காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளிடம்” என்பது மக்கள் மத்தியில் புழங்கும் சொலவடை. திருச்சி அருகே உள்ள முக்கொம்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல் அணைக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைக்கரை பகுதியில் உள்ள கீழ் அணைக்கும் இடையில் 122 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இவற்றுக்கு இடையில் எந்த தடுப்பணைகளும் இல்லாமல் மழைக் காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் வீணாக கடலில் கலக்கிறது.

இதுவன்றி கீழ் அணையான அணைக்கரையில் இருந்து வங்க கடலில் கலக்கின்ற வரை கதவணைகளோ, படுக்கை அணைகளோ, தடுப்பணைகளோ இல்லாமல் கொள்ளிடத்தில் வரும் நீர் அனைத்தும் வீணாக கடலில் கலக்கிறது.

கொள்ளிடத்தில் ஏழு இடங்களில் கதவணை கட்டுவதன் மூலம் தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நீர்ப்பாசன வசதியுடன் விளை நிலங்களாக மாறும் என்கிறார்கள் டெல்டா பாசன விவசாய சங்கத்தினர். அதுமட்டுமின்றி ஆழ்துளை கிணறுக்கு மற்றும் கிணறுகளுக்கு தேவையான நீரூற்று உயரும் என்றும் முன்வைக்கிறார்கள்.

அணைக்கரை

இவை அனைத்தையும் ஆய்வு செய்து “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டு” என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டோம். காவிரியின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி மாற்றம் கொள்ளிடம் தாலுகாக்களில் உள்ள கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் தடுப்பணை அவசியத்தை வலியுறுத்தியும் நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் மக்களின் கோரிக்கையை முன்வைத்தும் பிரச்சாரம் மேற்கொண்டது மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் மற்றும் டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்கள், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக போராடியதன் காரணமாக  அதிமுக ஆட்சியில் தஞ்சை மாவட்டத்தின் வாழ்க்கை எனும் கிராமத்திற்கும் அரியலூர் மாவட்டத்தில் தூத்தூர் என்ற கிராமத்திற்கும் இடையில் தடுப்பணை  கட்டுவதற்கு இருபத்தி மூன்று லட்சம் ரூபாயை அதிமுக அரசு ஒதுக்கியது. அதுமட்டுமின்றி கொள்ளிடத்தில் ஆய்வு செய்து உரிய இடங்களில் நீர்த்தேக்கம் அமைப்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொண்டது.

ஒவ்வொரு மழைக் காலத்திலும் கர்நாடக அரசு தனது அணைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு திடீரென்று திறந்து விடும் நூற்றுக்கணக்கான டிஎம்சி தண்ணீரை தேக்குவதற்கு பொருத்தமான அணைகள்  இல்லாத காரணத்தினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அனைத்தும் கொள்ளிடத்தில் திறந்துவிட்டு வீணாக கடலில் கலக்க வைக்கின்றனர்.

வீணாக கடலுக்கு செல்லும் கொள்ளிடம் ஆற்று நீர்

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏரி குளங்கள் கண்மாய்கள் வாய்க்கால்கள் ஆகியவற்றின் மராமத்து பணிகளை கைவிட்டனர். அதன் பிறகு சுதந்திரம் பெற்றதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த பல்வேறு ஆட்சியாளர்கள் தமிழகத்தில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் உரிய தடுப்பணைகளை கட்டாமல் மணல் கொள்ளை அடிப்பதற்கு குவாரிகளை அமைத்து ஆற்றுப் படுகைகளை கட்டாந்தரையாக மாற்றியுள்ளனர்.

அதே நோக்கத்தில் தற்போது கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டுவது தேவையற்றது என்று திமுக முன்வைத்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

மணல் கொள்ளை

காவிரி டெல்டாவை பாலைவனமாக்குவதற்கு கொண்டுவரப்படும் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் கேஸ் திட்டம் போன்றவை அனைத்தும் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை ஒழித்துக்கட்டி உணவுக்கு பன்னாட்டு கம்பெனிகளிடமும், ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளையர்களிடமும் கையேந்தி நிற்பதற்கு நீண்டகாலமாக சதித் திட்டம் போட்டு செயல்படுகிறது இந்திய ஆளும் வர்க்கம். இதற்கு எந்த ஓட்டுக் கட்சிகளும் விதிவிலக்கில்லை.

விவசாயத்தை பாதுகாக்கின்ற வகையில் போராடுகின்றபோதே டெல்டாவை பாதுகாக்கின்ற வகையில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டு என்று உரத்து முழங்குவோம்!

  • சண். வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here