பத்திரிகைச் செய்தி

பேரறிவாளன் விடுதலை !

அற்புதம்மாளின் அயராத உழைப்புடன்
தமிழக மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

மாநில உரிமையை உறுதி செய்து ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

மாளிகையை காலி செய்வதுடன்
ஆளுநர் ரவி உடனே ராஜினாமா செய்ய வேண்டும்!

சிறையில் இருக்கும் மற்ற ஆறு பேரையும் தமிழக அரசே உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த மே 18, அதன் நினைவு நாளில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது வரலாற்று பொருத்தமானது.

இந்த விடுதலை தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. நிலவுகின்ற அரசியல் சட்டத்தின் 142 வது பிரிவு தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது

ஆனால் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இது போன்ற அற்ப உரிமைகளைக் கூட இத்தனை ஆண்டுகாலம் நீதிபதிகள் கண்டுகொள்ளாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. மிகமிகத் தாமதமாக வழங்கப்பட்டத் தீர்ப்பாயினும் வரவேற்கத்தக்க தீர்ப்பு.

பேரறிவாளன் குடும்பத்தினர், சட்டவல்லுனர்களுடைய ஒத்துழைப்பு இவை மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள், அரசியல் இயக்கங்கள் இவர்கள் கொடுத்த அழுத்தம் ஆகிய அனைத்தும் தான் இத்தகைய ஒரு தீர்ப்பை பெற காரணமாய் இருந்திருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முறையே குற்றவியல் விசாரணை முறைக்கு எதிராக நடைபெற்றது என்ற கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

குற்றவாளிக்கு குற்றத்தில் உள்ள பங்கு குறித்து எந்தவிதமான பரிசீலனையும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனையை விதித்தது விசாரணை நீதிமன்றம்.விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 19 பேர் தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறி விடுவிக்கப்பட்டனர்.03 பேருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

மரணதண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பரிசீலிக்காமல் மிக மோசமாகக் காலந்தாழ்த்தியதன் விளைவாகத்தான் உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
குறிப்பாக, பேரறிவாளனை மிரட்டி பொய்யாகத்தான் வாக்குமூலம் வாங்கினோம் என்று இவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மற்றும் குழுவினர் தெரிவித்த பிறகும் அவரது விடுதலை காலம் கடத்தப்பட்டது மிகக் கொடூரம்.

எழுவர் விடுதலைக்காக தமிழக மக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.அதிலும், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் செங்கொடி எழுவரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தன் உயிரையே தீக்குளித்து மாய்த்து கொண்டார். இவரின் உயிர் தியாகத்திற்கு பிறகே எழுவர் விடுதலை போராட்டம் தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டமாக வெடித்தது.

அன்றைய தமிழ்நாட்டின் முதல்வரான ஜெயலலிதாவால் இரண்டு முறை தமிழ்நாடு சட்ட மன்றத்தில் எழுவரையும் விடுவிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானங்களை அன்றைய ஆளுனரும் ஒன்றிய அரசும் சிறிதும் மதிக்காமல் கழிவறை காகிதம் போல் தூக்கி கிடப்பில் போட்டனர்.

தற்போதைய தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை காலம் தாழ்த்தி, தேவையின்றி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஆளுநர் முடக்கியதன் காரணமாகத்தான் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது. மாநில அரசுகளின் முடிவுகளுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

மாநில உரிமைகளில் தலையிட்டு மாநில அரசை முடக்கும் மக்கள் விரோத ஆளுநர் பதவி உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

எழுவர் விடுதலைக்கு தடையாக இருந்த ஒன்றிய அரசுகள், குடியரசுதலைவர்கள், தமிழக ஆளுநர் ஆகியோரின் தடைகளை தகர்த்து இந்த தீர்ப்பு பெறப்பட்டிருக்கிறது. மக்களாட்சி என்ற பெயரில் அதிகாரவர்க்க மற்றும் கும்பல் ஆட்சியின் வரம்பற்ற அதிகாரத்தை இந்த தீர்ப்பு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் ஒளியில் மற்ற ஆறு பேரையும் தாமதமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதே போன்று பொய்யாக, ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் நீண்டகாலமாக சிறையில் உள்ளவர்களின் விடுதலையை இத்தீர்ப்பு சாத்தியமாக்கி உள்ளது.

மேலும், எவ்வித ஆதாரமின்றி அரசுக்கு எதிராகப் போராடுகின்றவர்களின் அரசியல் செயல்பாடுகளை முடக்குகின்ற நோக்கத்தில் நாட்டை ஆளுகின்ற அரசாங்கமும், சிபிஐ, என்ஐ ஏ போன்ற அரசு பயங்கரவாத அமைப்புகளும் எவ்வித குற்றங்களும் புரியாத சமூக செயல்பாட்டாளர்களை திட்டமிட்டு பொய் வழக்கில் கைது செய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களும்,பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கும் சமூக செயல்பாட்டாளர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இவண்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here