த்தரப்பிரதேசத்தில் உன்னாவ் என்கிற இடத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஒரு தலித் சிறுமியை இரண்டு பேர் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டனர். அவள் அந்த வன்புணர்வின் காரணமாக ஒரு குழந்தையையும் இப்போது ஈன்றெடுத்திருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு வயது 6 மாதம். அவளுக்கு வயது 11. நேற்றைக்கு முன்தினம் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரோடு சேர்ந்து ஒரு கும்பல் அந்த வீட்டை தீ வைத்து கொளுத்தியிருக்கிது. அதில் 6 மாதக் குழந்தை உட்பட இன்னொரு குழந்தையும் 45 சதவிகித தீக்காயங்களுடன் கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தகைய தாக்குதல்கள் நடப்பது முதன்முறையல்ல. இதற்கு முன்பு வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று ஒருமுறை இவர்கள் வீடு தாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 13ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தை கோடாரியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்து புகாரின் மீது காவல்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலியல் வல்லுறவின் காரணமாக பிறந்த குழந்தையை கொல்ல வேண்டுமென்று நிர்பந்தித்திருக்கிறார்கள். குழந்தையைக் கொல்லவோ, கொடுக்கவோ மறுத்திருக்கிறாள் அச்சிறுமி. அந்தக் குழந்தையைக் கொல்வதற்காகத்தான் வீட்டைக் கொளுத்தும் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் அச்சிறுமியின் தாயும் காயமடைந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் : உத்தரப்பிரதேசமா? – யோகியின் கிரிமினல் கூடாரமா?

முப்பத்து முக்கோடி தேவர்கள், கடவுள்கள், தேவதைகள், குலதெய்வங்கள் இன்னும் என்னென்னவோ ஆண், பெண், அர்த்தநாரீஸ்வர கடவுள்கள் எல்லாம் இருப்பதாக மக்கள் நம்பிக் கொண்டே இருக்கிறார்கள். கடவுள்களில் தலித் கடவுள் யாரும் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.

சங்பரிவாரின் ராமராஜ்ஜியம், யோகியின் நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான சட்டத்திற்கு உட்படாத உத்தரப்பிரதேச ஆட்சியில் இது தனித்த நிகழ்வல்ல. இங்கு ராமர் இருக்கிறார், ராவணனிடமிருந்து சீதையை மீட்டு வந்தவர், அதற்கு துணை புரிந்த அனுமாருக்கும் கோவில் இருக்கிறது. இவர்களுக்கு ஒரு கோயில் அல்ல, இரண்டு அல்ல ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. திரௌபதியின் குரலுக்கு கண்ணன் ஓடோடி வந்ததாய் மகாபாரதம் கற்பித்துக் கொண்டே இருக்கிறது. ராமன் குகனோடும் ஐவரானோம் என்று ஒரு மீனவனை சகோதரனாக்கிக் கொண்டதாக கம்பன் பாடுகிறான்.

எல்லாம் இருந்தும் 75 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பின்பும் 10 வயதில் சிதைக்கப்பட்டதற்காக ஒரு வழக்கு கொடுத்ததால் இன்று வரையிலும் அப்பா, அம்மா, சகோதரி, குழந்தை என்று அனைவரும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தும் ராமனும் வரவில்லை, சீதையும் வரவில்லை, அனுமானும் வரவில்லை. அவர்களாலும் தோற்கடிப்பட முடியாத ஒரு தீய சக்தியாக உத்தரப்பிரதேசத்தில் காட்டு தர்பார் ஆட்சி அவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நிகழ்ச்சியை முன்வைத்து இப்படிச் சொல்வது நியாயமா? என்று யாரும் பொங்க வேண்டாம். எல்லா அட்டூழியங்களையும் அரசின் மேல் பழிசுமத்த முடியாது. ஆனால், அவை நடந்த பிறகு அவற்றின் மீது ஒரு அரசாங்கம், அரசமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பது மிக முக்கியமானது.

உன்னாவ் என்கிற இந்த இடத்தின் பெயர் இதற்கு முன்பும் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. அப்போதும் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவள் ஒரு சிறுமிதான். உன்னாவ் தொகுதியின் அப்போதைய பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரிடம் வேலைவாய்ப்புக்கு உதவி கேட்டு சென்ற தன் மகள் வயதுள்ள அந்தப் பெண்ணைத்தான் செங்காரின் சகோதரனும் இன்னும் சிலரும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்கள்.

இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று சொல்லப்போன அவளது தந்தையை அடித்து நொறுக்கிவிடுகிறார்கள். தலித்துக்காக கடவுள் ஒன்றும் நெருங்கி வரவில்லை. எத்தனை கழிசடைத்தனமாக இருந்தாலும் வேறு வழி இல்லாததால் காவல் நிலையத்திற்குத்தானே செல்ல வேண்டும். அங்கு முறையீடு செய்வதற்காகப் போன அவளது தந்தை அடித்து காவல்நிலையத்திற்கு உள்ளேயே தூக்கில் தொங்கவிடப்பட்டார். பிறகு வேறு வழியற்ற அவள் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா செய்த பிறகு அச்செய்தி வெளிச்சத்திற்கு வந்தன.

அப்போது அவளுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டு வந்த அவளது சித்தப்பாவை ஒரு பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள். அவளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினரே எதிரிகளுக்கு உலவு சொல்கிறார்கள், எனவே, உச்சநீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டுமென்று ஒரு மனு அனுப்புகிறாள். ஆனால் அந்த மனு நீதிபதிக்கே போகவில்லை. இந்தப் பின்னணியில்தான் நீதிமன்றத்திற்கு தனது வழக்கறிஞர், தனது அத்தைகள் ஆகியோருடன் பயணம் செய்தபோது நம்பர் பிளேட் இல்லாத ஒரு டிரக் அவர்கள் மீது மோதுகிறது. வழக்கறிஞர் உட்பட எல்லோரும் படுகாயம் அடைகிறார்கள். அதன் பிறகு நீதிமன்றம் தலையிட்டது.

இந்த வழக்கில் தற்போது செங்கார் பரோலில் சில காலம் வந்திருக்கிறான்.

இவர்களின் குஜராத்தில் பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்வு செய்த 14 பேரும் ‘நன்னடத்தையின் பேரில்’ வெளியில் வந்ததை நாம் அறிவோம். உச்சநீதிமன்ற நீதிபதி பில்கிஸ் பானுவிற்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கும் எனக்கும் வராதா? என்று புலம்பியிருக்கிறார். என்ன நன்னடத்தை? ஏன் வெளியே விட்டீர்கள்? என்பதை அவர்கள் நீதிமன்றத்திடம் கூட சொல்ல மாட்டார்களாம். இதுதான் ராமராஜ்ஜியத்தில் நீதிமன்றத்தின் நிலையும் கூட.

இப்படி நூற்றுக் கணக்கில் நமது கவனத்திற்கு வராமல் ஒவ்வொரு நாளும் ராமராஜ்ஜியத்தில் இது நடந்து கொண்டே இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ஹத்ராஸ் சிறுமியை மீண்டும் கொன்ற நீதித்துறை

ஹாத்ரஸ் நினைவிருக்கிறதா? அதில் தீர்ப்பும் கூட வந்துவிட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் மூவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். ஒருவன் கொல்ல வேண்டுமென்று நினைக்கவில்லை என்று கொலைக்குற்றத்திலிருந்து தப்பித்துவிட்டான். அந்த வழக்கும் அப்படித்தான். தனது தாயோடு வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறாள், வாயை இருக்கக் கட்டி புதருக்குள் இழுத்துச் சென்று அந்த மிருகங்கள் குதறிப் போடுகின்றன. காவல் நிலையத்திற்கு போகிறார்கள். வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். மருத்துவமனைக்குச் செல்கிறார்கள், உரிய மருத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த செய்தி வெளியே வருகிறது. அதற்குள் அவள் இறந்து போகிறாள். பெற்று வளர்த்த அம்மா அப்பாவிற்கு சொல்லாமல் அவர்களை வரவிடாமல் தடுத்து அனாதைப் பிணம் போல ஒரு இரவில் காவல்துறையால் எரியூட்டப்பட்டு அவளின் உடலோடு சேர்ந்து சாட்சியங்களையும் உண்மைகளையும் சாம்பலாக்கிவிடுகிறார்கள். இது ஹாத்ரஸ் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை. இந்தப் பெண்ணும் தலித்துதான்.

இப்போது ராமனோ, அனுமனோ ஏன் தலித்தாக பிறக்கக் கூடாது? அதுவும் தலித் பெண்ணாகப் பிறக்கக் கூடாது? அவர்கள் ஏன் யாரை யாரையோ வதம் செய்ததுபோல், தனது பெயரைச் சொல்லி அரசமைப்புகளின் துணையோடு ஆட்சி நடத்துவோரின் அக்கிரமத்திற்கு முடிவு கட்டக் கூடாது? ராமனுக்குத் தெரியும், அவர்கள் தன்னை அரசியல் சூதாட்டத்திற்கு பயன்படுத்துகிறார்களே தவிர, தன்னை தெய்வமாகக் கொண்டாடுவதில்லை என்று.

Kanagaraj karuppaiah
முகநூல் பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here