இளம்சிறார்களை குறிவைக்கும் RSS!


மாலைநேர உடற்பயிற்சி என்று 12 முதல் 16, 17 வயதுடைய இளம்சிறார்கள்/மாணவர்கள் மத்தியில் அறிமுகமாகும் RSS இச்சிறார்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகாமையில் பள்ளி மைதானம், பூங்காக்களில் தனது சாகாக்களை நடத்துகிறது. பெரிதும் பொருளாதார பின்புலம் இல்லாத, பொருளாதார சிக்கல்கள் குறித்து சரியானப் புரிதல் இல்லாத இளம்சிறார்களை சாகாக்களில் தொடர்ந்து பங்கேற்கச் செய்து சிறுபான்மையினருக்கு எதிராகக் கலவரம் செய்யத் தயாரிக்கிறது.

தினக்கூலிகளாகவும், உதிரி தொழிலாளிகளாகவும் உள்ள இவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மாலைநேர சாகாக்களுக்கு செல்வது பற்றியோ அல்லது அங்கு உடற்பயிற்சி மட்டுமல்ல, கூடவே கலவரத்துக்கு தனது மகன் தயாரிக்கப்படுவது பற்றியோ அல்லது RSS முதலான இந்துத்துவ அமைப்புகள் பற்றியோ தெரிந்து கொள்வதில்லை. “என் பையனும் எதோ ஒரு கட்சியில் இருக்கிறான்” என்று சொல்லும் அப்பாவிகளாகவே உள்ளனர்.

இவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்த கலவர கும்பல் தங்களிடம் உடற்பயிற்சிக்காக வந்த இளம்சிறார்களுக்கு சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள், மீம்ஸ்கள், Whatsapp பகிர்வுகள், மற்றும் “காவி பாப்” பாடல்கள் மூலம் மூளைச்சலவை செய்கிறது.

அன்றுவரை நண்பர்களாக, சகோதரர்களாக பழகி வந்த சிறுபான்மையினர் மீது வன்மத்தை தூண்டி நாட்டில் நடக்கும் அத்தனை கேடுகளுக்கும், சிக்கல்களுக்கும் சிறுபான்மையினர்தான் காரணம் என்று போதிக்கின்றது.

இவ்வாறு RSS-ன் பயிற்சிப் பட்டறையில் தயாரிக்கப்படும் இவர்களுக்கு பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற கீழ்நிலை அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற புதிது புதிதாக ஊர்வலங்களை நடத்திக் களம் அமைத்துத் தருகின்றன.

இந்த ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் இச்சிறார்களுக்கு ஹாக்கி மட்டைகள், வாள்கள், சூலாயுதம், கைத்துப்பாக்கிகள் என்று ஆயுதங்களை வழங்கி ஏதாவது பிரச்சனை என்றால் எந்த விதமான உதவியும் செய்வதாகவும் உறுதி அளிக்கின்றன.

இத்தகைய பின்னணியில் தான் ஜஹாங்கீர்பூர் போன்ற கலவரங்கள் நடத்தப்படுகின்றன. இக்கலவரத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 12 முதல் 17 வயதுடைய இளம்சிறார்களே.

சாகாக்களில் மூளை சலவை செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் என்றாலும் சாகாக்களில் ஒரு பொது எதிரியாக சித்தரிக்கப்பட்ட முஸ்லிம்களைத் தாக்குவதன் மூலம் தாங்களும் ஒரு சராசரி இந்துவுக்குரிய அங்கீகாரத்தை பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

கலவரங்களில் ஈடுபடும் இளம்சிறார்கள் கைது செய்யப்பட்டு முறையான பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சிறையிலும் அடைபட்டு இருக்க வேண்டியது உள்ளது. ஒருமுறை சிறைக்கு சென்றுவிட்ட பிறகு இவர்கள் முழுநேர ரவுடிகளாக, கலவரக்காரர்களாக, சமூகவிரோதிகளாகபரிணாமம் பெற்றுவிடுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு தலைமுறையை தான் RSS உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் நாளை அமையவிருக்கும் “இந்து ராஷ்டிர”த்துக்கான அடியாட்களாக வளர்த்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் RSS-பாஜக உள்ளிட்ட அனைத்து இந்து மதவாத மக்கள் விரோத பாசிச சக்திகளிடமிருந்து நமது எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பது மிகவும் அவசியமாக உள்ளது. மக்கள் மத்தியில் இத்தகைய அமைப்புகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவது மூலம்தான் நம்முடைய குழந்தைகள் இவ்வமைப்புகளில் சேர்வது தடுக்கப்படும். அதற்காக அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஒரு குறிப்பான செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது இக்காலகட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது.

அத்தகைய ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியை, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! பெரியார், அம்பேத்கர், கேரளத்தின் நாராயணகுரு, கர்நாடகத்தின் பசவண்ணா, மராட்டியத்தில் ஜோதிபாய் பூலே போன்ற பார்ப்பன எதிர்ப்பு மரபில் முன்னணியாக செயல்பட்டவர்கள் முன்வைத்த கருத்துகள் சிந்தனைகள் போன்றவற்றுடன், மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டுகின்ற கம்யூனிச சித்தாந்தத்தையும் மக்கள் மனதில் விதைப்போம்! பாசிச பயங்கரவாத சக்திகளை நாட்டை விட்டே விரட்டி அடிப்போம்!

  • ஜூலியஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here