பேய் அரசாளும் மாநிலங்களில் பிணந்தின்னி கழுகுகள் சிறுபான்மை மக்களை கொன்று தின்கிறது. கடந்த 9 வருடங்களாக தொடர்கிறது இந்தப் படுகொலைகள்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கோபால்கரில் இருந்து சங்பரிவார் கும்பலால் கடத்தப்பட்ட இருவர் பிணங்களாகத் தான் மீட்கப்பட்டனர்.

தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக பொலீரோ காரில் சென்றவர்கள் திரும்பவில்லை. இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பதட்டம் அடைந்தனர். அவர்களது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்  ஃபெரோஸ்பூர் ஜிர்காவைச் சேர்ந்த சர்பஞ்ச் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் காணாமல் போனவரின் உறவினரை தொலைபேசியில் அழைத்து ஜுனைத் மற்றும் நசீர் ஆகியோர் சுமார் 8-10 பேர் கொண்ட கும்பலால் மோசமாக தாக்கப்பட்டதாகவும், பின்னர் ஃபெரோஸ்பூர் ஜிர்கா காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதன் பிறகு ஆபத்தை உணர்ந்த உறவினர்கள் கோபால்கர் காவல் நிலையத்தில் இருவர் காணாமல் போனதாகவும் பஜ்ரங்தள் உறுப்பினர்களால் கடத்தப்பட்டதாகவும் அவரது உறவினர் இஸ்மாயில் மூலம் புகார் அளித்தனர். அவர்கள் மீது FIR-ம் பதியப்பட்டது.

பிப்ரவரி 16 காலை 8 மணியளவில் ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் எரிந்த நிலையில் வெள்ளை நிற பொலீரோ கார் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் இருவர் எரிந்த நிலையில் பிணமாக இருப்பதாகவும் தகவல் வந்தது. இதையடுத்து பிணங்கள் அடையாளம் காணப்பட்டு காணாமல் போன ஜூனைத் மற்றும் நசீர் என்று உறுதி செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவரான ஃபெரோஸ்பூர் ஜிர்காவைச் சேர்ந்த ரிங்கு சைனி என்பவன் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. கைது செய்யப்பட்ட 32 வயதாகும் சைனி பசு பாதுகாவலனாக தன்னை அறிவித்துக் கொண்டு மாடு ‘கடத்தி’ செல்பவர்களை பிடிப்பதாக கூறுகிறது அறிக்கை.

ஜூனைத், சமீர் கொலையின் முக்கிய குற்றவாளி:

FIR-ல் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான மோனு மானேசர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் நடந்த அன்று இருவரையும் கடத்திய ‘பசுபாதுகாவலர்’ கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பதற்காக அழைத்து வந்த நிலையில் இது எங்கள் எல்லைக்கு உட்பட்ட வழக்கு இல்லை என்பதால் எங்களால் கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளார்கள். தாக்கப்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் அவர்களை 20 மணி நேரம் காரிலேயே வைத்து சுற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கட்டத்தில் காரிலேயே வைத்து 2 பேரையும் எரித்துள்ளார்கள்.

இதில் முக்கிய குற்றவாளியான மோனு மானேசர் இந்த சம்பவம் நடந்த போது, ‘தான் குருகிராமில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், இந்த கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை’ என்றும் டிவிட்டரில் தெரிவித்திருந்தான்.

யார் இந்த மோனு மானேசர்?

‘குருகிராம் பஜ்ரங் தள்’ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர், மோஹித் யாதவ் என்ற மோனு மானேசர், கால்நடை கடத்தல் மற்றும் பசு வதை தொடர்பான வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் குழுவான” கோ டாஸ்க் ஃபோர்ஸுடன்” தொடர்புடையவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 2011 ஆம் ஆண்டில் பஜ்ரங்தளில் சேர்ந்ததிலிருந்து அவன் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக உள்ளான், மேலும் பானிபட், பிவானி, சோனிபட், குருகிராம், ரேவாரி, நுஹ் மற்றும் பல்வால் ஆகிய இடங்களில் அவன் ஒரு குழுவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சமூகவலைதளங்களில் குறிப்பாக யூடியூப்பில் பசு பாதுகாவலர்கள் என்று இஸ்லாமியர்களை கொலைவெறி கொண்டு தாக்கும் வீடியோக்களை பதிவிட்டுள்ளான். இதனை அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதால் யூடியூப் silver play button-ஐ மதவெறியர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த பிரச்சினைக்கு பிறகே இது சம்மந்தமான 9 வீடியோக்களை நீக்கியுள்ளது. பேஸ்புக்கில் இன்னும் இது சம்மந்தமான வீடியோக்கள் நீடிக்கின்றன. தடை செய்யப்படவில்லை. “விவசாயிகளை தாக்கிய படங்களை பதிவிட்டாலே வன்முறையை தூண்டுகிறது என்று தடைசெய்யும் பேஸ்புக், மதவெறி பாசிஸ்டுகளுக்கு சாதகமாக செயல்படுகிறது.”

பஜ்ரங்தள் குண்டர்களால் ஜூனைத், சமீர் கொல்லப்பட்டது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல!.

மேவாட் பிராந்தியத்தின் ஒரு பகுதியான ஹரியானாவின் நுஹ் பகுதியைச் சேர்ந்த வாரிஸ் கான் ஜனவரி 28 அன்று, பஜ்ரங் தளத்தின் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர். புகாரில் மானேசர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

காயமடைந்த 3 பேரும் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு அவர்களின் பெயர்களை தெரிவிக்குமாறு கேட்கப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது. ஒருவர் தனது பெயர் வாரிஸ் என்று கூறினார்.

ஒரு நாள் கழித்து, ஆம்னெஸ்டி இந்தியா ட்வீட் செய்தது: “ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் 21 வயதான முஸ்லிம் விவசாயி வாரிஸ் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதைக் கண்டு நாங்கள் பீதியடைகிறோம். அவரது கொலை பாரபட்சம் மற்றும் சகிப்பின்மையால் தூண்டப்பட்டதா? என்பதை ஹரியானா அரசு உடனடியாக, சுதந்திரமாக மற்றும் பாரபட்சமின்றி விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இருப்பினும், வாரிஸ்கான் சாலை விபத்தில் காயமடைந்து இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். வாரிஸ் கானின் குடும்பத்தினர் அளித்த புகாரில் மோனு மானேசரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்,  போலீசார் புகாரை எஃப்.ஐ.ஆராக மாற்றவில்லை.

கொலைகார கும்பலை வளர்த்த ஹரியானா அரசு!

மோனு மானேசர் உள்ளிட்ட பசு குண்டர்களை வளர்த்ததில் ஹரியானா அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் பங்குண்டு. ஹரியானா காவல்துறையுடன் சேர்ந்துக் கொண்டு தான் அத்தனை அத்துமீறல்களையும் நிகழ்த்தியுள்ளது இந்த மதவெறிக் கும்பல்.

பசு பாதுகாப்பில் ஈடுபட்டதற்காக மாநில காவல்துறையால் பாராட்டப்பட்டுள்ளார்கள். பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்களை துன்புறுத்தியதற்காகவும், கொலை செய்ததற்காகவும் மோனு மானேசருக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி கலா ராமச்சந்திரன், குருகிராம் போலீஸ் கமிஷனர் ஆகியோர் பாராட்டிய படங்களை சமூகவலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறான் குற்றவாளியான மோனு மானேசர். இந்த கொலைக்கு பின்னர் இந்த பதிவை நீக்கியுள்ளான் மானேசர்.

ஹரியானா பசுவதை தடை சட்டம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு ஹரியானா பாஜக அரசு, பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவில், ”பசுவை கொன்றால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.


இதையும் படியுங்கள்: கர்நாடகாவில் தலித் பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!


அதேபோல், மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், இறைச்சிக்காக மாடுகளை கொல்வது ஜாமீன் பெற முடியாத குற்றம்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அப்படி கடத்துபவர்களாக கருதப்படுபவர்களை ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் உருவாக்கிய பசு பாதுகாவலர்களால் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமே தொடர்கிறது. சட்டத்தை அமல்படுத்தாமல் பாசிசத்தை நடைமுறைபடுத்துகிறது பாஜக அரசு.

பசு (குண்டர்கள்) பாதுகாவலர்கள்:

பாஜக,பசுவை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளான பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளில் உள்ளவர்களை கொண்டு ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.  2017 ஆகஸ்டில், ஹரியானா மாநிலத்தில் பசு பாதுகாவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்தது.

அன்று முதல் ஹரியானா பாஜக அரசின் துணையோடு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது இந்த கும்பல். குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து தாக்குவதோடு கொலையும் செய்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற அமைப்பாக செயல்படும் இந்த அமைப்பிற்கு ஹரியானா மாநில அரசு நேரடியாக இதன் செயல்களை ஆதரிக்கிறது.

பெயர் வெளியிட விரும்பாத சிர்சா மற்றும் ஃபதேஹாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பசு (குண்டா்கள்) பாதுகாவலர்கள், மாநிலத்தில் 15,000 க்கும் மேற்பட்ட பசு பாதுகாவலர்கள் செயல்பட்டு வருவதாகவும், முக்கிய மூன்று குழுக்களான கோ ரக்ஷா தள், பஜ்ரங் தள் மற்றும் கௌபுத்ரா சேனா  ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறினர் ொ.

குற்றவாளிகளுக்கு துணையாய் ஹிந்து மகாபஞ்சாயத்!

குற்றவாளியை காப்பாற்றுவதற்காக சங்பரிவார் அமைப்புகள் ஒன்று சேர்ந்து முதல் மகாபஞ்சாயத்தை கூட்டியது. பசு பாதுகாவலர் மோனு மானேசர் நிரபராதி என்றும், அவரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் முடிவு செய்தன. மானேசர் பகுதிக்குள் போலீசாரை அனுமதிக்க மாட்டோம் என்றும், மோனு கைது செய்யப்பட்டால், டெல்லி-ஜெய்ப்பூர் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடுப்போம் என்றும் இந்து குழுக்கள் முடிவு செய்தன.

அதையும் மீறி ராஜஸ்தான் காவல்துறையினர் மானேசரில் உள்ள மோனுவின் வீட்டிற்கு வக்கீல் நோட்டீஸ் வழங்க வந்திருப்பதை அறிந்த மகாபஞ்சாயத் கும்பல், குற்றவாளியின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அதற்குள் போலீஸ் குழுவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அன்று  மதியம், 1:00 மணி முதல், 1:22 மணி வரை, தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட கும்பல், பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

பிப்ரவரி 22 அன்று ஹரியானாவின் ஹாத்தினில், பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்த இரண்டாவது ‘இந்து மகாபஞ்சாயத்’  மோனுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான வன்முறைக்கு பகிரங்க அழைப்பு விடுத்தது.

ஹாத்தினில் நடந்த நிகழ்வில் வட இந்தியா முழுவதிலுமிருந்து பஜ்ரங் தள், வி.எச்.பி மற்றும் இந்து சேனாவின் 400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.

ஹரியானாவில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திட்டமிட்டே ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் அவர்களை தாக்குவதும், தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதும் காவல்துறையின் பக்கபலத்தோடு நடக்கிறது. எது நடந்தாலும் அரசும், சங்பரிவார் கும்பலும் துணைக்கு இருக்கிறது என்ற திமிரோடு கொலையும் செய்கிறார்கள். இந்த வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறது சங்பரிவார் கும்பல். சிபிஐ ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்படுவதால் நிச்சயம் இதில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

ராஜஸ்தான் போலீஸ் வெளியிட்டிருக்கும் கொலைக் குற்றவாளிகளின் பட்டியல் 8 பேரில் மோனு மானேசர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அவனை தேடி வருவதாக காவல்துறை சொல்கிறது. கடைசியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மானேசர் நேபாளத்திற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சினை முடியும் வரை அவன் இந்தியா திரும்ப போவதுமில்லை, கைது செய்யப்பட போவதுமில்லை.

ஹரியானாவில் காஷ்மீர் ஃபார்முலா:

ஹரியானாவின் மியோ முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மேவாட் பகுதியில் உள்ள மக்கள், ‘பசு பாதுகாவலர்களால் துன்புறுத்தப்படுவதாக அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நுஹ் மாவட்டத்தின் பெரோஸ்பூர் ஜிர்காவில் கிராம மக்கள் ஒரு மகா பஞ்சாயத்தை நடத்தி, பசு பாதுகாவலர்களால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு பாதுகாவலர்கள் பணம் பறிப்பதாக பல இடங்களில் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஆளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஜூனைத், சமீர் கொலையை கண்டித்து ஹரியானாவின் நுஹ் நகரத்தில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைவதை தடுக்கும் வகையில் காஷ்மீர் ஃபார்முலாவை பின்பற்றுகிறது ஹரியானா அரசு.  இண்டெர்நெட் சேவையையும், தொலைத்தொடர்பையும் மொத்தமாக நிறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் “பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28, 2023 வரை (23:59 மணி) அமலில் இருக்கும்” என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக் ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியாயப்படுத்துகிறது பாசிச கும்பல்.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கொலை செய்யப்பட்ட அக்லக்கிலிருந்து இன்று வரை பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்துக் கொண்டே உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வந்தார்கள். பின்னர் ஹரியானா, கர்நாடகா எனத் தொடர்கிறது. பசுக்களின் மீது பாசிஸ்டுகளுக்கு அவ்வளவு பாசமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இவர்கள் நடத்தும் பல கோசாலைகளில் பசுக்களை கவனிக்காமல் செத்ததை பார்த்திருக்கலாம். இந்துராஷ்டிரத்தை கட்டியமைக்கவும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதற்குமான கருவியாகவே பசுவை பயன்படுத்துகிறது பாசிச பாஜக.

ஆர்.எஸ்.எஸ் தனக்கு கீழே பஜ்ரங் தள் உள்ளிட்ட பல நூறு துணை அமைப்புகளை உருவாக்கி கிராமங்கள் வரை ஊடுருவி சாமானிய மக்களையும் மதவெறி வலைக்குள் விழ வைக்கிறது. இந்த ஊடுருவலின் மூலம்  பாசிச பாஜக வளர்கிறது. பாஜக ஆட்சியால் இந்த கொலைகார கும்பல் பாதுகாக்கப்படுகிறது, வளர்க்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதன் மூலமும், மக்கள் ‘அதிகாரத்தை’ கைப்பறுவதன் மூலமே இதுபோன்ற கும்பல் கொலைகளையும், மதவெறி அமைப்புகளையும் தடுத்து நிறுத்த முடியும். இது இஸ்லாமியர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமும் நல்லிணக்கத்துடன்‌ வாழ்வது பற்றியது, நாகரீக வளர்ச்சி தொடர்பானது, ஜனநாயக குடியரசு நாட்டில் வாழ்வதாக எண்ணிக்கொள்கிறார்களே அது தொடர்பானது.

  • நலன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here