காவிக் குண்டர்களின் பிடியில் இந்தியா!

பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது தவறு என்று எழுத்துபூர்வமாக தர வேண்டும் என்று விழாக் குழுவினரை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உத்தரவிட்டனர்.

0
நன்றி: தி வயர்

ந்தியாவில் சட்டத்தின் ஆட்சி குலைந்து, காவி குண்டர்களின் ஆட்சி மேலோங்கி வரும் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சமீபத்திய இரண்டு சம்பவங்கள் இந்தப் போக்கை எடுத்துக்காட்டுகின்றன. முதலாவதாக, ஒன்பது ஆண்டுகளாக உதய்பூரில் நடைபெற்று வந்த திரைப்பட ஆண்டு விழாவை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சீர்குலைத்தது. இரண்டாவதாக, டெஹ்ராடூனில் உள்ள புகழ்பெற்ற டூன் பள்ளியில் இருந்த மஜார் (கல்லறை) காவிக் குண்டர்களால் இடிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 16ம் தேதி, இந்த உதய்பூர் திரைப்பட விழாவை பாலஸ்தீன குழந்தைகளுக்காகவும் , மறைந்த பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களுக்காகவும் அர்ப்பணிப்பதாக விழாக் குழுவினர் குறிப்பிட்டிருந்ததை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் ஜீரணிக்க முடியவில்லை. விழாவின் இரண்டாவது நாளில் ஷப்னம் விர்மானியின் Had-Anhad திரைப்படத்தை திரையிட விடாமல் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இடையூறு செய்தனர்.

இதனையடுத்து, இரு தரப்பையும் சமரசம் செய்ய அலுவலகத்திற்கு அழைத்த கல்லூரி முதல்வர் முன்னரே முறையாக கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று விழா அரங்கத்திற்கு வாடகையும் கட்டிய விழா குழுவினருக்கும் தன்னுடைய சொந்த முடிவிற்கும் மாறாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் சொல்லியபடி நிகழ்ச்சியை நிறுத்தி, இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவருமாறு விழாக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ரவீந்திரநாத் தாகூர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, விழாவுக்கான அனுமதியை திரும்பப் பெற்றது.


படிக்க: பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிஸ்டுகளால் தீர்மானிக்கப்பட்டது!


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூற்றுப்படி ஜி.என். சாய்பாபா ஒரு தீவிரவாதி. பாலஸ்தீனமும் ஒரு பயங்கரவாத நாடுதான். எனவே, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் அர்ப்பணிப்பதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கு சமம். பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது தவறு என்று எழுத்துபூர்வமாக தர வேண்டும் என்று விழாக் குழுவினரை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உத்தரவிட்டனர். அத்தோடில்லாமல் 2022 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தையல்காரர் கன்ஹையாலால் டெலி மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சக மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தேவராஜ் மோச்சி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் தாங்கள் தரும் வரைவு அறிக்கையை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் விழா குழுவினரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

தாங்கள் அனைத்து வகையான வன்முறைக்கும், கொலைகளுக்கும் எதிரானவர்கள் என்று விழா குழுவினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க முயன்ற போதும் விடாப்பிடியாக இருந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தங்கள் வரைவு அறிக்கையின் படி காணொளி தயாரித்து வெளியிட்டே தீருவோம் என்று அடாவடியாக இருந்தனர். இந்த பேச்சு வார்த்தை நடந்த கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் காவல்துறையினரும் உடனிருந்த போதும் ஒரு நிகழ்ச்சியை நிறுத்தவும் ஒரு குடிமகனை கட்டாயப்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கும் மற்ற யாருக்கும் கூட உரிமையில்லை என்பதை எடுத்துரைக்காமல் அமைதி காத்தனர். அதே அறையில் சில மருத்துவர்களும் இருந்தனர், அவர்களும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் கருத்துக்கு ஆதரவளித்தது போலவே இருந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கல்லூரி முதல்வர் திடீரென்று விழா குழுவினரிடம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி வந்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளுமாறு புது நிபந்தனை ஒன்றை விதித்தார். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படத்தை முழுமையாக முடிக்க அனுமதி கோரிய விழாக் குழுவினரை புறக்கணித்து நிகழ்ச்சியை வலுக்கட்டாயமாக நிறுத்தினார் முதல்வர்.

இதனையடுத்து விழாக் குழுவினர் மாவட்ட மாஜிஸ்டிரேட்டிடம் முறையிட்டனர். அவரோ இது கல்லூரி நிர்வாகத்திற்கும் விழா குழுவினருக்கும் இடையிலான பிரச்சினை என்றும் இதில் தன்னால் தலையிட முடியாது என்றும் தெரிவித்து தானும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களும் வேறுவேறல்ல என்பதை நிரூபித்தார் என்று விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

ஒரு பொது நிகழ்வு இடையூறு செய்யப்பட்டு அதன் பங்கேற்பாளார்கள் தாக்கப்படும் சூழல் ஏற்படுத்துவது குற்றம். இதனை தடுத்து இடையூறு செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது என்ற அடிப்படையில் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட விழா குழுவினரின் கோரிக்கையை மாவட்ட மாஜிஸ்டிரேட்டு மறுத்துவிட்டார்.


படிக்க: இஸ்லாமிய வெறுப்பு, தலித் வெறுப்பில் ஊறி திளைக்கும் பி.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ !!


உதய்பூரில் சில மாதங்களுக்கு முன் ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான சண்டையில் ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனை கத்தியால் குத்திவிட்டான். குத்திய சிறுவன் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவன். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த இஸ்லாமிய மாணவன் வசித்து வந்த வாடகை வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளியது.அந்த வீட்டில் இன்னும் சில குடும்பங்களும் இருந்தன. மேற்பார்வை செய்தது மேற்படி மாண்புமிகு மாவட்ட மாஜிஸ்திரேட்டு தான். மாவட்ட நிர்வாகத்திற்கு புல்டோசர் மூலம் இடிக்க அதிகாரமுள்ளதா? இது குண்டர்களின் ஆட்சியா? இத்தகைய மாஜிஸ்திரேட்டு ஆர்.எஸ்.எஸ் காரர்களின் பக்கம் நிற்பது ஆச்சர்யமல்ல.

உச்சநீதிமன்றம் சமீபத்திய தனது தீர்ப்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் புல்டோசரை உபயோகித்தது சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதன் பின்விளைவுகளை அதிகாரிகள் எதிர்கொண்டாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதன்படி சிறுவனின் வீட்டை இடித்து மாவட்ட நிர்வாகம் குற்றம் புரிந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சாடியுள்ளது.

இரண்டாவது நிகழ்வு டேராடுனின் டூன் பள்ளியில் நிகழ்ந்தது.

பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சில மர்மநபர்கள் சுவர் ஏறி குதித்து பள்ளி வளாகத்தில் உள்ள மஜாரை(கல்லறை) இடித்து தள்ளினர். மஜார் நீண்ட காலமாக அங்கு இருந்தது, பள்ளிக்கு அது இருப்பதைப் பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வெளியாட்கள் சிலர் அதனை இடித்துள்ளனர்.

இந்த அத்துமீறல் மற்றும் நாசகார செயல் குறித்து பள்ளி நிர்வாகம் அறிக்கை எதையும் தாக்கல் செய்யவில்லை. வளாகத்திற்குள் உள்ள எந்த ஒரு கட்டிடமும் இடிக்கப்படவில்லை என்றும் ஒரு ஒப்பந்ததாரர் சொந்தமாக கட்டிய கட்டிடம் அகற்றப்பட்டது என்றும் மாணவர்களின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. ஆனால் காவிக் குண்டர்கள் தங்கள் சாதனையை நேரலையில் ஒளிபரப்பினர். மேலும் நிர்வாகத்தின் அனுமதி தங்களுக்கு இருப்பதாகக் கூறினர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது என்று சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் கூறினார்.

“அதை இடிக்க நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எவ்வாறாயினும், மஜார் தொடர்பான உண்மைகளை சரிபார்க்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யவும் SDM உள்ளிட்ட குழுவை அந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம்”என்று DM கூறினார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இரண்டு குற்றங்கள் நடந்துள்ளது ஒன்று அத்துமீறி நுழைந்தது, மற்றொன்று கட்டிடத்தை இடித்தது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

இந்த இரண்டு சமீபத்திய சம்பவங்களும் குடிமக்களாகிய நம்மை பயமுறுத்துகிறது. பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வது தங்களின் பொறுப்பு அல்ல என்று இந்தியாவின் நிர்வாக அதிகாரிகள் கருதுவது போல் தெரிகிறது.

மேலும், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா குழுக்களின் காலித்தனத்துடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் பொறுப்பு நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் உள்ளது. இந்தக் கடமையைச் செய்ய மறுத்து ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுடன் கைகோர்த்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைத்திருக்க முடியுமா?

போலீஸ் அதிகாரிகள் கன்வாரியாக்களின் கால்களைக் கழுவி அவர்கள் மீது மலர் மழை பொழிந்தால், அவர்கள் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை மூடிவிடுவார்கள். முசாஃபர்நகர் மற்றும் சஹாரன்பூர் காவல் துறையினர்தான் கடைக்காரர்கள் தங்கள் பெயர்களையும் ஊழியர்களின் பெயர்களையும் முக்கியமாகக் காட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம்களை எப்போது வேண்டுமானாலும் இறைச்சிக் கடைகளை மூடும்படி வற்புறுத்துவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது இந்த அதிகாரிகள்தான்.

இந்துத்துவா அரசியலின் பலாத்காரக் கையாக அதன் அங்கமாக நிர்வாகம் மாறுவதன் பின்விளைவுகள் பற்றி நாம் போதிய அளவு சிந்திக்கவில்லை. அவர்கள் என்ன செய்ய முடியும்? மேலிருந்து வரும் கட்டளைகளை அவர்கள் வெறுமனே பின்பற்றுகிறார்கள் அவ்வளவுதானே என்ற பொது புத்தியில் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். நிர்வாகம் நினைத்தால் அநீதியான இந்த உத்தரவுகளை ஏற்க மறுக்கலாம். அநீதியான உத்தரவுகளை ஏற்று நடப்பதே குற்றம் என்று அவர்கள் உணர வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் இடிக்கப்பட்டதற்கு நிர்வாக அதிகாரிகளே பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கூறியதன் அர்த்தம் இதுதான். அதில், ”இதுபோன்ற விஷயங்களில் சட்டத்தை கையில் எடுக்கும் பொதுத்துறை அதிகாரிகள், தான்தோன்றித்தனமான தங்கள் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், செறிவான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். என்று நாங்கள் கருதுகிறோம். இதன்மூலம், அதிகாரிகள், தன்னிச்சையாக, பாரபட்சமாக செயல்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். மேலும், அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், பின்விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க செய்ய வேண்டும்.”

உதய்பூர் மற்றும் டேராடூன் சம்பவங்கள், செயல்படாமல் இருப்பது மற்றும் தலையிடாமல் தவிர்ப்பதன் மூலம், அதிகாரிகள் குற்றச் செயல்களுக்கு உதவுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. குறிப்பாக இந்துத்துவா குண்டர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களுக்கு உதவுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அதிகாரிகள் மத்தியில் வளர்ந்துள்ள இந்த பெரும் மாற்றம் மிகவும் கவலைக்குரியது.

ஆக்கம்: தாமோதரன்

மூலம்: https://thewire.in/rights/gone-are-the-days-of-rule-of-law-we-now-have-gunda-raj-in-india

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here