தமிழகத்தின் 10ஆம் நூற்றாண்டு கால சோழப் பேரரசு பற்றியும், அக்கால வாழ்க்கை முறை,  சமூகம், கலை, கலாச்சாரம், இயற்கை வளம், போர் முறைகள் அனைத்தையும் கற்பனை வளத்துடன் பிரதிபலிக்கும் நாவல் தான் கல்கியின் பொன்னியின் செல்வன்!

1999-ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி தான் கல்கியின் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது என்பது நினைவு கூறத்தக்கது. கல்கியின் வாரிசுகளுக்கு தங்க சுரங்கம் போல அள்ளக் குறையாத வருமானத்தை தொடர்ந்து தந்து கொண்டிருந்த படைப்புகளை ஏன் பாஜக அரசு நாட்டுடமை ஆக்கியது? அதன் பின்னணி என்னவாக இருக்க முடியும் என்பதை இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கும் நண்பர்கள் தெளிவு பெற முடியும்.

இந்த நாவலில் வரும் ஒரு சில சொற்றொடர்களை இங்கு மேற்கோள் காட்டுகிறேன். ஏனென்றால், அன்றைக்கு மன்னர்களின் அவையில் பதவி பெற்ற பிராமணர்கள் மன்னர்களை குறித்து மக்களுக்கு எப்படியான பிம்பத்தை கட்டி எழுப்பினார்கள் என்பதை புரிந்து கொள்ள இவை உதவும்;
கீழே உள்ள இந்த வசனங்கள் எல்லாமே சோழனின் அரசவையில் முதன் மந்திரியாக இருந்த பார்ப்பனரான அநிருத்தப் பிரம்மராயர் பேசுவதாக அமைந்தவையாகும். இவரை மிக உன்னதமானவராக, உத்தம சிரேஷ்டராக கல்கி வருணித்து இருப்பார்.

”அரசர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள் என்று வேத புராணங்கள் சொல்லுகின்றன!”

”புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.” ( அரசர் இருக்கும் இடம் சந்நிதானமாம்!)

அநிருத்தப் பிரமராயர் தன்னுடைய சீடனிடம் பேசுவது, ” அவரவர்களும் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கீதாச்சாரியார் அருள் புரிந்திருக்கிறார் அல்லவா?” ( அதாவது அந்தந்த குலத்தவர் அவரவர்குரிய தொழில்களைத் தான் செய்ய வேண்டுமாம்! ஆனால், இப்படி சொல்பவரே சனாதன தர்மத்திற்கு மாறாக சோழ அரசனிடம் முதன் மந்திரியாக இருந்தது தான் விசித்திரம்.)

மற்றொரு வசனம்;
“சில நாளைக்கு முன்னால் பொதிகைமலைச் சிகரத்தில் ஒரு தவயோகியைப் பார்த்தேன்; அவர் ஞானக்கண் படைத்த மகான். அவர் என்ன சொன்னார் தெரியுமா? வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம் பிடிக்கப் போகிறது. இமயமலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம் செய்வார்கள். கோயில்களையும், விக்கிரகங்களையும் உடைத்துப் போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கும் உள்ளாகும். அப்போது நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில் வழிபாடு – ஆகியவற்றையெல்லாம் தென்னாடுதான் காப்பாற்றித் தரப்போகிறது. வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள் இத்தென்னாட்டில் தோன்றி, நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகா ஞானிகளும், பண்டிதோத்தமர்களும், பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில் அவதரிப்பார்கள்!’’

கதை பத்தாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. ஆனால், அதன் பிறகான காலகட்டத்தில் நிகழ்ந்த இஸ்லாமிய படை எடுப்பு குறித்து கல்கி எவ்வாறு கொண்டு வருகிறார் பாருங்கள்! ஒரு ஞானி தீர்க்க தரிசனத்துடன் சொன்னாராம். உண்மை என்னவென்றால், வட நாட்டில் இஸ்லாமிய படை எடுப்பு நடந்த போது அங்கிருந்து விரட்டப்பட்ட பீகார் பார்ப்பனர்களுக்கு அடைக்கலம் தந்து தங்கள் ராஜ்ஜியத்தில் முக்கிய பதவிகள் கொடுத்து வைத்துக் கொண்ட சோழ அரசர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகவே கல்கி இவ்வாறு எழுதியுள்ளார் என்கிறார் ஆய்வாளர் பொ.வேல்சாமி.

தற்கால தமிழ் சமூகத்தின் இலக்கிய மற்றும் வரலாற்று ஆய்வாளரான பொ.வேல்சாமி அவர்களோடு பேசிக் கொண்டு இருந்த போது, பொன்னியின் செல்வன் குறித்த பேச்சு வந்தது! அப்போது, அவர் கூறியவை எனக்கு சற்று அதிர்ச்சி ரகம்! ‘சமகால சமூக வரலாறு குறித்த புதிய கதவுகளை திறந்து விட்டன’ என்றும் சொல்லலாம்!

”கண்ணன், நான் சொல்ல வருவது என்னவென்றால், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மிக சுவாரஷ்யமான நாவல் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த எழுத்து நடையும், கற்பனை வளமும் நம்மை இனிமையான ஒரு வரலாற்று காலத்திற்கே சென்று வாழ்ந்த உணர்வை தரும். என்னுடைய கல்லூரி காலத்தில் நான் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு தஞ்சாவூர் கீழவாசல் சந்தையில் உள்ள என் கடையில் அமர்ந்தவாறு பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை  படிக்கத் தொடங்கினேன். அது மட்டும் தான் தெரியும். பின்னர் டீக்கடைக்காரர்களின் அடுப்பு பற்ற வைக்கும் சத்தமும், மீன் கடைக்காரர்களின் கூச்சலும் கேட்டுத்தான் ஆ ..,இதென்ன விடிந்துவிட்டதே.. என்ன நேரம்? எனப் பார்த்த போது, காலை ஐந்தரை மணியாகி இருந்ததை உணர்ந்தேன். கடையும் இரவு முழுக்க திறந்தபடி இருந்ததை அப்போது தான் உணர்ந்தேன்.

அன்று இரவு முழுவதும் என்னை ஆக்கிரமித்து தன்வயப்படுத்திய கல்கியின் பொன்னியின் செல்வனை மீண்டும் 30 ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு படிக்க நேர்ந்த போது, அதே வேகம், ஈர்ப்பு ஆகியவற்றை உணர முடிந்தாலும், அன்று என்னை பிரமிக்க வைத்த பொன்னியின் செல்வன் இன்று அச்சத்துடனும், கவனத்துடனும் அணுக வேண்டிய நூல்பிரதியாக உணர முடிகிறது. தேனில் விஷம் கலந்து கொடுப்பது போல கதைப் போக்கின் ஊடே பார்ப்பனியம், இந்துத்துவ சொல்லாடல்கள், வைதீகத்திற்கு மாற்று மதங்களாக பார்க்கப்பட்ட பெளத்த, சமண மதங்களின் மீதான அக்கிரமான அவதூறுகள், பார்ப்பன பெருமைகள், சனாதன தர்மத்தின் பார்வைகள், ஆணாதிக்க மனோபாவம் ஆகிய அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரே அடியில் வாசகர் நெஞ்சில் இறக்கி விடுகிறார் கல்கி!

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், இது வரையிலும் கல்கியை விமர்சிக்கும் பெரிய இலக்கியவாதிகள் கூட, ”கல்கியின் படைப்புகள் இலக்கிய தரத்தில் மிக சுமாரானவை, ஜனரஞ்சகம் மேலோங்கியவை” என்று தான் குற்றம் சாட்டினார்களே தவிர, இந்த கோணத்தில் சொல்லவே இல்லை.

கல்கியின் நூல்களை நாம் வியந்தும், மயங்கியும் வாசிப்பதைக் கடந்து ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என நான் கருதுகிறேன். ஜைன, பௌத்த மதங்கள் ஒரு காலத்தில் சாதிகளைக் கடந்து தமிழ் மக்களை ஒன்றாக இணைத்து வைத்த மதங்கள். அப்படி ஒரு இணைப்பு ஏற்பட்ட காலம்தான் தமிழகம் கலைகளிலும், வணிகத்திலும் தத்துவ சிந்தனைகளிலும் உயர்ந்தோங்கியிருந்தது என்று நாம் கருதுவதற்கான சான்றுகளும் உள்ளன. ஆனால், பின் வந்த காலங்களில் பக்தி இயக்கம் என்பது இந்த மக்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்லவில்லை என்பதையும் தமிழக வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது. ஆகவே பெளத்த, சமண மத துறவிகளை மொட்டைத் தலை முரடர்களாகவும், அயோக்கியவர்களாகவும் சித்தரிக்கும் கல்கியின் நோக்கம் இந்துவத்தை உயர்த்திச் சொல்வதற்காக சொல்லப்பட்ட கற்பிதங்களே!

பொன்னியின் செல்வன் நூலை கல்வெட்டுகள்,செப்பு பட்டயங்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து எழுதியதாகத் தான் கல்கி சொல்கிறார்! மாமன்னர் இராசராச சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் யார் என்பது அக்கால கல்வெட்டுகளில் பிராமணர்கள் என்பதாக தெளிவாக கூறப்பட்டு உள்ளது.தொல்லியல் துறை ஆவணங்களிலும் இவை உள்ளன (ARE- 557ஃ1920). அவர்கள் பெயர் சோமன், ரவிதாச பஞ்சவேர் பிரமாதிராயன், இரு முடிசோழ பிரமாதிராயன், மலையனூரான், இவர்கள் தம் மக்கள் என கூறப்பட்டு உள்ளன! இந்த அனைவருமே ஒரே பிராமணகுலத்தை சேர்ந்தவர்கள்! பிரமாதிராயன் என்பது அந்த காலத்தில் சோழர் படைப்பிரிவில் இருந்த பிராமணத் தளபதிகளுக்கான பட்டமாகும்.

ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் குறித்த தொல்லியல் துறை பதிவுகள்!

அப்படி இருக்க, ‘ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் பாண்டிய நாட்டில் இருந்து வந்த மறவர்கள்’ என்பதாக கூசாமல் பொய்யாகச் சித்தரித்து கல்கி எழுதி இருப்பது நியாயமல்ல. உண்மையான கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்றாலும், அவரது சுயசாதி அபிமானம் அந்த உண்மையை பல நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் கூட சொல்ல இடம் தரவில்லை.

இத்தனைக்கும் அன்றைய மனு நீதிப்படி கொலை செய்த பார்ப்பனர்களை கொல்ல முடியாது என்பதால், மாமன்னர் ராஜராஜன் இவர்களின் சொத்துக்களை மட்டும் பறிமுதல் செய்து நாட்டைவிட்டு வெளியேற்றுவதாகத் தான் வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் எழுதியுள்ளார்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே கல்வெட்டுகளை ஆராய்ந்தவர்கள் தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்று ஆய்வாளருமான சுப்பராயலுவும், ஜப்பானிய கல்வெட்டு தமிழ் அறிஞரும், ஆய்வாளருமான நொபோரு கரஷிமாவும்!  இவர்களின் நூல்களை படித்து தெளிந்த பிறகு தான் கல்கி எவ்வளவு மோசடியாக வரலாற்றை சித்தரித்து உள்ளார் என்று நான் புரிந்து கொண்டேன்’’ என்றார் பொ.வேல்சாமி!

ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்; கல்கியின் பொன்னியின் செல்வன் சுவையான வரலாற்று புதினம் தான்! ஆனால், அதில் புதைந்துள்ள நோக்கங்கள் ஆபத்தானவையாகும்! மணிரத்தினமும், ஜெயமோகனும் திரையில் என்ன செய்துள்ளார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

  • சாவித்திரி கண்ணன்

நன்றி

அறம் இணையஇதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here