
மும்பை புறநகர் ரயிலில் பறிபோகும் உழைக்கும் மக்களின் உயிர்! புல்லட் ரயில்- பிடில் வாசிக்கும் பாசிஸ்டுகள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகருக்கு அருகில்
ஜூன் ஒன்பதாம் தேதி காலை 9 மணி அளவில் புறநகர் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள் எதிரே வந்த புறநகர் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்து வந்தவர்கள் மீது உரசியதில் கீழே விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மும்பை, தானே போன்ற நகரங்களில் எப்பொழுதும் புறநகர் மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். மக்கள் ரயில்களில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வது என்பது எப்பொழுதும் காணக்கூடிய ஒரு பரிதாபகரமான, அபாயகரமான காட்சி.
மும்பை போன்ற இடங்களில் பேருந்துகளை விட ரயில்களையே உழைக்கும் மக்கள் தங்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். புறநகர் ரயில்களில் எப்பொழுதும் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக காலை, மாலை வேலைகளில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இந்த ரயில்களில் பயணம் செய்யும்.
தங்கள் உயிரை பணயம் வைத்து
தொங்கியபடி ரயில்களில் பயணம் செய்து வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் தான் மக்கள் இருக்கின்றனர். மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 20 ஆண்டுகளில் 51,802 பேர் ரயில்களில் அடிபட்டு இறந்துள்ளதாக ரயில்வே நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு இழப்பதாக ரயில்வே நிர்வாகமே மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்பு ஒரு வழக்கில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக மும்பை, தானே போன்ற நகரங்களில் புறநகர் ரயில்களின் மூலமாக தினமும் 8 பேரை கொலை செய்து கொண்டிருக்கும் இந்திய ரயில்வே இதை தடுப்பதற்கு எவ்வித முயற்சியையும் செய்யவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் 56 இன்ச் விஸ்வகுரு மோடிக்கு இதைப் பற்றி என்ன கவலை.
மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயிலை விடுவதற்காக ஒரு லட்சம் கோடிக்கு மேலாக செலவு செய்து கொண்டு இருக்கிறது மோடி அரசு. இந்த புல்லட் ரயில் இப்பொழுது விபத்து நடந்துள்ள தானே நகரின் வழியாகத்தான் செல்ல இருக்கிறது.
இந்த ரயில் மணிக்கு சுமார் 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுமாம். இப்பொழுது ஏழு மணி நேரம் எடுத்துக் கொள்ளும் பயணம் 2 மணி நேரமாக குறைந்து விடுமாம். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பாய்ச்சல் வேகம் எடுக்குமாம். எனவே இதே போன்று இந்தியாவில் மேலும் ஐந்து இடங்களில் புல்லட் ரயில் விடுவதற்காக மோடி அரசு திட்டமிட்டுள்ளதாம்.
20 ஆண்டுகளாக ஏழைகள் தினம் தோறும் செத்துக் கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத பாசிஸ்டுகள், பணக்காரர்கள் சொகுசாக பயணம் செய்வதற்காக புல்லட் ரயில் விடுகிறார்கள்.
படிக்க:
🔰 கோவையில் முதல் தனியார் ரயில்! ரத்தம் கொதிக்கிறது!
🔰 மூத்த குடிமக்களிடம் 1500 கோடி பறித்த ரயில்வே
இந்தியாவின் எந்த மூலையில் புதிய ரயில்களை கொடியசைத்து துவக்கி வைப்பது என்றாலும் ஓடி வரும் பாசிஸ்ட் மோடி உழைக்கும் மக்கள் தினம்தோறும் ரயில்களில் அடிபட்டு சாவதை பற்றி எல்லாம் சிறிதும் அலட்டிக் கொள்ள மாட்டார்.
தானேயில் இந்த ரயில் விபத்து நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக காஷ்மீர் மாநிலத்தில் உலகத்திலேயே உயரமான செனாப் ரயில்வே பாலத்தையும் இந்தியாவின் முதல் கேபிள் பாலமான அஞ்சி காட் பாலத்தையும் மோடி திறந்து வைத்தார்.
இதைத் திறந்த வைத்த மோடி, காஷ்மீரில் ஒரு புதிய ரயில்வே வழித்தடத்தை உருவாக்கி இருக்கிறோம். இது மாபெரும் சாதனை என்றும் இந்தியாவின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் மிக மிக முக்கியமான பங்களிப்பாக இது இருக்கும் என்றும் அளந்து விட்டுள்ளார்.
காஷ்மீரில் இதுவரை இல்லாத ஒரு வழித்தடத்தை, புதிதாக ஒரு ரயில்வே வழித்தடத்தையே சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய வழித்தடத்தில் 36 இடங்களில் மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. 943 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
சுற்றுலாவின் மூலமாகவும், காஷ்மீரில் விளையும் ஆப்பிள் போன்ற பொருட்களை வெளி உலகத்திற்கு கொண்டுவருவதன் மூலமாகவும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடிக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புதிய ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி மக்களின் பயன்பாடு என்பதெல்லாம் ஒரு கண் துடைப்பிற்காக தான்.
நாம் மீண்டும் தானே ரயில் விபத்திற்கு வருவோம். காஷ்மீரத்தில் புதிய ரயில்வே வழித்தடம் அமைப்பதற்கு முன்பாக, மும்பையில் இருந்து தானே வழியாக அகமதாபாத்திற்கு புல்லட் ரயில் விடுவதற்கு முன்பாக முதல் முதல் முன்னுரிமை கொடுத்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தியா முழுவதும் புறநகர் ரயில்களில் தொங்கியபடி மக்கள் பயணம் செய்யும் நிலையை மாற்றியமைப்பதற்கான வேலைகளை தான் செய்திருக்க வேண்டும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மலைகளைக் குடைந்து சுரங்கம் அமைத்து ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வதற்கான பாலங்கள் அமைத்து புதிய ரயில்வே வழித்தடத்தை அமைப்பது முக்கியமா? அல்லது இந்தியாவின் நுழைவாயில் என்று கூறப்படும் மும்பையிலும் அதன் அருகாமை பகுதிகளிலும் ஓடும் புறநகர் ரயில்களில் அடிபட்டு தினந்தோறும் எட்டு பேர் சாவதை தடுக்க வேண்டும் என்பது முக்கியமா?
மக்களின் மீது அக்கறையுள்ள எவரும் மக்கள் அடிபட்டு சாவதைத் தடுப்பதற்கான வேலைகளை செய்வதுதான் முதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுவர். ஆனால் பாஜக, ஆர் எஸ் எஸ் பாசிஸ்டுகள் தினம்தோறும் ரயில்களில் மக்கள் அடிபட்டு சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப் படுவதில்லை.

இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை ஆட்சியில் இருப்பது கண்டு ஒவ்வொரு இந்திய குடிமகனும் கவலைப்பட வேண்டும். இவர்களை ஆட்சியில் இருந்த தூக்கி எறிவதற்கும் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக ஆர் எஸ் எஸ் பாஜகவையே இந்திய மண்ணில் இருந்து துடைத்திடவும் மக்கள் ஓர் அணியில் திரள வேண்டும்.
— குமரன்