ரிக் கொள்கை மூலம் உலகை மிரட்டும் அமெரிக்க பயங்கரவாதிகள்!

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளன.

இந்தியா மீது விதிக்கப்பட்ட 26 சதவீத வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைந்தது. குறிப்பிட்ட இந்த அவகாச காலத்திற்குள் இந்தியாவுடன் எந்த விதமான சுமுகமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.

பாசிச மோடியின் பக்தர்கள் இந்தியாவை கண்டு அமெரிக்கா அச்சமடைந்துள்ளதாகவும், இந்தியாவின் மீது வரி விதித்தால் தனது வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கால அவகாசத்தை நீடித்திருப்பதாகவும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கு நேர் மாறாக இந்தியாவின் மீது தீர்மானித்த அடிப்படையில் 26 சதவீத வரியை விதிக்கின்ற நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் முறையாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க கருவூல துறைச் செயலர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை மூலம் உலகை மிரட்டும் அமெரிக்க பயங்கரவாதிகள்

அமெரிக்காவின் வரி கொள்கை உலகம் முழுவதும் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், ஜூலை 8 ஆம் தேதி கடிதம் 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது, அதில் ஜப்பான், தென் கொரியா, துனிசியா, மலேசியா மற்றும் கஜகஸ்தான் மீது 25%; தென்னாப்பிரிக்கா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மீது 30%; இந்தோனேசியா மீது 32%; பங்களாதேஷ் மற்றும் செர்பியா மீது 35%; தாய்லாந்து மற்றும் கம்போடியா மீது 36%; மியான்மர் மற்றும் லாவோஸ் மீது 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வியாழக்கிழமை (ஜூலை 10), டிரம்ப் மேலும் எட்டு நாடுகளுக்கு வரிக் கடிதங்களை வெளியிட்டார்.: பிலிப்பைன்ஸ் மீது 20%; புருனே மற்றும் மால்டோவா மீது 25%; அல்ஜீரியா, லிபியா, ஈராக் மற்றும் இலங்கை மீது 30%; மற்றும் பிரேசிலுக்கு 50%. என்று வரிகளை விதித்து அறிக்கை வெளியிட்டார்.

சார்க் பிராந்தியத்தில் அமெரிக்காவின் விசுவாச அடிமை நாடாக உள்ள இந்தியாவின் மீதும் வரி விதிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார் ட்ரம்ப். குறிப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் மீது 10 சதவீதம் வரி கூடுதலாக விதிக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

இரண்டு தவணைகளில் டிரம்ப் அறிவித்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்றவுடன் இந்தியா ஏதோ பெரிதாக பேசி தன் மீதான வரியை குறைத்து விடும் என்றெல்லாம் யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களை விட கேனையர்களை பார்க்க முடியாது என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிக்க:

 ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.

 வரி விதிப்பு: வர்த்தகப் போரை தொடங்கும் ட்ரம்ப் !

அமெரிக்காவின் ஒற்றைத் துருவ ஆதிக்கத்திற்கு எதிராக தற்போது மாற்றாக முன்வைக்கப்படும் பல் துருவ கூட்டமைப்பு என்ற சீன – ரஷ்ய கூட்டமைப்பு, அதன் ஆதிக்க ஒப்பந்த கூட்டமைப்பான பிரிக்ஸ் போன்றவை அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரத்தையும், நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைகின்ற நாடுகளின் மீது வர்த்தக வரி மட்டுமின்றி உலக வர்த்தக கழகத்தின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறுகின்ற நாடுகள் மீது திணிக்கப்படும் குறுக்கு பதிலடி நடவடிக்கைகள் என்ற முறையில் வர்த்தக மற்றும் பொருளாதார இறக்குமதி தடைகளை விதிக்க வாய்ப்பு உள்ளது என்பதெல்லாம் இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு தெரியாத விடயம் அல்ல.
ஆனால் இந்தியாவை, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்கா மேல்நிலை வல்லரசின் காலடியில் எந்தவிதமான தங்கு தடையும் இன்றி கிடத்துவதற்கு, அதாவது மறுகாலனியாக்குவதற்கு துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச கும்பல், உள்நாட்டில் ‘ தேச பக்தி’ வேஷம் போட்டுக் கொண்டிருந்தாலும் அந்நிய அடிமைகளாகவே உலகத்தை சுற்றி வருகின்றனர்.

எனவே, ஆகஸ்ட் ஒன்றுக்குள் பெரிதாக எதுவும் நடந்து விடப் போவதில்லை. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிந்து இந்தியா அனைத்து சமனற்ற ஒப்பந்தங்களையும், வரி விதிப்புகளையும் ஏற்றுக் கொள்ளும் என்பது தான் தற்போது உள்ள நிலைமையாகும்.

ஆனால் முதலாளித்துவ பத்திரிகைகளான பிசினஸ் ஸ்டாண்டர்ட், பிசினஸ் டுடே, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகள் இந்திய தூதுவர்கள் அமெரிக்காவுடன் ஏதோ பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதைப் போன்றும் அதன் மூலம் ட்ரம்ப் முன் வைத்துள்ள வரி விதிப்பு கொள்கையிலிருந்து விலக்கு பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை போலவும் பிரமையூட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது மட்டுமின்றி கடுமையான விளைவுகளையும் எதிர்நோக்கியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கின்ற கூடங்களாக (manufacturing hub) ஆசிய நாடுகள் விளங்குகின்றன என்பதும் அமெரிக்கா விதிக்கப் போகின்ற வர்த்தக வரியானது இந்த நாடுகளில் உள்ள தொழில், உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றில் மிகப்பெரும் நெருக்கடியை உருவாக்கப் போகின்றது என்பது தான் எதார்த்த நிலைமையாகும்.

ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளுக்கு வெளியில் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் உள்ள உழைப்பாளி வர்க்கம் புதியதொரு உலக ஒழுங்கமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவையாக மாறியுள்ளது.

ஆல்பர்ட்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here