
“பல்வேறு தொழில்கள், கல்வி மற்றும் வருமான நிலைகளால் வகைப்படுத்தப்பட்ட இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட மற்றும் மாறுபட்ட நடுத்தர வர்க்கம், 2000-களில் இருந்து கணிசமாக விரிவடைந்துள்ளது. இது இப்போது உள்நாடு மற்றும் உலகளாவிய வணிகங்களுக்கு கணிசமான நுகர்வோர் சந்தையாக உள்ளது. ஆனால் அது அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் சாத்தியமான சமூக அமைதியின்மை போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. நடுத்தர வர்க்கத்தினரின் அளவு குறைவதையும், சாத்தியமான சமூக நெருக்கடியையும் தடுக்க, நாட்டின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.” என்று முன்மொழிகிறார் சந்தியா கிருஷ்ணன் என்ற அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆய்வு மாணவர்.
இந்தியாவின் பொருளாதார தன்மையைப் பற்றியும் வளர்ந்து வருகின்ற மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை பற்றியும் உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
உலகில் முதல் நிலை மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களின் இலக்கணத்தின்படியும், PRICE என்று சொல்லப்படுகின்ற ஆய்வு மையத்தின் கணக்கீட்டின்படியும் ஆண்டொன்றுக்கு சுமார் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வருமானம் வருகின்ற அனைவரும் நடுத்தர வர்க்கம் என்று கணக்கில் வருகிறது.
இந்த நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்த துவங்கியது முதல் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 31 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கமாக உள்ளனர் என்ற கணக்கு முன் வைக்கப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவுகளை கணக்கில் வைத்துக் கொண்டுதான் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பாசிச மோடி அரசு சாமியாடி கொண்டுள்ளது.

இந்த மிகப்பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தின் வாக்குகளை குறிவைத்தும், தனது கூட்டணியில் உள்ள பீகார், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை முன்வைத்தும் 2025-26 க்கான பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் பல அம்சங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது என்பதால் இந்திய தொழில்துறை கூட்டமைப்புகளான பிக்கி, சிஐஐ, அசோசெம் போன்றவை நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக முன் வைத்துள்ள இந்த பட்ஜெட்டை வரவேற்று குதியாட்டம் போடுகின்றனர்.
தமிழில் பார்ப்பன நாளேடுகளான தினமலர், தமிழ் இந்து போன்ற பத்திரிகைகள் நடுத்தர வர்க்கத்திற்கு வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது என்று தலைப்பிட்டு குதூகலிக்கின்றன. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும் குறிப்பாக ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் மட்டும்தான் நடுத்தர வர்க்கம் என்று வரையறை செய்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கி கட்டுமான தொழில் காண்ட்ராக்டர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து தனது தொழிலை அமைத்துக் கொண்டுள்ள சிறு குறு தொழில் முனைவோர்கள் போன்றவர்கள் புதுப் பணக்காரர்களாக உருவாகி வருகின்றனர் என்பதும் சந்தையில் குவிக்கப்படும் நுகர்வு பொருட்களை வாங்கி நுகர்கின்ற வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர் என்பதும் புதிய போக்காக உருவாகியுள்ளது.
படிக்க:
♦ இந்திய ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பட்டை நாமம்!
♦ கோடிக்கணக்கான மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்! | மக்கள் அதிகாரம் || தோழர் காளியப்பன்
இத்தகைய ‘நடுத்தர வர்க்கத்தினரும்’ மேட்டுக்குடிகளும் மற்றும் தரகு முதலாளிகள் தேசங்கடந்த தரகு முதலாளிகள் ஆகியோர்களின் குடும்பங்கள் குலக்கொழுந்துகள் உள்ளடக்கிய மூன்றில் ஒரு பங்கு மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கின்ற இந்தியா என்று நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
இதுவல்லாமல் மூன்றில் இரண்டு பங்கு பேர் தினக்கூலி தொழிலாளிகளாகவும் ஓலா, உபேர், ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற கிக் தொழில்களை செய்து தனது வயிற்று பிழைப்பை ஒட்டி வருகின்றனர் என்பதும், கிராமப்புறங்களில் விவசாயம் பாதிப்படைந்துள்ளதால் நாட்டின் சரி பாதி மக்கள் தொகை நிரந்தர வருவாய் இல்லாமல் அரசாங்கத்தின் திட்டங்களான மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றை எதிர்பார்த்து தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு உள்ளனர்.
இத்தகைய சூழலில் நடுத்தர வர்க்கத்திற்கு வாரிக் கொடுத்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகின்ற இந்த பட்ஜெட் அப்பட்டமான மோசடித்தன்மை கொண்டது. நாட்டின் ராணுவத்திற்கு 6.8% தொகையும் மக்களின் கல்விக்கு 1.3 சதவீதமும் விவசாயத்திற்கு 1.4 சதவீதமும் மட்டுமே ஒதுக்கியுள்ள சூழலில் கடந்த பட்ஜெட்டுகளை விட மக்கள் நலத்திட்டங்களுக்கும் இந்திய ஒன்றிய அரசு முன்வைத்துள்ள அனைவருக்கும் குடிநீர், அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படாதது மட்டுமின்றி சென்ற ஆண்டை விட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை நிலவரமாகும்.
தற்போது நடுத்தர வர்க்கத்திற்கு வரி விலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், ஏர் கண்டிஷன், ரெப்ஜிரேட்டர் மற்றும் வாஷிங் மெஷின் புதுப்புது மாடல்களில் வருகின்ற மொபைல் போன்கள் போன்றவற்றை தங்கு தடை இன்றி வாங்கி நுகர்வதற்கு அவர்கள் கையில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து இன்னொரு கையில் புடுங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என்பது தான் உண்மையாகும்.
படிக்க:
♦ சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?
♦ பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது தற்குறி சீமான், தன்னை சங்கிதான் என்பதனை நிர்வாணமாகக் காட்டிக்கொண்டு விட்டார்!
இதன் காரணமாகவே இந்திய தொழில் முதலாளிகள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் மிகப்பெரும் ஷாப்பிங் மால்களை நடத்துகின்ற ராதாகிருஷ்ணன் தமனி போன்றவர்கள் இந்த பட்ஜெட்டுகளை வரவேற்று வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்து கொண்டுள்ளனர்.
ஆனால் ஏற்கனவே ஜி எஸ் டி உள்ளிட்ட பன்முக வரி விதிப்பின் மூலமாக வாழ்க்கையை இழந்துள்ள சிறு குறு தொழில் முனைவோர்கள் முதல் விவசாயிகள், தொழிலாளர்கள் வரை இந்த பட்ஜெட்டினால் நேரடியாக பலன் எதையும் பெறவில்லை.
மாறாக கல்வி, மருத்துவம் சுகாதாரம் துவங்கி நல்ல குடிநீர் சாலை போக்குவரத்து மற்றும் அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய், குழந்தைகளுக்கான பால் பவுடர் ஆகியவற்றிற்கு லட்சக்கணக்கான ரூபாயை கொட்டி அழவேண்டும் என்பதுதான் நிலைமை.
எனவே பட்ஜெட்டை பற்றி பாசிச மோடி கும்பலின் கோடி மீடியாக்கள் உருவாக்குகின்ற மாயையில் இருந்து விடுபடுவோம்.
நாட்டின் அடிப்படை தொழிலான விவசாயம் முதல் தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் சிறு குறு தொழில் முனைவோர்கள், மீனவர்கள் வரையிலான பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு பொருத்தமான மாற்று வழியை தேடி முன்னேறுவோம்.
- மாசாணம்.