும் கல்வியும் பக்குவமாக கையாண்டு தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஜெயஸ்ரீ. 2020ஆம் ஆண்டு இறுதியில் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் தமிழ் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க தொடங்கியிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 1, 2020 ஆங்கில புத்தாண்டு அன்று ஜெயஸ்ரீ மர்மமான முறையில் கொல்லப்பட்டார். விசாரணையில் ஜெயஸ்ரீயை கொன்றது அவருடன் பணிபுரியும் மேற்பார்வையாளர் என்பது தெரியவருகிறது. அவர் குறித்து மற்ற பெண் தொழிலாளர்களிடம் விசாரித்த பொழுது அவர் தொடர்ச்சியாக பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது. ஜெயஸ்ரீ இதுகுறித்து பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

ஜெயஸ்ரீ கொலையான பின்பு அவருடன் பணிபுரிந்த சக பெண் தொழிலாளர்கள் 25 பேர் சேர்ந்து The guardian நாளிதழின் மூலம் தங்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்த பேட்டி அளித்தனர். இதன் பின்னர் எழுந்த அழுத்தத்தால் பணம் கொடுத்து விஷயத்தை சரிகட்ட முயற்சித்து ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்தது ஆலை நிர்வாகம்.

நல்லவேலையாக ஜெயஸ்ரீயும் அவரது தாயாரும் Tamilnadu textile and common labour union (TTCU) எனும் தலித் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து வந்துள்ளனர். TTCU சங்கம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்காக தமிழகத்தில் ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் 11000 பெண் தொழிலாளர்களை (ஏறத்தாழ 8௦%) உறுப்பினர்களாக கொண்ட சங்கமாகும். ஜெயஸ்ரீயின் மர்ம மரணம் மற்றும் ஜெயஸ்ரீ குடும்பத்தின் மீதான நிர்வாகத்தின் நெருக்கடி குறித்து அறியப்பெற்ற TTCU சங்கம் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ஆதரவாக களமிறங்கி நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு முடிவுகட்டியது.
அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக இயக்கம் நடத்தி வரும் Asia Floor Wage Alliance மற்றும் Global Labor Justice- International Labor Rights Forum ஆகிய இரு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்தது.

கோவையை சேர்ந்த பத்திரிக்கையாளரான சௌமியா அவர்களின் முயற்சியால் சர்வதேச ஆங்கில நாளிதழான The Caravan-ல் ஜெயஸ்ரீ கொலை குறித்து செய்தி போடப்பட்டது. இந்தியாவின் எந்த ஆங்கிலப் பத்திரிகையும் இது குறித்து கவனம் கொடுக்கவில்லை. எனினும் கடந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியில் சர்வதேச அளவில் The Guardian இது குறித்த செய்தி வெளியிட்டுள்ளது

அடுத்த சில மாதங்களில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் கொரோனா பேருந்தொற்று பாதிப்புகளையும் மீறி சர்வதேச அமைப்புகளின் உதவியோடு TTCU வால் சர்வதேச இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது.

#JUSTICE_FOR_JEYASRE எனும் Hashtag வாயிலாக மேலை நாடுகளை தலைமையிடமாக கொண்ட H&M உள்ளிட்ட சர்வதேச அளவில் ஆலைகள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு தங்கள் ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும், பணியிடங்களில் நிகழும் பாலியல் வன்முறைகளையும் களையும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தக் கோரி சர்வதேச அமைப்புகள் மூலம் அழுத்தம் தரப்பட்டது.

லண்டனில் உள்ள H&M நிறுவனத்தின் முன் போராட்டம்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்ட ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் ஒப்பந்த முறை அல்லது அவுட்சோர்சிங் முறையிலேயே தெற்குலக நாட்டு நிறுவங்களை தனக்கான பொருட்களை உற்பத்தி செய்ய வைத்து கொள்முதல் செய்து கொள்கின்றனர். இது உற்பத்தி முறையை மேம்படுத்த என்று நிறுவனங்களால் காரணம் கூறப்பட்டாலும் மறுபுறம் தொழிலாளர்கள் சார்ந்த சிக்கல்களால் உலகளவில் இயங்கும் தங்கள் Brand பெயருக்கு களங்கமோ-பாதிப்போ வருவதை தவிர்கவே இத்தகைய முறைகளை ஒரு தந்திரமாக பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய ஆலைகளால் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகினாலும் மறுபுறம் இங்கு பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு எளிதான இலக்கக்கும் ஆபத்தான வேலை நிலைமைகள் குறித்து இந்த சர்வதேச தெரிவதில்லை.

படிக்க:

♦  பாலியல் குற்றவாளிகளை மக்கள் மத்தியில் தண்டிக்கவேண்டும்!

பாலியல் குற்றவாளிக்கு 53 ஆண்டு தண்டனை. சட்டம் கடமையை ஆற்றாது! போராட்டமே தீர்வு!

United nations Guiding Principles on Business and Human Rights உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தொழிற்சாலைகளில் மனித உரிமைகளை காத்திட தொடர் முயற்சியின் தேவை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும். நிறுவனங்கள் அதில் பெரிய அக்கறை காட்டுவதில்லை. இதற்கு நிர்வாக சிக்கல்களை ஒரு காரணியாக நிறுவனங்கள் முன்வைக்கின்றன. தங்கள் ஆலைகள் பல்வேறு நாடுகளில் இருப்பதாலும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு சட்டங்களும்-வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பதாலும் மனித உரிமை மீறல் புகார்களின் மீதான முடிவுகள் எடுப்பது பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல, TTCU கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பெண் தொழிலாளர்களின் மீது ஆலைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மற்றவர்களை ஒருங்கிணைத்து போராடி வருகிறது. தொழிற்சாலைகளில் நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், அவதூறு பேச்சுக்கள், சாதி ரீதியான தாக்குதல்கள், உணவு மற்றும் இடைவெளி நேரங்களை மறுத்தல்,பாகுபாடு, சட்டவிரோத சம்பள வெட்டு, பணிக்கொடை மறுத்தல், மிகைநேர பணிக்கான சம்பளம் மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் குற்தது ஆவணப்படுத்தி வருகிறது.

மார்ச் 2021ல் முன்னெடுக்கப்பட்ட #JUSTICE_FOR_JEYASRE இயக்கத்தின் முதல் வெற்றியாக இருதரப்பும் ஒப்புக் கொள்ளும் வகையில் Eastman Exports நிறுவனத்திடமிருந்து கனிசமான நஷ்டஈட்டை ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு TTCU பெற்றுத்தந்தது.

கடந்த ஏப்ரல் 2021-ல் காணொளிஅழைப்பின் மூலம் நடைபெற்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தில் 33 நாடுகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் ஜெயஸ்ரீயின் தோழிகள் மற்றும் சக தொழிலாளர்களும் கலந்துகொண்டு “Don’t Kill Me On Fashion” எனும் முழக்கத்தை தாங்கிய சுவரொட்டியின் மூலமாக தங்கள் கருத்தை உலகத்திற்கு கேட்கும் வகையில் ஓங்கி ஒலித்தனர்.

இந்த நிகழ்வு TTCUவின் தலைவர்களான திவ்யராகினி மற்றும் ஜீவா ஆகியோருக்கு பல அமெரிக்க நகரங்களில் மனித உரிமை சார்ந்து இயங்கும் அமைப்புகள், மக்கள் திரள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் தலைவர்களிடம் ஆழ்ந்து ஐக்கியப்பட்டு திட்டங்களை உருவாக்க வழிவகை செய்தது.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 3ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற Center for Women’s Global Leadership (CWGL) -ன் நிகழ்ச்சியில் Global 16 Days campaign ( விபரம்-Global 16 Days Campaign) சார்பாக கலந்துகொண்ட TTCU வின் தலைவர்கள் Eastman Exports மற்றும் H&M நிறுவனங்கள் தங்களது ஆடைதொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தடுக்கும் பொருட்டு நடைமுறையில் வீரியமிக்கதாக இருக்கக்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற தங்களது குரலை ஓங்கி ஒலித்தனர்.

பல மாத தொடர் போராட்டம் மற்றும் பல கட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக #JUSTICE_FOR_JEYASRE இயக்கம் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்ததாக Tamilnadu Textile and Common Labor Union, Asia Floor Wage Alliance and the Global Labor Justice-International Labor Rights Forum ஆகிய அமைப்புகள் கூட்டாக திண்டுக்கல் ஒப்பந்தம் குறித்து ஏப்ரல் 1-ஆம் தேதி அறிவித்தனர்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் Eastman Exports மற்றும் H&M நிறுவனத்தில் பணிபுரியும் 5000 பெண் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக புகார்களின் மீது சுதந்திரமான விசாரணை முறை, பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு எதிரான புதிய பாதுகாப்பு விதிமுறைகள், புகார்களை கூட்டாக சேர்ந்து அளிக்கும் முறைக்கு அங்கீகாரம் மற்றும் தொழிற்சாலைகளில் சாதி மற்றும் பாலியல் ரீதியான வன்முறை செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தொழிலாளர்களைக் கொண்ட கண்காணிப்பு கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் உழைப்பு உலகத்தில் நடைபெறும் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகள் குறித்து முதல் சர்வதேச ஒப்பந்தத்தில் Convention 190 யின் கீழ் The International Labor Organization வரையறுத்துள்ள பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்த வரையறையை ஏற்றுக்கொண்டுள்ளது தான். இதுவரை 12 நாடுகள் இந்த வரையறையை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் இதற்கு சட்டபூர்வ ஒப்புதல் இன்னும் அளிக்கப்படாத நிலையில் அதனை ஒப்பந்தத்தில் கொண்டு வந்திருப்பது திண்டுக்கல் ஒப்பந்தத்தின் சிறப்பம்சமாகும்.

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை சரியான முறையில் அணுகாமல் புறந்தள்ளுவது பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை #JUSTICE_FOR_JEYASRE இயக்கம் உலகத்திற்கு உணர்த்தியுள்ளது. மேலும் தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றிணைந்தால் பன்னாட்டு பெரிய நிறுவனங்களுக்கும் அழுத்தங்களை கொடுத்து மாற்றத்தை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது

  • தாமோதரன்

செய்தி ஆதாரம்:  SCROLL.IN, The Caravan 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here