கோவையின் புறநகர் பகுதியில் உள்ள எங்கள் ஊரிலும் சாதிரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர்களாகக் கவுண்டர்களும், மிகக் குறைந்த அளவில் அருந்ததியர்களும், அதே அளவில் வேறு மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக தங்கி இருக்கும் மக்களும் வசித்துவருகின்றனர்.

ஆதிக்க சாதியான கவுண்டர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியான அருந்ததியர்களுக்கும் இடையேயான முரண் இருந்து வந்தாலும் இந்த இரண்டு சாதியினரும் தங்களுக்கென்று எல்லைக்கோடுகளை வகுத்துக்கொண்டு “அந்தக்கோட்டைத் தாண்டி நீ வரக்கூடாது, இந்தக் கோட்டைத்தாண்டி நான் வரமாட்டேன்” என்று “ஒற்றுமையாக” வாழ்ந்து வருகின்றனர். அதையும் மீறி அவ்வப்போது சில முறுகல்கள் வந்தாலும் அது அருந்ததியர்களின் விட்டுக்கொடுத்தல் மூலமாக சரி செய்யப்படுகிறது.

இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில்தான் கடந்த ஆறு மாதமாக சனி, ஞாயிறு மாலை நேரங்களில் இலவச கும்மிப்பாட்டு பயிற்சியை ஊருக்குள் இருக்கும் கவுண்டர் ஒருவரின் 15 சென்ட் நிலத்தில் அதே சாதியைச் சேர்ந்த உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவரால் தொடங்கப்பட்டது.

பாரம்பரிய கலை என்றும் அதை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இந்த கும்மி பாட்டு விளம்பரப்படுத்தப்பட்டு ஊரில் இருக்கும் இளம்பெண்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. எங்கள் ஊரை ஒட்டி இருக்கும் வேறுசில பகுதிகளிலும் இந்த பயிற்சி அங்கிருக்கும் கவுண்டர் சாதியினரால் தொடங்கப்பட்டு நடந்துவந்தது.

“அப்பா ஃபிரீயா டான்ஸ் சொல்லித்தரங்கப்பா, நானும் போறேன்” என்று எனது 12 வயது மகளும் கேட்டாள். நானும் ஒருமுறைக்கு இரண்டுதடவை “உண்மையாலுமே யார் வேண்டுமானாலும் போகலாமா” என்று கேட்க, “ஆமாப்பா என்னோட ஃபிரெண்டெல்லாம் (அவர்கள் வேறு மாவட்டம்) கூட போறாங்க” என்று சொன்னாள். “எல்லா சாதியினருக்கும் அவங்களோட கலையை சொல்லித்தரமாட்டாங்களே, அவ்வளவு சமத்துவ உணர்வுடையவர்களா இந்த ஊர்க் கவுண்டர்கள்” என்று எனக்குள் பலத்த சந்தேகம் எழுந்தது.

ஒருநாள் எனது மகளைக் கொண்டுபோய் பயிற்சி நடைபெறும் இடத்தில் விட்டுவிட்டு எப்படி ஆடுகிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு 6 வயது சிறுமிகள் முதல் 30-40 வயது வரையுள்ள பெரும்பான்மையாக கவுண்டர்சாதிப் பெண்கள் பயிற்சிக்காக வந்திருந்தனர். ஊரிலுள்ள மற்ற சாதியினரும், குறிப்பாக அருந்ததியின சிறுமிகளும் இவர்களுடன் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் “அடடா இப்படி ஒரு சமத்துவபுரியா நம்ம ஊர்?, கவுண்டர்கள் சாதி வேறுபாடு பார்க்காமல் எல்லாருக்கும் பயிற்சி கொடுக்கிறார்களா? என்று புல்லரித்துவிட்டது. அதைவிட எல்லோருக்கும் இரவு உணவும் கொடுக்கப்பட்டுத்தான் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றும் கேள்விப்பட்டவுடன் “என்னது கவுண்டர்கள் சாதி வேறுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் சமபந்தி போடுகிறார்களா?” என்று ஒரு கணம் என்னையே கிள்ளிப்பார்த்துக் கொள்ளவேண்டியிருந்தது. ஆனால் அதே சமயத்தில் “அப்படி இருக்க வாய்ப்பில்லையே” என்று உள்மனதில் ஒரு மணியும் அடித்துக்கொண்டே இருந்தது.

அங்கிருந்த ஏற்பாட்டாளரிடம் எதற்காக இப்படி பயிற்சி கொடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அழிந்துபோய் கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியமான கலை, அதை மீட்டெடுப்பதற்காகதான்” என்றார். வேறு ஒரு ஊரிலிருந்து பயிற்சி கொடுப்பதற்காக 8 பேரைக்கொண்ட ஒரு டீம், அவர்களின் கட்டணம், போக்குவரத்து, அனைவருக்கும் இரவு உணவிற்கான செலவுகளைத் தாங்களே சமாளித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இப்படி ஒரு இரண்டு வாரங்கள் போயிருக்கும், ஏற்கனவே பயிற்சிக்கு போய்க்கொண்டிருந்த 5-வது படிக்கும் ஒரு அருந்ததிய சிறுமியிடம் ஒருநாள் எதேச்சையாக “ஏன் பாப்பா நீ பயிற்சிக்கு போகவில்லையா” என்று கேட்க, போகவில்லை என்றாள். ஏன் என்று கேட்க பதில் சொல்லத் தயங்கினாள். வற்புறுத்திக்கேட்டபோது அவள் முகத்தில் ஒருவித சோகத்துடனும் ஆற்றாமையுடனும் “நாங்கெல்லாம் அவங்க தட்டுல சாப்பிடக்கூடாதாம், வூட்டுலே இருந்து தட்டு கொண்டுவரணுமாம், அதனால எங்க ஏரியால இருக்கிற யாருமே அங்க போறது இல்லைங்க” என்றாள்.

கவுண்ட சாதியினரின் சமத்துவ முகமூடி இப்படித்தான் கழண்டு தொங்கியது. இதைக் கேட்டவுடன் எனது மகளையும் அங்கு போக வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டேன். ஆரம்பத்திலிருந்தே என் மகளிடம், “இவர்களெல்லாம் இப்படி ஆடவிட மாட்டார்கள், எதையாவது சொல்லி மற்றவர்களை வெளியே துரத்திவிட்டு கவுண்டர்சாதிப் பெண்களை மட்டும்தான் வைத்துக்கொள்வார்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது அது நடந்துவிட்டது.

இதையும் படியுங்கள்: சாதிகள் என்ன செய்யும்? ஆர்எஸ்எஸ்  பாஜகவைக் கேள், சொல்லும் ! 

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு இப்போது பேசுபொருளாக இருக்கும் இந்த கும்மி பாட்டு அல்லது வள்ளி கும்மி என்பது கலை மீட்டெடுப்பு என்ற பெயரில் கவுண்டசாதிப் பெண்களை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவர்கள் மற்றசாதி ஆண்களை காதலிக்கவோ அல்லது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற நோக்கத்திற்காகத்தான் பயிற்சிவகுப்புகள் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வருகிறது என்பது அம்பலமாகியுள்ளது. சுயசாதிப்பெண்களை கலை என்ற பெயரில் திரட்டி அவர்களிடம் “கவுண்டசாதி ஆண்களைத்தான் திருமணம் செய்வோம்” என்று உறுதிமொழி வாங்கும் நிகழ்வும் இந்த பின்புலத்தில்தான் நடந்துள்ளது.

மேற்கு மண்டலத்தில் ஆதிக்க சாதியினராக இருக்கும் கவுண்டர்கள் குறிப்பாக ஆண்களுக்கு அதே சாதியில் பெண்கள் திருமணத்திற்கு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாய் இருக்கிறது. இதனால் சிலபேர் எந்த சாதியாக இருந்தால் என்ன என்று வேறு சாதிப்பெண்களை திருமணம் செய்து கொண்டு விட்டனர். பலபேர் இன்னும் திருமணம் முடிக்காமல் ஏக்கத்தோடு அலைந்து கொண்டிருக்கின்றனர். இப்படியே போனால் தனது சாதி கட்டமைப்பு காலியாகிவிடும் என்று பயந்த சாதி வெறியர்கள் தற்போது கலை மீட்டெடுப்பு என்ற பெயரில் தங்கள் சாதி ஆதிக்கத்தையும், ஆணாதிக்கத்தையும், சாதி கட்டமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

வள்ளிக்கும்மி என்ற ஒரு கலையைப் பின்னிருந்து இயக்குவது மேற்குமண்டலத்திலிருக்கும் பல்வேறு கவுண்டசாதி அமைப்புகள் என்பதும் அவற்றையும் இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. என்பதும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். பார்ப்பனீயம் தனது கொடுங்கரங்களை மக்களின் எல்லா வாழ்வியல் அம்சங்களிலும் நுழைத்து கலைகளைக்கூட சாதிவாரியாகப் பிரித்து மேய்கிறது. “கலை, இலக்கியம் யாவும் பரந்துபட்ட மக்களுக்கே” என்று முழங்கிய மாவோவின் சொல் மெய்ப்பிக்கப்படவேண்டுமானால் பார்ப்பனியத்தின் உறைவிடமான அரைநிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படவேண்டும். அதற்கு இங்கும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தப்படவேண்டும்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here