பருத்தி, நூல் விலை உயர்வு! அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் விளைவே!

இந்த சிந்தடிக் ஃபேப்ரிக் , வார்ப்பு நிட்டிங் செயற்கை இழை உற்பத்தி முழுவதும் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட்டுகளிடம்தான் உள்ளது

0
Forklift in warehouse

பருத்தி, நூல் விலை உயர்வு! அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் விளைவே!


த்திய அரசு பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்துசெய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் , நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதே போல் நாடெங்கும் நூல் விலை உயர்வால்  விசைத்தறி உரிமையாளர்களும் இணைந்து போராட ஆரம்பித்துள்ளனர். வேலையிழப்பை சந்தித்து வரும் நெசவாளர்கள் திருத்தணி பொதட்டூர்பேட்டையில் உண்ணாவிரதமும் நடந்துள்ளது. ஆனால் மோடி அரசு இதையெல்லாம் காதுகொடுத்து கேட்பதையாவது செய்யுமா? நிச்சயமாக செய்யாது என்பதற்கான அடிப்படைகளை பார்ப்போம்.

அதிகரிக்கும் நூல் விலை உயர்வு!

கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்தது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்கால் நாளொன்றுக்கு ரூ.650 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. இப்படி நூல் விலை உயர பஞ்சு விலை உயர்வு முக்கிய காரணமாக உள்ளது.

விவசாயிகள் பருத்தியை அதிக விலைக்கு விற்க முடியுமா?

நம் நாட்டில் 355 கிலோ எடை கொண்ட ஒரு கேண்டி  பருத்தியானது நேற்றுவரை 37,000 முதல் 45,000 வரை இருந்த விலை உயர்ந்துகொண்டே போய், இன்று ஒரு கேண்டி (சங்கர்- 6 ரகம்) ரூ.97,000 முதல் ரூ.1.04 லட்சத்தை தொட்டு விட்டது. இதன் விளைவாக ஒன்றரை ஆண்டுக்குள் நூல் விலையும் 100% அதிகரித்து விட்டது. இந்த விலை உயர்வுக்கு யார் காரணம்?

எந்த ஒரு விவசாயியும் தான் விளைவித்த பொருளுக்கு விலை வைக்கும் நிலை இல்லை. அனைத்தும் கொள்முதலில் ஆதிக்கம் செய்யும் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடிக்குள் போய்விட்டது. பருத்தி போட்ட விவசாயிகள் தற்கொலை செய்யும் போது, அதே பருத்தியின் விலை மட்டும் எப்படி இரண்டு மடங்காகிறது என்பதை நாம் சிந்திப்பதில்லை.

இந்தியாவின் ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 5% ஆக உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்ட்டர் என்று புகழப்பட்ட கோவையில் பருத்தி விவசாயம் ஏறக்குறைய அழிந்தே விட்டது. அங்கு பஞ்சாலைகள், கார்மெண்ட்ஸ்கள் பெருகும்போது மூலப்பொருளான பஞ்சு உற்பத்தி மட்டும் ஏன் அழிந்தது? விலை கிடைக்காமல் போண்டியாவதை தவிர்க்கவே விவசாயிகள் பருத்தியை கைவிட்டனர். குறைந்த பட்ச ஆதார விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கித்தான் டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகையை நடத்தினர். இந்நிலையில் சந்தையில் விலையை உயர்த்துவது யார் என்பதுதான் பரிசீலனைக்கு உரியது.

பஞ்சு விலையை ஏற்றி கொழுக்கும் கார்ப்பரேட் சூதாடிகள்!

பயிரிடும்போதே விவசாயி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்பந்த விவசாயம் என்ற கார்ப்பரேட்டுகளின் வலையில் சிக்க வைக்கப்படுகிறாகள். இதனால் தனது விளைச்சலை வெளியில் விற்கும் உரிமையையும் இழக்கிறார்கள். இதன்மூலம் அடிமாட்டு விலைக்கு பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்குகின்றன. சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டால் தன்விருப்பப்படி விலையை உயர்த்த முடியும். இதற்கு வழிவகுத்ததுதான் உலகமய கொள்கை.

உலகமயத்தின் விளைவு!

ஒரு விவசாயியோ, பெரும் கார்ப்பரேட்டுகளோ தான் விளைவித்த, வாங்கியுள்ள பொருளை உலகின் எந்த நாட்டுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம். நம்மூர் பஞ்சாலைக்கு பஞ்சு தேவை என்று அரசு தடுக்க முடியாது. நாமும் எந்த நாட்டிலிருந்தும் பஞ்சை இறக்குமதி செய்து கொள்ளலாம். இதுதான் உலகமயம்.

நமக்கு அத்தியாவசியமான பொருளை சந்தைக்கு வரவிடாமல் மொத்தமாக பதுக்குவது நேற்றுவரை குற்றம். ஆனால் இப்பொழுது அரசே குடோன் கட்டித்தந்து பதுக்கும்படி வழிகாட்டுகிறது. ஒரே வித்தியாசம் அதற்கு வரி கட்டி பதுக்கலை சட்டப்படியாக செய்யவேண்டும் என்பதுதான்.

 

வெளிநாட்டிலிருந்து அநியாய விலைக்கு இறக்குமதியாகும்போது, நம்மூரில் அடிமாட்டுவிலைக்கு விவசாயிகளில் வயிற்றில் அடித்து வாங்கப்பட்டு பதுக்கப்பட்ட பல லட்சம் டன் பருத்தியும் சந்தைக்கு வரும். செயற்கையாக உயர்த்தப்பட்ட 2 மடங்குக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படும். அதுதான் இன்று நடக்கிறது. இது வெங்காயம் உள்ளிட்ட அனைத்து விளைபொருளுக்கும் பொருந்தும்.

சத்தமில்லால் பறிபோகும் பருத்தி ஆடையும், ஆக்கிரமிக்கும் செயற்கை இழை ஆடைகளும்!

செயற்கை இழை நூல்கள் (synthetic fibre)

காலம் காலமாக பருத்தி துணிகளை உற்பத்தி செய்தும், பயன்படுத்தியும் வந்த நிலையில் இப்பொழுது செயற்கை இழையை நோக்கி திசைதிரும்புவது நடக்கிறது. நம் பருத்தியானது நம் நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்றது. ஆனால் வேர்வையை உறிஞ்சாத பாலியஸ்ட்டர், நைலான், லைக்ரா  செயற்கை இழை துணிகள் மலிவாக சந்தைக்குள் வந்து சுமார் 40% வரை கைப்பற்றிவிட்டதோடு நம் உடல்நலத்தையும் கெடுத்து வருகிறது. இந்த சிந்தடிக் ஃபேப்ரிக் , வார்ப்பு நிட்டிங் செயற்கை இழை உற்பத்தி முழுவதும் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட்டுகளிடம்தான் உள்ளது பாலிகாட்டன், நைலான், பாலி விஸ்கோஸ், விஸ்கோஸ் காட்டன், விஸ்கோஸ் பாலி காட்டன், பேம்பூ, அக்கர்லிக் போன்ற 12 வகையான ரகங்களில் செயற்கை நூல் இழைகள் விற்கப்படுகின்றன.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

நம் வாழ்வாதாரத்தை தக்க வைப்பது எப்படி? கொங்கு மண்டலத்தில் உள்ள காவி கூட்டம் பிரியாணி அண்டாவை தூக்குவதை ஆர்வத்தோடு செய்கிறதே,  ஆனால் ஏன் இதற்கு தீர்வு சொல்வதில்லை என்பதை அம்பலப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுடன் உலகமயத்தை திணிக்கும் காவி பாசிஸ்ட்டுகளையும் எதிர்த்தாக வேண்டும்.

எனவே, சிறு நிறுவனங்களை, உற்பத்தியாளர்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை இன்று போராடும் நிலைக்கு தள்ளியுள்ள கார்ப்பரேட் கொள்ளைக்கு முடிவுகட்ட தனித்தனி போராட்டம் தீர்வல்ல! சுரண்டப்படும் அனைத்து பிரிவினரும் ஒன்றிணைவோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here