சம்யுக்தா கிசான் மோர்ச்சா
 
       பத்திரிகை செய்தி


ம்யுக்தா கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி), குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காகவும் மற்றும் நிலுவையில் உள்ள பிற கோரிக்கைகளுக்காகவும் 500 மாவட்டங்களில் “துரோகத்திற்கு எதிரான போராட்டம்” நடத்தும் !

விவசாயிகள் இயக்கத்தின் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 31ஆம் தேதி நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் (Chakks Jam) நடத்தப்படும்.

அக்னிபத் திட்டத்தை அம்பலப்படுத்த, நாடு முழுவதும் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” கருத்தரங்குகளை ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் !

சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவில், அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் லக்கிம்பூர் கேரியில் 75 மணி நேர தர்ணா நடத்தப்படும் !

பஞ்சாப் தேர்தலின்போது SKMஇல் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் அமைப்புக்கள், SKMமிற்கு திரும்பியுள்ளன !

விவசாயிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அடக்குமுறைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டீஸ்டா செடல்வாட் மற்றும் முகமது சுபைர் கைதுகளை SKM எதிர்க்கிறது !

காஜியாபாத்தில் இன்று நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடன் (ஐக்கிய விவசாயிகள் முன்னணி – SKM) தொடர்புடைய அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் தேசிய கூட்டத்தில், விவசாயிகள் இயக்கம் தொடர்பாக மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

டிசம்பர் 9, 2021 அன்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டபோது, விவசாயிகளுக்கு அளித்த எழுத்துப்பூர்வ வாக்குறுதிகளை அமல்படுத்த மறுத்த ஒன்றிய அரசுக்கு எதிராக சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி – SKM) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. MSPக்கான குழு அமைக்கப்படவில்லை; மேலும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. போராட்டத்தின் போது வாபஸ் பெறப்பட்ட மின்சார சட்டத் திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முயற்சித்து வருகிறது. விவசாயிகளின் மிகப்பெரிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டரீதியான உத்தரவாதத்தைப் பரிசீலிக்கக்கூட அரசு தயாராக இல்லை.

அரசின் இந்தத் துரோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி, ஷாஹீத் உதம் சிங்கின் தியாகி தினமான ஜூலை 31-ம் தேதி வரை நாடு முழுவதும் மாவட்ட அளவில் “துரோகத்துக்கு எதிரான போராட்டம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இந்தப் பிரச்சாரத்தின் முடிவில், சர்தார் உதம் சிங்கின் தியாக தினமான ஜூலை 31 அன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சக்கா ஜாம் எனப்படும் சாலைமறியல் நடத்தப்படும். இப்போராட்டத்தால் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் உரிய கவனம் செலுத்தப்படும்.

இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமான, தேசவிரோத அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக, வேலையற்ற இளைஞர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை விவசாய அமைப்புகள்,
அணிதிரட்டுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அக்னிபாத் திட்டத்தை அம்பலப்படுத்த, ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நாடு முழுவதும் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படும். இதில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.

லக்கிம்பூர் கேரி படுகொலை நடந்து 10 மாதங்களுக்குப் பிறகும், அஜய் மிஸ்ரா டேனி மத்திய அமைச்சரவையில் நீடிப்பது, நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையின் கொடுமையன கேலிக்கூத்தாகும். ஆரம்பத்திலிருந்தே, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) விவசாயிகளுக்கு நீதியை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சட்ட மற்றும் பிற உதவிகளை வழங்கி வருகிறது. இந்தப் பிரச்சினையை வலுவாக எழுப்ப, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி, ஆகஸ்ட் 18, 19, 20 அன்று லக்கிம்பூர் கேரியில் 75 மணி நேர பெருந்திரள் தர்ணாவை நடத்தும். இதில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்க அழைக்பப்படுவர்.

இந்தத் தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் மனித உரிமை இயக்கங்கள் மீது அதிகரித்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக தீவிரக் கவலை தெரிவிக்கப்பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் விவசாயிகள் தலைவர் ஆஷிஷ் மிட்டல் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதையும், வங்காளத்தின் ஃபராக்காவில் அதானியின் உயர் மின்னழுத்த கம்பிக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தியதையும், சத்தீஸ்கரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான அடக்குமுறையையும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) கண்டிக்கிறது.

சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களான திருமதி டீஸ்டா செடல்வாட், ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் முஹம்மது சுபைர் ஆகியோரின் கைதுகள், நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி இந்த ஜனநாயகப் போராட்டத்தில், அனைத்து ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து நிற்கிறது.

இன்றைய கூட்டத்தில் நாட்டின் 15 மாநிலங்களில் இருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பஞ்சாப் தேர்தல் விவகாரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் (SKM) இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 16 அமைப்புகள் இன்று மீண்டும் மோர்ச்சாவில் சேர்க்கப்பட்டன. இன்றைய கூட்டத்தில், சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் இருந்து சந்திரசேகர் கொடிஹள்ளி தலைமையிலான “கர்நாடக ராஜ்ய ரைதா சங்கத்தை” நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்த கிசான் மோர்ச்சா) கதவுகள், நாட்டின் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளுக்கு எப்போதும் திறந்திருக்கும் என்று உறுதி அளித்ததுடன், அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

அறிக்கையை வழங்கியவர்கள் –
டாக்டர். தர்ஷன் பால், ஹன்னன் மொல்லா, ஜோகிந்தர் சிங் உக்ரஹான், யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்

சம்யுக்தா கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி – SKM, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here