
“இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை கடந்த மே மாதம் 13-ம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், அத்தடையை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு – 2024-ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது, மைய உள்துறை அமைச்சகம்.
இந்த உத்தரவு, மே 14, 2019 அன்று பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்து புதிய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்வரைகூடக் காத்திராமல், காபந்து அரசான மோடி அரசே இந்த உத்தரவை வெளியிட்டிருப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தனது தீராத வன்மத்தையும் வெளிக்காட்டிக் கொண்டுவிட்டது.
2009-ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிக் கட்டப் போரின்போதே விடுதலைப் புலிகள் இருந்த தடம்கூடத் தெரியாத அளவிற்கு அவர்களை இந்திய அரசின் உதவியோடு கொன்றொழித்தது, இலங்கை அரசு. கடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்திலோ, தமிழகத்திலோ மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை.
ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருவது போலக் கூறி, “அதனின் குந்தகச் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவையாக உள்ளன” என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடி, அவ்வியக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருக்கிறது, இந்திய அரசு.
“கற்பனையான எதிரிகளை உருவாக்கிப் பீதியூட்டுவதன் மூலம்தான் பாசிஸ்டுகள் தமது அடக்குமுறைகளை நியாயப்படுத்திக் கொள்ள முடியும்” என்பதை இத்தடையின் மூலம் மீண்டும் நினைவூட்டியிருக்கிறார்கள், இந்து மதவெறி பாசிஸ்டுகள். இத்தடை நீட்டிப்பின் மூலம் தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்காகச் சட்டபூர்வமாகப் போராடும் இயக்கங்களைக்கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி ஒடுக்குவதற்கான முகாந்திரத்தையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது, இந்திய அரசு.” என்று விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்து விமர்சித்து எமது புதிய ஜனநாயகம் 2019 ஜூன் இதழில் எழுதியிருந்தோம்.
படிக்க: போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?
அந்த ஐந்தாண்டு கால தடை முடிந்த பிறகு கடந்த 2024 மே மாதம் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு தடையை நீடித்து இந்திய ஒன்றிய அரசான பாசிச பயங்கரவாத கும்பல் பாஜக அறிவித்தது.
“சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (37, 1967) பிரிவு 3 இன் துணைப் பிரிவுகள் (1) மற்றும் (3) ஆகியவற்றின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. உடனடி நடைமுறையுடன். இது தொடர்பான அறிவிப்பு கடந்த மே 14 2024 அன்று இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் செய்தி ஒளிபரப்பு துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் “விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு வலுவான இந்திய-விரோத தோரணையை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது, மேலும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.”
விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. மேலும், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை உறுதி செய்து தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.
படிக்க: சீமானின் லும்பன் தம்பிகளின் பொறுக்கித்தனமும், பாசிச எதிர்ப்பில் ’நாம் தமிழர்’ ஒழிப்பின் அவசியமும்!
ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை மூலம் விடுதலைப்புலிகளின் செயல் பாடுகளுக்கு முடிவு கட்டிய சிங்கள பேரினவாத அரசு மற்றும் அதன் துணை நின்ற இந்திய ஒன்றிய அரசு நடத்திய கோரமான படுகொலைகள் இன்னமும் உலகம் முழுவதும் உள்ள இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் மக்களின் நெஞ்சில் இருந்து அகலவில்லை.
சமகாலத்தில் பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்து வருகின்ற இஸ்ரேல் யூத ஜியோனிச பயங்கரவாத அரசு உலகில் 140 நாடுகள் இந்த இனஅழிப்பு போரை எதிர்த்த போதிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஆதரவுடன் தொடர்ந்து நடத்தி பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது.
அநீதியான இந்த இன அழிப்பு யுத்தத்தில் நடுநிலை என்ற பெயரில் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அடியாளாக இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை நிற்கின்ற இந்திய ஒன்றிய பாஜக அரசாங்கமானது ஒருபோதும் இன உரிமைகளுக்காக போராடுவதையோ, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தோ செயல்படாது என்பதை ஈழத்தின் மீதான தடையை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
- மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி