கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆயிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நவம்பர் 21ம் தேதி பெற்றோருடன் சென்று, கோவை மாவட்ட கல்வி அலுவலரிடம் தனக்கு ஆசிரியர்கள் தொல்லை கொடுப்பதாகவும், தந்தையின் தொழிலை மையப்படுத்தி தன்னை திட்டி, அடித்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். (BBC தமிழ்)

பீப் ஸ்டால் நடத்துவது தவறா?

பள்ளி மாணவியின் தந்தை முக்தார் மாட்டுக் கறி கடை நடத்திவரும் இஸ்லாமியர். இதற்காகவே இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியை அபிநயா  ஏழாம் வகுப்பு பள்ளி மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார்.

இதையும் படிக்க: பள்ளிக்கூடங்களை சூழும் காவி விசம்!

அரசு வகுத்துத் தந்த பாடத்திட்டத்தின்படி வகுப்பெடுப்பதை விடுத்து, மாட்டுக்கறி தின்பவர்கள் கேவலமானவர்கள் என்று பதிய வைத்து, அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதற்காக  பள்ளி மாணவர்களுக்கு நடைமுறை வகுப்பெடுத்துள்ளார்.

புர்காவும் கூட குற்றமா?

இஸ்லாமிய மாணவி போட்டிருந்த புர்காவை கழட்டி சக மாணவர்களின் செருப்பை துடைக்கும் படி செய்துள்ளனர். இஸ்லாமிய மாணவர்களை இப்படி அவமானப்படுத்தி, படிப்பை கெடுத்து, இஸ்லாமிய மதப் பள்ளிகளை நோக்கி நெட்டித் தள்ளி, அவர்களை யாராக மாற்ற துடிக்கிறது சங்கி கும்பல்?

ஆசிரியை அபிநயா மட்டுமின்றி, ஆங்கில ஆசிரியர் ராஜ்குமார், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி வரை அனைவரும் இக்கொடுமைக்கு துணை நின்றுள்ளனர். அதாவது கோவையிலுள்ள இப்பள்ளியில் இந்து மத வெறியர்களின் இஸ்லாமிய வெறுப்புணர்வு இயல்பானதாக மாறிவிட்டுள்ளது.

காவிகள் வளரும் கொங்கு மண்டலம்!

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் – பாஜக காலூன்ற  அதிக கவனம் கொடுக்கும் பகுதி கொங்கு மண்டலம். அதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கருதுகிறது.

கூட்டணி பலத்துடன் போட்டியிட்டாலும் கூட, பாஜகவால் தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் தான் வெல்ல முடிகிறது. அதில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ள கோவையும் அடங்கும்.

இங்குதான் காலம்காலமாக ஆதிக்க சாதி வெறியர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் கேடாக நடத்தப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் ஆதிக்கம் செய்பவர்களாக கொங்கு வெள்ளாள கவுண்டர்களும், அதற்கு அடுத்ததாக நாயுடுகளும் உள்ளனர்.

கோவையில் தொழில் வளர்ச்சி எந்த அளவு உள்ளதோ அதற்கு நேர் மாறாக, சாதிய வன்மமும் அப்படியே பராமரிக்கப்படுகிறது. வள்ளி கும்மியில் பெண்களிடம் சத்தியம் வாங்கியதை இதோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: வள்ளிக்கும்மி – ஒரு நண்பரின் அனுபவம்!

அர்ஜுன் சம்பத் போன்ற அடியாட்களை வளர்த்து, கெம்பட்டி காலனி போன்ற பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை களத்தில் இறக்கி, இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகளை நடத்தி, அதன் மூலம் இந்து பெரும்பான்மையினரை தமது பிடிக்கும் கொண்டு வந்து விட தொடர்ந்து எத்தனிக்கிறது காவி கும்பல்.

கோவையை காவியாக்கும் இந்த திருப்பணிக்கு ரவுடிகளும் கிரிமினல்களும் மட்டும் போதாது. சங்கி அபிநயாக்களும் அவசியம் தேவை.

எனவே இஸ்லாமிய வெறுப்பை விதைத்துள்ள அசோகபுரம் அரசு பள்ளியின் ஆசிரியர்களையும்,  மாணவியின் புகாரை விசாரித்தும் உரிய நடவடிக்கையை எடுக்காமல் தாமதப்படுத்தும்  காவல் துறையினரையும்,  பள்ளி கல்வித்துறையினரையும் பாதுகாக்கவும், தொடர்ந்து சங்கிகளுக்கு ஆதரவாக நிற்கவைக்கவும் RSS எதையும் செய்யும்.

1998  கலவரத்தை மூலதனமாக்கித்தான் காவி கும்பல் கோவையில் கால் பதித்துள்ளது. தற்போது அது வளர வேண்டும் என்றால் அதற்கும் கலவரங்களே தேவை. அதற்கான அடியாட்களை வளர்த்துத் தர அபிநயாக்களும் தேவை. சங்கி வானதியின் தயவில் அபிநயாவுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. சங்கிகளின் ஆட்சி அதிகாரம் நீடித்தால், விரிவடைந்தால், ஆசிரியராக இருக்கும் அபிநயா  நிரந்தரமாக்கப்படுவதோடு, உயர் பொறுப்புகளுக்கு உயர்த்தப்படுவதும் கூட நடக்கும்.

மதசார்பின்மையை விரும்புபவர்கள் ஒதுங்கி இருக்கலாமா?

சட்டம் தன் கடமையை செய்யும்  என நாம் ஒதுங்கி இருப்பது தவறு. காவி பாசிசம் சட்டத்தின் துணை கொண்டு தான் பற்றி படர்ந்து வருகிறது.

அரசின் பல்வேறு உறுப்புகளில், பல்வேறு மட்டங்களில் ஊடுருவி உள்ள சங்கிகளை கண்டறிந்து களையெடுக்காமல், நாம் கலவரங்களை தடுக்க முடியாது, மேற்கு மண்டலத்தையும் பாதுகாக்க முடியாது.

 

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here