நூல் அறிமுகம் :
நூல் : “பசுவுக்கு யார் மணி கட்டுவது ?”  – ஆசிரியர் : சுருதி.
மாட்டுக் கறி :  “பசுவதைத் தடைச்சட்ட” அரசியல் !

‘ புனிதப் பசு ‘ என்று ” அவர்கள் ” சொல்கிறார்கள், பசுத்தோலை உரித்தார்கள் என்று  பொய் சொல்லி முசுலீமைக் கொல்கிறார்கள்.  என்ன புனிதம், என்னதான் ரகசியம் என்று துருவ ஆரம்பித்தார் மும்பையைச் சேர்ந்த எழுத்தாளர் சுருதி. தொடர்ச்சியாக  ஒரு ஆய்வு,  ஒரு நூல் என்று  இவர்  பயணம் தொடர்ந்தது.

மகாராஷ்டிரா உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டுக்கறித்தடை,  மாட்டுத் தொட்டி  மூடல்,  அனுமதி பெறாத கறிக்கடைகள் மூடல் என்று செய்திகள் வரவர சுருதியும் சுறுசுறுப்பானார், தேடினார்.

பிறகு ‘பசுப் பாதுகாப்பை’ முன்தள்ளி ஆங்காங்கே வன்முறைகள்வெடித்தன ; ‘ பசுப் பாதுகாப்புக் கமிட்டிகள் உருவாயின. ” மதத்தை வைத்துக் கலவரங்கள் நடத்தப்பட்டதை  நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால்  சாப்பிடும் உணவை வைத்துச் சவுக்கடித் தண்டனை கொடுப்பதெல்லாம் என்தலைமுறைக்கே புதிது. ” —  இவ்வாறு  SUNDAY MIDDAY  ஏட்டுக்குப் பேட்டி அளித்த சுருதி சொல்கிறார்.

2019 – ல் சுருதி ஆய்வைத்  தொடங்கினார்.  இந்தியாவில் மாட்டுக் கறித் தடை சம்பந்தமான மத, அரசியல் வரலாற்று ஆய்வை    அவர் ஆரம்பித்தார். அறிவுள்ள ஒரு சமூகத்தின் பொருளாதாரத்தை அந்தத் தடைகள் எப்படியெல்லாம் அறிவு அழிந்து  நொறுக்கின என்பது ஆய்வு. பிறகு அதையே  நூலாக்கி  ” பசுமாட்டுக்கு  யார்  மணிகட்டுவது ? ”  என்ற தலைப்பில் ( எழுத்தாளர்களே தங்கள் செலவில் நூல் வெளியிட உதவும் உலகப் பதிப்பகமான NOTION PRESSமூலம் )  வெளியிட்டார். பசுவைக்  கும்பிடும்  பழக்கம்,   பசு அரசியல் இரண்டும் தனித்தனியே பிரித்துப் பார்க்கப்பட வேண்டியவை அல்ல ! என்ற ரகசியத்தைத் தோலுரித்தார் சுருதி.

பேட்டியின் சுருக்கம் கீழே.

கேள்வி :   நூலில் ” ‘ பசுப் பாதுகாப்பு இயக்கம் ‘ தொடர்ந்தால் பசு இனம் அழிக்கப்படுவதில்  போய்முடியும் ” என்று சொல்கிறீர்கள்.  ஏன் ?

பதில்:   சுருதி :   பாரம்பரியமாகவே மாட்டை வீடுகளில் பழக்கியிருக்கிறோம்; மாடு விவசாயத்துக்காக பயன்படுகிறது; பசுமாடு பால் தருகிறது; மாடுகளில் கறி எடுக்கிறோம். நாட்டில் பசுவைக் கொல்வது  தடுக்கப்பட்ட பிறகு, விவசாயிகள் மாடுவளர்ப்பது குறைந்துவிட்டது. நான் ஆய்வின்  ஒரு பகுதியாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தௌரலா என்ற கிராமத்துக்குப் போனேன்.மொத்தம் மக்கள் தொகையே சுமார் 19,000 தான். விவசாயிகள் பசுக்களை, காளைகளை  வாங்குவதை நிறுத்திவிட்டார்கள்.ஒருகாலத்தில் அங்கே 200 — 300 ஜதை காளைகள் இருந்திருக்கின்றன; அதே இடத்தில் 2,3 ஜதை காளைகள் மட்டுமே பார்க்க முடிகிறது. பால்தரும் பசுவைவிட பெண் எருமைகளை வளர்ப்பதையே விரும்புகிறார்கள்.

புள்ளிவிவரங்களைப் பாருங்கள். ‘ பசுவதைத் தடுப்பின் நோக்கம் பசுக்களைக் காப்பாற்றுவது என்றால் பசு எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கவேண்டும். ஆனால் 1951 — 2019 என்று இரண்டு கட்டங்களின் புள்ளி விவரங்களை ஒப்பிடுங்கள். மொத்தமாக,  கால்நடைகளின் ( பசு, காளை ) எண்ணிக்கை 23% மட்டுமே அதிகரித்திருக்கிறது ; ஆனால் எருமைகளின் எண்ணிக்கை 153.8% அதிகரித்துவிட்டது.  2012 -ல் ‘ பசுவைப் பாதுகாப்போம் ! ‘ என்று இயக்கத்தைத் தீவிரப் படுத்தினார்கள். அப்போது இருந்த கால்நடை எண்ணிக்கையை 2019– கணக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.  குஜராத், உத்தரப்பிரதேசம் இரண்டு மாநிலங்கள்தான் இயக்கத்தைத் தீவிரமாக நடத்தினார்கள். அங்கே கால்நடை எண்ணிக்கை குறைந்துவிட்டது.  எதார்த்தக் கள  நிலவரம்ஏன் வேறுமாதிரி இருக்கிறது ?  உணவுக்கோ, விவசாயத்துக்கோ   பயன்படுத்தப்படவில்லையானால் எப்படிக் காணாமல் போயின ? ரகசியமாகக்  கொலை செய்கிறார்கள் அல்லது  கன்றாக இருக்கும்போதே  கொன்றுவிடுகிறார்கள். இதற்கு என்ன பொருள் ? கால்நடைகளை ஒட்டுமொத்தாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே பொருள் ?

கேள்வி:    உங்கள் ஆய்வின் பகுதியாக வடஇந்தியாவில் மாட்டுக் கொட்டில்களைச் ( கோசாலைகளை ) சுற்றிப் பார்த்துவிட்டு வந்தீர்களே, என்ன பார்த்தீர்கள் ?

சுருதி:    மாட்டுக் கொட்டில்கள்  இரண்டுவிதம். ஒன்று : அரசுப் பொறுப்பில் ;  மற்றது : உள்ளூர் சமூகக் குழுக்களின் பொறுப்பில். அரசுப் பொறுப்பில்  உள்ள அத்தனையும் குப்பை. கண்காணிப்பு இல்லை. தீவனம், மருத்துவச் செலவுக்காக மாடு ஒன்றுக்கு அரசு கொடுப்பது ரூ.20.உண்மையில் செலவு ரூ.120 முதல் ரூ.150 ஆகும். அப்படியானால் கொண்டுவரப்பட்ட மாடுகள் கதி, நேரே கதிமோட்சம் தான்! உள்ளே போய்ப்பார்க்க அனுமதியும்  கிடையாது. அரசாங்கத் தரப்பிலிருந்து கணக்குத் தணிக்கையும் நடப்பதில்லை. சமூகக் குழுக்கள் பொறுப்பில் உள்ளவை ஓரளவாவது சுமாராக உள்ளன. மாட்டுத் தீவனம், மருத்துவம் பரவாயில்லை.

ஒன்றிய அரசிலிருந்து திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு கோசாலைக்  கண்காணிப்புக்கு  ஆகும் மொத்தச் செலவு விவரம்  தெரியவில்லை.

கேள்வி:      ‘ பசுப் பாதுகாப்பு இயக்கம் ‘ வந்தபிறகு நாட்டுப்புறப் பொருளாதாரத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நூலில் சொல்லியிருக்கிறீர்கள். அவை என்ன?

சுருதி:     மோசமான பாதிப்பு விவசாயிகளுக்குத்தான். விவசாயப் பொருளாதாரம் என்பது மிக எளிமையாகச் செயல்படுவதாகும் — பால்தரும் பசுக்களை குறிப்பிட்ட காலம் வளர்ப்பார்கள்; காளைகளை உழுவதற்குப் பயன்படுத்துவார்கள் ; அவற்றுக்கு வயதானபிறகு மாட்டுத்தொட்டிக்கு விற்றுவிடுவார்கள். விற்ற பணத்தை வைத்து மிச்ச மாடுகளை பராமரிக்கச் செலவிடுவார்கள் ; இப்போது சட்டம் வந்தபிறகு அந்தமாடுகளை, அவை சாகிறவரை வீட்டில் வைத்துக் காப்பாற்றவேண்டும். ‘பசுப் பாதுகாப்புக்  குண்டர்கள்  என்றாலே விவசாயிகளுக்குப் பயம். சிலர் அப்படியே தெருவில் பசு/ மாடுகளை அலையவிட்டு விடுவார்கள். அவை  தீனிக்கு ஆலாய்ப் பறக்கும்,  பயிர்களில் இறங்கி மேய்ந்துவிடும்.  இப்படியே நாட்டுப்புறப் பொருளாதாரச் சுழற்சியானது கலங்கிப் போய்விட்டது.

கேள்வி:    என்.சி.ஆர்.பி – யிடம் ( NCRB : National Crime Records Burreau: தேசியக் குற்றஆவணங்கள் காப்பகம் ) பசு சம்பந்தமான ‘ சவுக்கடிக் குற்றங்கள் ‘ பற்றிய விவரங்களே இல்லை என்று நூலில் எழுதியிருக்கிறீர்கள். அந்தக் குற்றங்கள் பற்றி உங்களுக்கு எப்படித் துப்பு கிடைக்கிறது ?  அது என்ன விளைவை ஏற்படுத்தியது என்று பார்க்கிறீர்கள் ?

சுருதி:     ஆமாம், அரசாங்கத்திடம் புள்ளிவிவரம் இல்லை;  மக்கள் என்ன புகார் கொடுக்கிறார்களோ அதையெல்லாம் திரட்டி  ‘ சமூக நலக் குழுக்கள் ‘ சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான்  வாங்கினேன்.தவிர, கடந்தகாலத்தில் 11 மாநிலங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களின் கீழ் “கேள்விகளை ”  அனுப்பினேன். மூன்று வகையான கேள்விகள் தயாரித்துச் சுற்றுக்கு அனுப்பினேன். ஒன்று : பசுவதை சம்பந்தமான குற்றவழக்குகள் என்னென்ன வந்தன என்று உள்துறை அமைச்சகத்துக்கு; இரண்டாவது : ” அவை பசுக்களின் கறிதானா? ” என்று அறிய ‘ தடயவியல் ஆய்வுக் கழகத்’ துக்கு;  கடைசியாக, மூன்றாவது : வேளாண் விலங்கியல் துறையில்அவை சம்பந்தமாக என்னென்ன திட்டங்கள் வந்தன, கணக்குகள் முறையாகச் சோதிக்கப்பட்டனவா என்பவற்றுக்கான கேள்விகள்.

இதையும் படியுங்கள்:

நான் கேட்ட அத்தனைக் கேள்விகளுக்குமே பதில் கொடுத்தது — ஜார்கண்ட் மாநிலம் மட்டுமே. 2014 – க்குப் பிறகு வன்முறைகள் நடந்தன என்று திரட்டிய விவரங்களைவைத்து ஊகித்தேன். உத்தரப்பிரதேச அரசு ஒருசிறு விவரம்கூடத் தரவில்லை — காரணம் அவ்வாறு தருவது மக்கள் பொது நலனுக்கு உகந்தது அல்ல என்று கைவிரித்துவிட்டார்கள். மொத்த வழக்குகள் மகாராட்டிர மாநில அரசிடம் விவரமில்லை ; ஆனால் அங்கிருந்த  ‘ தடயவியல் துறை ‘ கொடுத்த புள்ளிவிவரத்திலிருந்து, மாட்டுக்கறி கடத்தப்பட்டுவந்தது அதிகரித்துவிட்டதென்று தெளிவாகத் தெரிந்தது. என் கேள்வி இதுதான் : சரியான புள்ளிவிவரங்கள்  இல்லை என்றால், ‘ பசுப் பாதுகாப்புத் திட்டத்தை ‘ எப்படி நடைமுறைப்படுத்தி உத்தரவாதப் படுத்துவார்களாம்?

கேள்வி:   இந்தியாவில் பசுவை வைத்து அரசியல் செய்வது முடிவுக்கு வருமா, வராதா?

சுருதி:    முடிவுக்கு வராது என்பதே வருந்தத்தக்க செய்தி. நம் மூளைகள் ஒருவிதப் பழக்கவழக்கத்துக்கு ஏற்ப ஆக்கப்பட்டுவிட்டன. ஒ்ருவகை தத்துவம், ஒரு வகையான இலக்கியம், ஒருவகையாக தயாரிக்கப்பட்ட உள்கட்டுமானம்.இதுபோலவே

‘பசுப்பாதுகாப்பு இயக்கத்துக்’ கான (  ‘ கோ ரக்ஷக் சமிதி ‘  )  குண்டர்களும் தயாரிக்கப்பட்டுவிட்டார்கள். எப்போதெல்லாம் அவர்களுக்கு இவ்வியக்கம் அரசியல் காரணங்களுக்காகத் தேவைப்படுகிறதோ  அப்போது பிரச்சினையைக் கிளப்புவார்கள்.

ஆதாரம் : SUNDAY MIDDAY  ஏடு,  மும்பை. நூல் அறிமுகம், செப்.2022.

ஆக்கம்   :  இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here