பகுதி – 3


ரஷ்யசீன கூட்டணி;

அதே போல் ரசியாவும் தனது எண்ணெய் – எரிவாயு வளத்தை விற்பதற்கு அமெரிக்கா அல்லாத வேறோர் சந்தையாக சீனாவைத் தேர்ந்தெடுத்து விட்டது. சீனாவிற்கு 2020 ல் இருந்து விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது. 400 பில்லியன் டாலர் ($400 billion) பெறுமதியான எரிவாயுவை வாங்குவதற்கான முப்பது வருட ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றை அது சீனாவுடன் செய்திருக்கிறது.

சீனாவும், கம்யூனிசத்தைக் கைவிட்டு முதலாளித்துவ பொருளாதாரத்தில் வீழ்ந்து விட்டது. சீனாவின் ஒரே தொகுப்பு ஒரே பாதை (ONE BELT ONE ROAD) என்ற திட்டத்தின்மூலம் உலகெங்கும் அதிவிரைவு சாலைகள், ரயில்வே லைன்களும், ஏற்றுமதி – இறக்குமதிக்கான துறைமுகங்களும், கடற்படை தளங்களும் சீனாவால் கட்டியெழுப்பப்படுகிறது. சீனாவுடனான ஆசிய நாடுகளின் வர்த்தக ஒப்பந்தமும், புதிதாக உருவெடுத்துள்ள ஷாங்காய் கூட்டுறவும், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கடும் பகையைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்கத்தை வீழ்த்துவது என்ற நோக்கம்தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஷ்யா, சீனா என்ற இரு பெரும் வல்லரசுகளையும் ஒர் அணியாக சேர வைத்திருக்கிறது.

மேலும் ரசியா எண்ணெய் எரிவாயு வர்த்தகத்தை துரிதப்படுத்தவும், வளர்ந்து வரும் பொருளாதார பலத்தையும் தனது நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை சுதந்திர காமன்வெல்த் நாடுகள் நம்பியிருப்பதையும், அவர்கள் தங்களது எண்ணெயை எடுத்துச் செல்ல குழாய் பாதைக்காக ரசியாவைச் சார்ந்திருப்பதையும் பயன்படுத்தி அந்நாடுகளைத் தனது மேலாதிக்கத்தில் வைக்கவும், அமெரிக்காவின் போட்டியை முறியடிக்கவும், புதின் தலைமையிலான ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு காய் நகர்த்தி வந்தன. சுதந்திர காமன்வெல்த் நாடுகளின் கம்பெனி பங்குகள், கடன் பத்திரங்கள், அசையா சொத்துக்கள் ஆகியவற்றை வளைத்துப் போடும் படி தனது நாட்டு முதலாளிகளை ஊக்கப்படுத்தி உதவி வருகின்றது.

பத்தாண்டுகளாக உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்:

உக்ரைன் நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலைகள் பெரும்பானவற்றையும், ஆர்மீனியாவிலும், ஜார்ஜியாவிலும் மின் உற்பத்தி மற்றும் விநியோக வலைப்பின்னலையும், கஜகஸ்தான், பெலாரஸ் நாடுகளின் கேந்திரத் தொழிற்சாலைகளையும் ஏற்கனவே ரசிய முதலாளிகள் வாங்கியுள்ளனர். முன்னாள் சோவியத் நாடுகளில் மிகவும் ஆற்றல் வாய்ந்த நாடுகளான ரசியா, உக்ரைன், கஜகஸ்தான், பெலாரஸ் ஆகியவை கொண்ட ஒரு சுதந்திர வர்த்தக மண்டலத்தை அமைப்பதில் ரசியா ஏறத்தாழ வெற்றி பெற்றதாகவே கருதப்பட்டது.

இந்த சுதந்திர வர்த்தக மண்டலம் அமைப்பதை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்த்தன. ஏனென்றால் இது நடைமுறைக்கு வந்தால், பிற சுதந்திர காமன்வெல்த் நாடுகளும் இதில் சேர்ந்து வலிமையான மண்டலமாக மாறும். அதனால், மத்திய ஆசியாவின் மீதான தனது மேலாதிக்க நோக்கத்திற்குத் தடை ஏற்படும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது.

இப்படி பொருளாதாரம் மற்றும் இராணுவம் என எல்லா வகையிலும் தான் வலிமையாகி விட்டதை அறிவிக்கும் வகையிலும், ரசியா உலக மேலாதிக்கப் போட்டிக்குத் தயார் என்பதை முன்னறிவிக்கும் வகையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளமிக்க நாடுகளில் முக்கிய இடத்தில் இருக்கும் உக்ரைன் தனது மேலாதிக்க வரம்பில் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் போர் தொடுத்து நடத்தி வருகிறது.

படிக்க:

♦  உக்ரைன் போர்: ஏகாதிபத்திய அமெரிக்கா – ரசியாவே போரை உடனே நிறுத்து! | தொடர் கட்டுரை

கடந்த 2014-ஆம் ஆண்டில் ரசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையோர் வாழும் உக்ரைன் நாட்டின் பிராந்தியமான கிரிமியாவை இணைக்க அதிபர் புதின் படைகளை அனுப்பினார். இதற்கு 2013-ல் உக்ரைன் அதிபர், ஐரோப்பிய யூனியனுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முனைந்தார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் ஐரோப்பிய யூனியனது அங்கத்துவமாக உக்ரைன் மாறுவதும் தொடர்ச்சியாக நேட்டோ இராணுவ அமைப்பில் இணைவதற்குமான சாத்தியமாக அமைந்து விடும். அதை தடுப்பதற்கு, கிழக்கு உக்ரைனின் இடைக்கால நிர்வாக அதிகாரிகள், அங்கு வாழும் ரசிய மொழி பேசும் 60% மக்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்ற காரணத்தை முன் வைத்தனர்.

கிரீமியா வரைபடம்

கிழக்கு உக்ரைன் பிரிந்து தனிநாடு ஆக வேண்டும் என பிரிவினைவாத எழுச்சியை ஏற்படுத்தி, அதற்கு ரகசியமாக ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்பி மோதலைத் தூண்டியது. கிழக்கு உக்ரைன் தனிநாடாக உருவானால், அந்த நிலப்பகுதியை ரசிய – உக்ரைன் நாடுகளின் இடைநிலப் பகுதியாக (BUFFER ZONE) வைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கமும் ரசியாவிற்கு இருந்தது.

அதோடு துருவ பகுதியில் அமைந்துள்ள நாடான, பனிப்பிரதேசத்தின் உறைகடற்கரையைக் கொண்ட ரசியாவின் அருகிலுள்ள ஒரே வெதுநீர் துறைமுகமான (WARM WATER PORT), செவஸ்டோபோல் (SEVASTOPOL) கிரிமிய பிராந்தியத்தில் அமைந்திருப்பதால், வர்த்தக மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் இருப்பதால், கிரிமியா மீதான நடவடிக்கையையும் ரசியா மேற்கொண்டது. கிரிமியாவை இணைத்த கையோடு ரசியா செவஸ்டோபோல் துறைமுகத்தில் அதன் கடற்படை பலத்தை அதிகரிக்கும் முகமாக பதினெட்டு போர்க்கப்பல்களை தயார் நிலையில் அங்கு நிறுத்தியுள்ளது. கருங்கடலில் இருந்து வரும் ஆபத்துக்களை சந்திக்க ரஷ்யா தயார் நிலையில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது..

2014-ல் நடத்திய பிரிவினைவாத நடவடிக்கைகளின் தொடர்ச்சியை தற்போதைய இந்தப் போர் நடவடிக்கையைப் பயன்படுத்தி, ரசிய அதிபர் புடின் நிறைவேற்றியுள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ் மற்றும் டோனெட்ஸ் பகுதிகளை உக்ரைனில் இருந்து பிரித்து அவைகளை சுயாட்சி பிரதேசங்களாக ஒருதலைப்பட்சமாக பிரகடனப்படுத்தி இருப்பது நேட்டோவிற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும், அமெரிக்காவிற்கும் பெரும்தலைவலியைக் கொடுத்திருக்கிறது.

ரசியா பிரகடனபடுத்தியுள்ள சுயாட்சி பகுதிகள்

ஒரு நாட்டை படையெடுத்து அதில் ஒரு பகுதியை தனிநாடாக பிரகடனப்படுத்துவது உலக அரசியல் ஒழுங்கிற்கு புறம்பானது, உக்ரைன் இறையாண்மைக்கு புறம்பானது என்றெல்லாம் நேட்டோவும் அதன் சார்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன, இருந்தும் இதை அமெரிக்காவே பெருங்குரலெடுத்து கூவுவதுதான் முரண்நகை. ஏனெனில், அமெரிக்கா பல நாடுகளை படையெடுத்து பிரித்ததும் சேர்த்ததும் உலகறிந்த ஒன்று. அதனால் அமெரிக்காவின் கூக்குரல் உலக நாடுகளுக்குக் கேட்காதது இயற்கைதான்.

ரசியாவின் சவுத் ஸ்ட்ரீம்  மற்றும் டர்க் ஸ்ட்ரீம் எனப்படும் எரிவாயு திட்டங்களை உக்ரைனை தவிர்த்து கொண்டு செல்வது என்பதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தி, மேற்குலகுடன் நட்புடன் இருப்பதற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் சமிக்ஞையாக காட்டி, உக்ரைனை பொருளாதார ரீதியாக மட்டுப்படுத்த, உக்ரைனை தள்ளி வைத்திருந்தது ரஷ்யா.

தொடரும்…

முந்தைய பதிவுகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

பகுதி 1

பகுதி 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here