உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 13 அன்று துர்கா பூஜை நிறைவையொட்டி நடத்தப்பட்ட துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் மூலம் பல இடங்களில் வன்முறையைத் தூண்டினர் இந்துமத வெறியர்கள். விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்களை நடத்தி நாடெங்கும் கலவரத்தை தூண்டுவது இவர்களது வாடிக்கையாக உள்ளதை நாம் அறிவோம். மக்களின் வழிபாட்டு நம்பிக்கையை மடைமாற்றி கடவுளை வைத்து கலவரங்களை நடத்துவதே இவர்களின் “ஆன்மீக சேவை” யாக உள்ளது.
வழக்கமான பாணியில் வம்பிழுத்த வானரங்கள்!
பஹ்ரைச் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மகாராஜ்கஞ்ச் எனும் ஊரில் நடந்த ஊர்வலத்தில் அங்குள்ள மசூதியின் வழியே திட்டமிட்டு சென்ற இந்து மதவெறி கும்பல் முஸ்லிம்களை கேவலமாக விமர்சிக்கும் விதமான பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டும், ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் பஜ்ரங் பலி என்று கோஷமிட்டும் முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தது.
பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சமடைந்தாலும், ஒரு சிலர் பாடல் ஒலிப்பதை நிறுத்துமாறுக் கூறினர். இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே ராம்கோபால் மிஸ்ரா எனும் இந்து இளைஞன் அங்கிருந்த இஸ்லாமியர் ஒருவரின் மாடிக்கு சென்று, பறந்து கொண்டிருந்த பச்சைக் கொடியை பிடுங்கி எறிந்துவிட்டு, காவிக் கொடியை வெறியோடு ஆட்டியபடி கோஷமிட்டான். இதன் வீடியோ காட்சி பதிவாகி உள்ளது. எங்கிருந்தோ பறந்து வந்த துப்பாக்கித் தோட்டா அவனது நெஞ்சைத் துளைத்தது.
இவனது கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் அக்டோபர் 17 அன்று நேபாள எல்லையில் காவல்துறையினரால் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்பதற்காக குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றவர்களை, தாங்கள் சுட்டுப் பிடித்ததாக வழக்கமான பாணியில் கதை அளந்தது போலீசு. நல்ல வேளையாக சுட்டுக் கொல்லவில்லை.
முகமது சர்பராஸ் மற்றும் முகமது தலிம் ஆகிய அந்த இருவரோடு தொடர்புடையதாக கூறி மேலும் மூவரையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட சர்பராசின் சகோதரி ருக்சார் சமூக ஊடகத்தில் தனது தந்தை ஹமீத், கணவர் ஒசாமா மற்றும் சகோதரரை சுட்டுக் கொல்ல போலீஸ் திட்டமிட்டு சதி செய்வதாக தெரிவித்த பின்புதான் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ருக்சார்,
“வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்கள் அனைவரும் எந்த காவல் நிலையத்திலும் இல்லை. அவர்கள் மீது எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. எனவே அவர்கள் போலி என்கவுன்டரில் கொல்லப்படுவார்கள் என அஞ்சுகிறேன்”
என்று ஒரு வீடியோப் பதிவை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகுதான் போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் கைது அறிவிப்பையே வெளியிட்டது. இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் யாரேனும் காயமடைந்தனரா என்ற தகவலையோ, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட ‘குற்றவாளிகள்’ எப்படி துப்பாக்கியை பயன்படுத்தினர் என்றோ காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை.
आह जो दिल से निकाली जाएगी,
क्या समझते हो कि ख़ाली जाएगी!#BahraichVoilence#Bahraichpic.twitter.com/GzPuWSzTcm— Mohammad Waseem मोहम्मद वसीम محمد وسيم (@MohdWaseemINC) October 18, 2024
சில தொலைக்காட்சி சேனல்களும், சமூக ஊடகங்கள் சிலவற்றிலும் சுடப்பட்டு இறந்த ‘இந்து’ இளைஞன் மிஸ்ராவின் உடலில் மின்சாரம் பாய்ச்சியும், கத்தியால் வெட்டியும் கொடுமைப்படுத்தப் பட்டதாகவும் நகங்கள் பிடுங்கப்பட்டதாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியூட்டும் வகையில் வதந்திகளை வெளியிட்டன. ஆனால் உடற்கூறாய்வில் குண்டு தாக்கி மரணம் அடைந்ததாகவே குறிப்பிடப் பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காக என்கவுன்டர்களை நடத்தி வருகிறது. பஹ்ரைச் வகுப்புவாத சம்பவமானது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியை காட்டுகிறது” எனக் கூறினார்.
#BahraichVoilence: #AkhileshYadav Alleges ‘Whatever Happened In Bahraich Planned By BJP’#DNAVideos | #UttarPradesh
For more videos, click here https://t.co/6ddeGFqedQ pic.twitter.com/RIssZGmmDs
— DNA (@dna) October 21, 2024
அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரான ஓவைசி, “இந்த என்கவுன்டர் குறித்து உண்மையை அறிவது கடினமல்ல. யோகி அரசின் கொள்கை பற்றி நமக்கு தெரியும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய ஆதாரங்கள் இருந்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கும்” என்று கூறினார்.
மிஸ்ரா துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவுடன், இதையே சாக்காக வைத்து அங்கிருந்த முஸ்லிம்களின் கடைகள், வாகனங்கள் மற்றும் உடமைகளை சங்பரிவார் கும்பல் தீயிட்டுக் கொளுத்தியது. இரண்டு நாட்களாக இத்தகைய வெறியாட்டத்தில் இந்தக் கும்பல் ஈடுபட்டதை யோகியின் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. கலவரத்தில் ஈடுபட யோகி ஆதித்யநாத் அரசின் போலிசு முழு அனுமதி கொடுத்ததாக காவி குண்டர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை டைனிக் பாஸ்கர் ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்த முஸ்லிம் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைக்கப்பட்ட பிறகுதான் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வன்முறையை நிகழ்த்திய இந்துமத வெறியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எந்த விபரங்களையும் காவல்துறை இதுவரை வெளியிடவில்லை.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பாஜக எம்எல்ஏ!
இதற்கிடையே தியோரியா தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஷலப் மணி திரிபாதி, குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக “பஹ்ரைச்சின் மிருகங்கள் அதற்கான தக்க தண்டனையை பெற்றுள்ளன” எனக் குறிப்பிட்டார். இந்த திரிபாதி யோகி ஆதித்யநாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகராக இருந்தவர். மேலும் பாஜகவில் சேருவதற்கு முன்பு தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றியவர்.
இவர் தனது X பதிவில் 13 முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பட்டியலையும் பகிர்ந்து, “இவர்கள் அனைவரும் கலவரக்காரர்களை காப்பாற்றுவதிலும், பொய்களை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார். உண்மையில் கலவரத்தில் ஈடுபட்டது இந்துமத வெறியர்கள்தான். பொய்களை திட்டமிட்டு பரப்புவதில் கைதேர்ந்தவர்களான பாஜகவினர் இந்த விஷயத்திலும் அதே வேலையை கேவலமான நோக்கத்துடன் அரங்கேற்றினர். இப்படி முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்ததன் மூலம் எரியும் நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றினார் இந்த எம்எல்ஏ.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,”மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவதற்கும், இத்தகைய வகுப்புவாத மோதல் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர். தோல்வி பயத்தில் வன்முறையில் ஈடுபடுவது யாருடைய புத்தி என்பது அனைவருக்கும் தெரியும். அரசாங்கம் உண்மையில் திடமான நடவடிக்கை எடுத்தால் எல்லாம் சரியாகும். ஆனால் அரசாங்கம் அதை விரும்புமா?” என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை வெடித்த மகாராஜ்கஞ்ச் கிராமத்தில் வசிப்பவர்கள் ஏற்கனவே உடமைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் நிலையில், அவர்களை மேலும் பழிவாங்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்பு வீடுகளை மூன்று நாட்களில் அகற்ற வேண்டும் என அங்குள்ள பலருக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான் என்பது சொல்லாமலேயே விளங்கும் விஷயமாகும்.
இப்படித்தான் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு கலவரத்தை தூண்டுவதும், அவர்களது உடைமைகள் எரிக்கப்படுவது அல்லது வீடுகளையே புல்டோசர் மூலம் இடித்து தள்ளுவது என்பது தொடர் கதையாக உள்ளது. பாசிசம் பாயாசம் என நக்கல் அடிக்கும் திருவாளர் விஜய் போன்றவர்கள் இந்த பாசிச கொடூரங்கள் பற்றி ஏதும் பேசப்போவதில்லை. காவி பாசிச ஆட்சி அரங்கேறி வருவதை நீதிமன்றங்களும் கண்டு கொள்வதில்லை. பெருவாரியான உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராடுவதன் மூலம்தான் பாசிச பாஜகவின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.
குரு
செய்திகளை உடனுக்குடன் பெற வாட்சப் லிங்கை கிளிக் செய்யவும்