பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஊடக முன்னணியை கட்டியமைப்போம் வாரீர்!


ன்பார்ந்த ஊடகவியலாளர்களே வணக்கம்!

நாடு முழுவதும் செயல்படுகின்ற செய்தி ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் தனது சுய தன்மையை இழந்து பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பலியாகி உள்ளது.

Mainstream பத்திரிக்கைகள் என்று சொல்லப்படும் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த செய்தி ஊடகங்கள், பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் சமூக விரோத, சட்ட விரோத நடவடிக்கைகளை தெரிந்தே அம்பலப்படுத்துவது இல்லை.

எடுத்துக்காட்டாக தமிழகத்தில் பாஜகவின் தலைவராக உள்ள அண்ணாமலை அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சினையை பேசிக்கொண்டு செய்தி சேனல்கள் அனைத்தையும் கூட்டி வைத்து பேட்டி கொடுக்கிறார். அவரது முட்டாள்தனங்களை எந்த செய்தியாளரும் கேள்வி கேட்க முடியாத அளவிற்கு அவர்களுக்கு மேலிடத்து உத்தரவு உள்ளது.

ஏற்கனவே நியூஸ் 18 மற்றும் நியூஸ் 7 போன்ற செய்தி சேனல்களில் வேலை செய்த பலரை பாஜகவின் அரசியலை அம்பலப்படுத்துகின்றது என்ற ஒரே காரணத்திற்காக வேலையை விட்டு துரத்தி அடித்தனர்.

பத்திரிக்கையாளர் என்ற பெயரில் நாட்டில் நடக்கின்ற செய்திகளை விருப்பு வெறுப்பின்றி உள்ளது உள்ளபடியே கூறுவது ஒரு வகை அவ்வாறு கூறும்போது அது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி அந்த செய்தி கூறுகின்ற பிரச்சினைகளுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உருவாகும். இது ஒருவகை ஊடகவியல்.

நேரடியாக தவறு நிகழ்கின்ற இடங்களில் இதுதான் நடந்த உண்மை, இதற்கு காரணம் இவர்கள் தான் என்று ஒளிவுமறைவின்றி வர்க்க பார்வையுடன் எழுதுகின்ற ஊடகங்கள் முன்வைக்கின்ற மற்றொரு வகை ஊடகவியல்.

இன்று இந்த இரண்டு வகை ஊடகவியல் முறையும் நாடு முழுவதும் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் மீதும், பத்திரிக்கை அதிபர்கள் மீதும் தாக்குதல்களும் அடக்குமுறைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதுபோலவே சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் சமீபகாலமாக பாகிஸ்தான் ஆதரவு என்ற பெயரில் தடுக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது.

பிரிட்டன் காலனி ஆதிக்க காலத்தில் கூட பத்திரிக்கைகள் இவ்வளவு கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளான தில்லை என்று மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் தனது அச்சத்தை தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் ஏறி தாக்குகின்ற கார்ப்பரேட்-காவி பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற ஜனநாயக உணர்வுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது.

தனித்தனியாக போராடிக்கொண்டு இருப்பதன் மூலம் நமது ஒற்றுமை குலைந்து அவர்களின் அடக்குமுறை ஏவுவதற்கு அடிப்படையை நாமே ஏற்படுத்தி தருவது சரியானது அல்ல.

பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவை பற்றி நமக்கு வெவ்வேறு கோணங்களில் கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான ஒரு பாசிச கும்பல் அரசியல் அதிகாரத்தில் வீற்றிருப்பது, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

இந்தியாவின் பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது உலகில் உள்ள 180 நாடுகளில் நூற்றி ஐம்பதாவது இடத்திற்கு சென்று விட்டது என்ற செய்தியுடன் இதனை இணைத்துப் பாருங்கள். ஒரு அரசியல் கட்சியை சாராமல் தனி நபர்களாக பேசுபவர்களுக்கு எந்த நெருக்கடியும் பெரிதாக கிடையாது.

ஆனால் மக்களை சமூக மாற்றத்திற்கு அணிதிரட்டும்  புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் போன்றவர்களுக்கு தான் சுதந்திர ஊடகத்தின் தேவையும், அதை நிலைநாட்ட வேண்டிய அவசியமும் உருவாகிறது.

எனவே சுதந்திரமான ஊடகவியலாளர்கள் மற்றும் தற்போது செய்தி மற்றும் காட்சி ஊடகங்களில் செயல்படுகின்ற ஊடகவியலாளர்கள், சமூக ஊடகங்களில் செயல்படுகின்ற ஊடகவியலாளர்கள், சுதந்திரமான யூடியூப் சேனல் மூலம் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் யூடியூபர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஊடக முன்னணி ஒன்றை கட்டியமைப்போம்!

உங்கள் அனைவரையும் இத்தகைய முன்னணி ஒன்றை அமைப்பதற்கு அறைகூவி அழைக்கிறது.

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம் இணையத்தளம் மற்றும் முகநூல் பக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here